செய்திகள்
ஓ பன்னீர்செல்வம்

மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுத்து ‘நீட்’ தேர்வு ரத்து என்ற அறிவிப்பை வெளியிட வேண்டும் - ஓ.பன்னீர்செல்வம்

Published On 2021-09-15 09:14 GMT   |   Update On 2021-09-15 10:38 GMT
மத்திய அரசுக்கு தேவையான அழுத்தம் கொடுத்து நீட் தேர்வு ரத்து என்ற அறிவிப்பினைச் செய்யவும், 12-ம் வகுப்பு மதிப்பெண்கள் அடிப்படையில் மருத்துவப்படிப்பில் மாணவர் சேர்க்கை அமையவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சென்னை:

அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

நீட் தேர்வு ரத்து என்பதற்கான சட்டப் போராட்டத்தை அரசு துவக்கிவிட்டதாகவும், கல்வியை மாநிலப்பட்டியலுக்கு திரும்பக் கொண்டு வர தி.மு.க.வும், அதன் நட்புக்குரிய சமூக நீதி இயக்கங்களும் இறுதி வரை போராடும் என்றும் முதல்-அமைச்சர் அறிவித்து இருப்பதை பார்க்கும்போது, இந்த பிரச்சினைகள் இப்போது முடிவுக்கு வராது என்பது சூசகமாகத் தெளிவுபடுத்தப்பட்டு இருக்கிறது.

ஆட்சிக்கு வந்தவுடன், அ.தி.மு.க. என்ன வழியை பின்பற்றியதோ அதே வழியைத்தான் தி.மு.க.வும் பின்பற்றி இருக்கிறது. அதாவது ஜனாதிபதியின் ஒப்புதலைப் பெறுவதற்காக தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் சட்டமுன்வடிவு நிறைவேற்றப்பட்டு இருக்கிறது.

இந்த வாதத்தை அ.தி.மு.க. முன்வைத்தால், இதற்காக குழுவை அமைத்து, அதன் பிறகு தான் சட்டமுன் வடிவினை நிறைவேற்றினோம் என்று தி.மு.க. கூறக்கூடும். ஆனால் இந்த குழுவிற்கு எந்த சட்ட அங்கீகாரமும் கிடையாது.

இது அரைத்த மாவையே அரைப்பதற்கு சமம். வெறும் சம்பிரதாயத்திற்காக இந்த சட்டமுன்வடிவு நிறைவேற்றப்பட்டு இருக்கிறது என்றே மக்கள் கருதுகிறார்கள்.

அடுத்தபடியாக, கல்வியை மாநிலப் பட்டியலுக்கு திரும்பக் கொண்டு வர தி.மு.க. நடவடிக்கை எடுக்கும் என்று முதல்-அமைச்சர் கூறி இருக்கிறார். 1996-ம் ஆண்டு முதல் 2013-ம் ஆண்டு வரை, நடுவில் 13 மாதங்கள் தவிர, கிட்டத்தட்ட 17 ஆண்டுகள் தி.மு.க.வின் தயவில்தான் மத்திய அரசுகளே இருந்தன.


அப்போதெல்லாம் மத்திய அரசுடன் இணக்கமாகப் பேசி, கல்வியை மாநிலப்பட்டியலுக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்காத தி.மு.க. இப்போது மத்திய அரசில் அங்கம் வகிக்காத சூழ்நிலையில், கல்வியை மாநில பட்டியலில் திரும்ப கொண்டு வர நடவடிக்கை எடுப்போம் என்று கூறுவது தும்பை விட்டு வாலைப்பிடிப்பதற்கு சமம்.

தற்போது தி.மு.க. கூட்டணிக்கு 38 மக்களவை உறுப்பினர்கள் உள்ளனர். அடுத்த ஆண்டு ஜனாதிபதி, துணை ஜனாதிபதி தேர்தல்கள் வர உள்ளன. இந்த சூழ்நிலையில் மத்திய அரசுக்கு தேவையான அழுத்தம் கொடுத்து நீட் தேர்வு ரத்து என்ற அறிவிப்பினைச் செய்யவும், 12-ம் வகுப்பு மதிப்பெண்கள் அடிப்படையில் மருத்துவப்படிப்பில் மாணவர் சேர்க்கை அமையவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

இதையும் படியுங்கள்...ஒரே நாளில் 1400 டால்பின்கள் கொன்று குவிப்பு... செந்நிறமாக காட்சியளித்த பாரோ கடல்

Tags:    

Similar News