உலகம்
பைசர் நிறுவனம்

ஒமைக்ரானை கட்டுப்படுத்த மார்ச் மாதத்துக்குள் தடுப்பூசி- பைசர் நிறுவனம் அறிவிப்பு

Published On 2022-01-11 05:58 GMT   |   Update On 2022-01-11 05:58 GMT
ஒமைக்ரான் வைரசை கட்டுப்படுத்துவதற்கான தடுப்பூசி வருகிற மார்ச் மாதத்துக்குள் தயாராகி விடும் என்று பைசர் நிறுவனம் தெரிவித்துள்ளது.

நியூயார்க்:

கடந்த 2019-ம் ஆண்டு இறுதியில் சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் தற்போது வரை பெரும் பாதிப்பை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது. அந்த வைரஸ் மரபணு மாற்றம் அடைந்து உருமாறியது.

தென் ஆப்பிரிக்கா, இங்கிலாந்து, இந்தியா, நைஜீரியா ஆகிய நாடுகளில் உருமாறிய கொரோனா வைரஸ்களுக்கு ஆல்பா, பீட்டா, காமா, டெல்டா என்று பெயரிடப்பட்டன. இந்த உருமாறிய கொரோனா வைரஸ்களுக்கு எதிராக தற்போது பயன்பாட்டில் உள்ள தடுப்பு மருந்துகள் நல்ல பலன் அளிப்பதாக விஞ்ஞானிகள் தெரிவித்தனர்.

இந்த நிலையில் கடந்த நவம்பர் மாதம் தென் ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட புதிய வகை உருமாறிய கொரோனாவான ஒமைக்ரான் மற்ற உருமாறிய கொரோனா வைரஸ்களை விட மிகவும் வேகமாக பரவக் கூடியது என்று தெரிவிக்கப்பட்டது.


மேலும் தற்போது பயன்பாட்டில் உள்ள தடுப்பு மருந்துகள் ஒமைக்ரான் வைரசுக்கு எதிராக பலன் அளிக்காது என்றும் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து ஒமைக்ரான் வைரசை கட்டுப்படுத்த தடுப்பு மருந்தை உருவாக்கும் ஆய்வில் விஞ்ஞானிகள் ஈடுபட்டு வருகிறார்கள்.

இதில் கொரோனா தடுப்பு மருந்து உருவாக்கிய அமெரிக்காவின் பைசர் நிறுவனமும் ஒமைக்ரான் வைரசுக்கு எதிரான தடுப்பு மருந்தை உருவாக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறது.

இந்த நிலையில் ஒமைக்ரான் வைரசை கட்டுப்படுத்துவதற்கான தடுப்பூசி வருகிற மார்ச் மாதத்துக்குள் தயாராகி விடும் என்று பைசர் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இது குறித்து அந்த நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி ஆல்பர்ட் போர்லா கூறியதாவது:-

ஒமைக்ரான் வைரசுக்கு எதிரான தடுப்பூசி மார்ச் மாதத்தில் தயாராகி விடும். இது நமக்கு தேவைப்படுமா? அந்த தடுப்பூசி எப்படி பயன் படுத்தப்படும் என்பது எனக்கு தெரியவில்லை. தற்போதுள்ள இரண்டு டோஸ் தடுப்பூசி மற்றும் பூஸ்டர் டோஸ் ஆகியவை ஒமைக்ரானில் இருந்து கடுமையான உடல் பாதிப்புகளுக்கு நல்ல பாதுகாப்பை வழங்கி உள்ளன’ என்றார்.

அதைப்போல் மாடர்னா நிறுவன தலைமை நிர்வாக அதிகாரி ஸ்டீபன் பான்செல் கூறும்போது, ‘ ஒமைக்ரான் மற்றும் மற்ற உருமாறிய கொரோனாக்களுக்கு தீர்வு காணக்கூடிய ஒரு பூஸ்டர் தடுப்பூசியை உருவாக்கி வருகிறோம்.

உலகெங்கிலும் உள்ள பொது சுகாதார வல்லுனர்களுடன் நாங்கள் விவாதித்து வருகிறோம். ஒரு வைரசுக்கு நாம் முன்னால் முயற்சிக்க வேண்டும். வைரசுக்கு பின்னால் இருக்கக்கூடாது’ என்றார்.

இதையும் படியுங்கள்... மதுரையில் “கலைஞர் நூலகம்”- மு.க.ஸ்டாலின் இன்று அடிக்கல் நாட்டினார்

Tags:    

Similar News