ஆன்மிகம்
பக்தர்களுக்கு தலைமை குருக்கள் மாலை அணிவித்த காட்சி.

ரெகுநாதபுரம் வல்லபை ஐயப்பன் கோவிலில் பக்தர்கள் மாலை அணிந்து விரதம்

Published On 2021-11-19 06:12 GMT   |   Update On 2021-11-19 06:12 GMT
ஆண்டுதோறும் கார்த்திகை முதல்நாளில் ஐயப்ப பக்தர்களுக்கு கோவிலின் தலைமை குருசாமி மோகன் மாலை அணிவித்து ஆசீர்வதித்து வருவது வழக்கம்.
ராமநாதபுரம் மாவட்டம் ரெகுநாதபுரம் மெயின் சாலையில் கேரள சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு இணையாக பிரமாண்ட அளவில் வல்லபை ஐயப்பன் கோவில் அமைந்துள்ளது. மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த ஐயப்ப பக்தர்கள் இங்கு வழிபட்டு வருகின்றனர். ஆண்டுதோறும் கார்த்திகை முதல்நாளில் ஐயப்ப பக்தர்களுக்கு கோவிலின் தலைமை குருசாமி மோகன் மாலை அணிவித்து ஆசீர்வதித்து வருவது வழக்கம்.

அதன்படி நேற்று காலை கோவில் சன்னதி 4 மணி அளவில் திறக்கப்பட்டு அங்கு பல்வேறு சிறப்பு பூஜை நடத்தப்பட்டது. நேற்று முதல் நாள் கார்த்திகை தினம் முதல் 48 நாட்கள் தொடர்ந்து ஐயப்ப பக்தர்கள் பஜனை நடத்தி அன்னதான நிகழ்ச்சியும் நடைபெறும். ஆர்வத்துடன் அதிகமான பக்தர்கள் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு மாலை அணிவித்துக் கொண்டனர்.

இது குறித்து ரெகுநாதபுரம் வல்லபை கோவிலின் தலைமை குரு மோகன் கூறியதாவது:- கொரோனா கட்டுப்பாடுகளால் கடந்த 2 ஆண்டுகளாக ஐயப்ப பக்தர்கள் சபரிமலைக்கு சென்று வழிபட முடியாத நிலை இருந்து வந்தது. தற்போது அரசு அனுமதித்தபடி கட்டுப்பாடுகளுடன் கொரோனா தடுப்பூசி செலுத்தியவர்கள் மட்டுமே சபரிமலைக்கு சென்று வழிபட அழைத்துச் செல்லப்படுவார்கள்.

கடந்த காலங்களில் தமிழகத்தை சேர்ந்த பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஐயப்ப பக்தர்கள் சபரிமலைக்கு செல்ல முடியாமல் ரெகுநாதபுரத்தில் உள்ள வல்லபை ஐயப்பன் கோவிலில் காணிக்கை செலுத்தி வழிபட்டனர். எதிர்வரும் காலங்களில் வல்லபை ஐயப்பன் ஆலயத்தை மேலும் விரிவுபடுத்தி தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த ஐயப்ப பக்தர்கள் வழிபட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News