ஆன்மிகம்
இருளப்பபுரம் பசுபதீஸ்வரர் பிரசன்ன பார்வதி கோவிலில் அன்னாபிஷேகம் நடந்த போது எடுத்த படம்.

குமரி சிவன் கோவில்களில் அன்னாபிஷேக விழா

Published On 2019-11-13 03:04 GMT   |   Update On 2019-11-13 03:04 GMT
குமரி மாவட்ட சிவன் கோவில்களில் நடந்த அன்னாபிஷேக விழாவில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
ஆண்டுதோறும் ஐப்பசி மாதம் பவுர்ணமி அன்று சிவனுக்கு அன்னாபிஷேகம் நடப்பது வழக்கம். அதாவது அன்னம்(சோறு) சமைத்து ஆற வைப்பார்கள். பின்னர் அந்த அன்னத்தால் சிவனுக்கு அபிஷேகம் செய்வார்கள். சிவனுக்கு நன்றி செலுத்தும் விதமாக இந்த நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் ஐப்பசி மாத பவுர்ணமியான நேற்று குமரி மாவட்டத்தில் உள்ள அனைத்து சிவன் கோவில்களிலும் அன்னாபிஷேக விழா சிறப்பாக நடந்தது. நாகர்கோவில் வடசேரியில் உள்ள காசி விஸ்வநாதர் கோவில், சோழ ராஜா கோவில், இருளப்பபுரத்தில் உள்ள பசுபதீஸ்வரர் பிரசன்ன பார்வதி கோவில், வடக்கு தாமரைகுளத்தில் உள்ள பெரிய பாண்டீஸ்வரர் உடையநயினார் கோவில், ஆகியவற்றில் அன்னாபிஷேக விழா நடைபெற்றது.

மேலும் ஆரல்வாய்மொழி மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலில் காலையில் சிறப்பு ஹோமங்கள், அபிஷேகங்கள், கலாபிஷேகம் நடந்தது. அதைத் தொடர்ந்து அன்னாபிஷேகம் நடத்தப்பட்டது. இதே போல் கன்னியாகுமரியில் உள்ள ஆயிரம் ஆண்டுகள் பழமைவாய்ந்த கோவிலான குகநாதீஸ்வரர் கோவிலில் காலையில் நிர்மால்ய தரிசனம், தீபாராதனை நடந்தன. பின்னர் 100 கிலோ அரிசியால் அன்னம் சமைக்கப்பட்டு சாமிக்கு அபிஷேகம் செய்யப்பட்டது.

ஒவ்வொரு கோவில்களிலும் நடைபெற்ற அன்னாபிஷேக விழாவில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதனால் கோவில்களில் கூட்டம் அலைமோதியது. 
Tags:    

Similar News