உள்ளூர் செய்திகள்
ஈரோடு சத்தி ரோட்டில் விற்பனைக்கு வந்துள்ள கரும்புகளை வாங்கிய பெண்கள்.

நாளை பொங்கல் பண்டிகை: கரும்பு, மஞ்சள், பானை, காய்கறி விற்பனை விறுவிறுப்பு

Published On 2022-01-13 08:12 GMT   |   Update On 2022-01-13 08:12 GMT
பொங்கல் பண்டிகை நாளை உற்சாகமாக கொண்டாடப்படவுள்ளது. இதனால் ஈரோடு மாவட்டத்தில் பொங்கல் பண்டிகைக்கு தேவையான பொருட்கள் சந்தைகளில் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டு அதன் விற்பனை தீவிரமாக நடைபெற்று வருகிறது.
ஈரோடு:

பொங்கல் பண்டிகை நாளை உற்சாகமாக கொண்டாடப்படவுள்ளது. இதனால் ஈரோடு மாவட்டத்தில் பொங்கல் பண்டிகைக்கு தேவையான பொருட்கள் சந்தைகளில் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டு அதன் விற்பனை  தீவிரமாக நடைபெற்று வருகிறது.
 
பொங்கல் வைப்பதற்காக புதுமண்பானை மற்றும் அடுப்பு பயன்படுத்துவது வழக்கம். இதற்காக ஈரோடு மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் தயாராகும் மண்பானைகள் கடந்த சில நாட்களாக விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன. மண்பானைகளுக்கு அழகிய கலைநயத்துடன் பலவேறு வர்ணங்கள் பூசப்பட்டு விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளது. இந்த மண் பானைகள் ரூ.250 முதல் ரூ. 600 வரை விற்பனை செய்யப்படுகிறது.

பன்னீர் செல்வம் பார்க், மணிக்கூண்டு பகுதி, வ.உ.சி மார்க்கெட் உள்பட பகுதிகளில் விற்பனைக்காக மண்பானைகள் குவித்து வைக்கப்பட்டுள்ளன. பெண்கள் ஆர்வத்துடன் மண்பானைகளை வாங்கி சென்று வருகின்றனர்.

இதேபோல் கரும்பு விற்பனையும் விறுவிறுப்பாக நடைபெற்றுவருகிறது. பல்வேறு இடங்களில் கட்டுகட்டாக விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன. 

ஈரோடு, நாமக்கல், கரூர் உள்ளிட்ட மாவட்டங்களில் உற்பத்தி செய்யப்பட்ட கரும்புகள் அறுவடை செய்யப்பட்டு ஈரோடு, கொல்லம்பாளையம், வீரப்பன்சத்திரம், சூரம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் விற்பனைக்காக வைக்கப்பட்டுள்ளன. ஒரு கரும்பு  ரூ.50 முதல் ரூ.100 வரை தரத்திற்கு ஏற்ப விற்கப்பட்டு வருகிறது.

இதேப்போல் புதுமண தம்பதிகளுக்கு கொடுக்கப்படும் பொங்கல் சீர் பொருட்களும் ஈரோட்டில் அதிக அளவில் விற்பனைக்கு வைக்கப்பட்டு உள்ளன. மஞ்சள் விற்பனையும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.


 
ஈரோடு வ.உ.சி. நேதாஜி காய்கறி மார்க்கெட்டில் இன்று அதிகாலை முதலே மக்கள் கூட்டம் அலைமோதியது. பொங்கல் பண்டிகையின்போது சூரிய பகவானுக்கு காய்கறி வைத்து வழிபடுவதால் இன்று காய்கறிகளை வாங்க மக்கள்கூட்டம் அதிகமாக இருந்தது. இதனால் இன்று காய்கறிகளின் விலை சற்று அதிகரித்து இருந்தது. 

இதேபோல உழவர் சந்தையிலும் காய்கறி வாங்க மக்கள் கூட்டம் வழக்கத்தை விட அதிகமாக இருந்தது. தற்போது கொரோனா காலக்கட்டம் என்பதால் மக்கள் அதிக அளவில் கூடாமல் இருக்க பல தடுப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. ஆனாலும் இன்று மக்கள் கூட்டம் அதிகமாகவே இருந்தது. சமூக இடைவெளியும் கேள்விக் குறியாகியுள்ளது.


 
அதேபோல் இன்று பஸ், ரெயில் நிலையங்களில் மக்கள் கூட்டம் அதிக மாகவே இருந்தது. ஈரோடு மாவட்டம் முழுவதும் உள்ள முக்கிய கடை வீதிகளில் மக்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போலீ சார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். ஈரோட்டில் பொங்கல் பண்டிகை களைகட்ட தொடங்கி விட்டது.

தமிழகம் முழுவதும் பொங்கல் பண்டிகையின் முதல் நாளான இன்று போகிப்பண்டிகை கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் பழையன கழித்து புதியன புகுத்தும் நாளாகக் கருதப்படுகிறது. இந்த நாளில் புதியனவற்றை வரவேற்கும் வகையில் வீட்டின் கூரையில் வேப்பிலை, ஆவாரம் பூ, பூளைப்பூ ஆகியவற்றை சேர்த்து காப்பு கட்டுவது வழக்கம்.

இதனையொட்டி ஈரோடு மாநகரில் உள்ள பன்னீர்செல்வம் பார்க், பெரிய மாரியம்மன் கோவில், மணிக்கூண்டு, மார்க்கெட், சூரம்பட்டி நால்ரோடு, சம்பத் நகர் உள்ளிட்ட பகுதிகளில் கிராமப்புறத்தில் இருந்து கொண்டுவரப்பட்ட வேப்பிலை, ஆவாரம் பூ, பூளைப்பூ ஆகியவற்றை காப்பு கட்ட ஏற்றவாறு சிறுசிறு கட்டுகளாகக் கட்டி வியாபாரிகள் ரோட்டோரம் விற்பனைக்கு வைத்திருந்தனர்.



இதில் ஒரு கட்டு ரூ.5-க்கும், 3 கட்டு ரூ.10 வரை விற்பனையானது. இதனை மக்கள் ஆர்வமுடன் வாங்கி சென்றனர். இதையடுத்து வீட்டின் மேற்கூரையில் வேப்பிலை, ஆவாரம் பூ, பூளைப்பூ ஆகியவற்றை சேர்த்து காப்பு கட்டினர்.

மேலும் பழைய பொருட்களை வீட்டு முன்பு போட்டு தீ வைத்து எரித்தனர். ஈரோடு மாவட்டத்தில் குறிப்பாக கிராமப்புறங்களில் இன்று போகிப்பண்டி கையையொட்டி மக்கள் பழைய பொருட்களை போட்டு எரித்தனர்.
Tags:    

Similar News