செய்திகள்
தலிபான்கள்

ஆப்கானிஸ்தானில் அமைச்சரவை அலுவலகத்தில் பெண் ஊழியர்களுக்கு அனுமதி மறுப்பு

Published On 2021-09-17 14:03 GMT   |   Update On 2021-09-17 14:03 GMT
பெண்களுக்கு சம உரிமைகள் வழங்க வேண்டும் என்று சர்வதேச நாடுகள் வற்புறுத்தி வருகின்றன. ஆனாலும் தலிபான்கள் அதை கண்டுகொள்ளாமல் செயல்பட்டு வருகிறார்கள்.
காபூல்:

ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகள் வெளியேறியதை அடுத்து கடந்த மாதம் 15-ந்தேதி தலிபான்கள் மீண்டும் ஆட்சியை கைப்பற்றினார்கள்.

ஏற்கனவே தலிபான்கள் ஆட்சியில் இருந்த காலத்தில் மிகவும் மூர்க்கத்தனமாக நடந்து கொண்டார்கள். தங்களுக்கு எதிராக செயல்படுபவர்களை கொன்று குவித்தார்கள்.

ஏராளமான சட்ட திட்டங்களை உருவாக்கி அதை மீறுபவர்களை சவுக்கால் அடித்தல், கை-கால்களை வெட்டுதல், கல்லால் அடித்து கொல்லுதல் அல்லது சுட்டுக் கொல்லுதல் போன்ற கொடூர தண்டனைகளை வழங்கினார்கள்.

இப்போது மீண்டும் ஆட்சிக்கு வந்துள்ள அவர்கள் கடந்த காலங்களை போலவே கொடூர தண்டனைகளை வழங்குவார்கள் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.

ஆனால் தலிபான்கள் கூறும்போது, “கடந்த காலங்கள் போல நாங்கள் செயல்பட மாட்டோம். மக்களுக்கு அனைத்து உரிமைகளும் வழங்கப்படும்” என்று தெரிவித்து இருந்தனர்.

கடந்த காலத்தில் பெண்கள் வீட்டுக்கு வெளியே பணிகளுக்கு செல்ல தடைவிதித்து இருந்தனர். இப்போது அதுபோன்ற தடைகள் எதுவும் இருக்காது என்றும் தலிபான்கள் கூறி இருந்தனர்.

ஆனால் பல இடங்களில் பெண்கள் பணிக்கு வருவதை தலிபான்கள் தடுத்து வருகின்றனர். வங்கிகள் மற்றும் சில அலுவலகங்களுக்கு வந்த பெண் ஊழியர்களை திருப்பி அனுப்பி விட்டனர்.

ஆப்கானிஸ்தான் பெண்கள் விவகார அமைச்சரவை அலுவலகத்தில் பெண் ஊழியர்கள் பலர் பணியாற்றி வந்தனர். இங்கே ஆண்கள் மட்டுமே பணியாற்ற வேண்டும். பெண்களுக்கு அனுமதி இல்லை என்று கூறி பெண் ஊழியர்களை திருப்பி அனுப்பி இருந்தனர்.

இவ்வாறு வேலைக்கு வந்திருந்த 4 பெண்கள் திருப்பி அனுப்பப்பட்டனர். அவர்கள் வீட்டுக்கு செல்ல மறுத்து அங்கேயே போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுபோன்றுதான் பல இடங்களிலும் பெண்களை வேலைக்கு வர விடாமல் தலிபான்கள் தடுத்து வருகின்றனர்.

பெண்களுக்கு சம உரிமைகள் வழங்க வேண்டும் என்று சர்வதேச நாடுகள் வற்புறுத்தி வருகின்றன. ஆனாலும் தலிபான்கள் அதை கண்டுகொள்ளாமல் செயல்பட்டு வருகிறார்கள்.

Tags:    

Similar News