செய்திகள்
ருத்ர தாண்டவமாடிய பொல்லார்டு

பொல்லார்டு ருத்ர தாண்டவம் - சென்னை அணியை வீழ்த்தி மும்பை கடைசி பந்தில் திரில் வெற்றி

Published On 2021-05-01 18:09 GMT   |   Update On 2021-05-01 18:09 GMT
பொல்லார்டு ருத்ர தாண்டவமாட கடைசி பந்தில் சென்னை அணியை வீழ்த்தி மும்பை அணி திரில் வெற்றி பெற்றது.
புதுடெல்லி:

ஐபிஎல் 2021 தொடரின் 27-வது லீக் ஆட்டம் டெல்லி அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெற்றது. இதில் மும்பை இந்தியன்ஸ்- சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின.

டாஸ்  வென்ற மும்பை அணி பந்துவீச்சை தேர்வு செய்ய, சென்னை அணி முதலில் பேட்டிங் செய்தது. அந்த அணியின் தொடக்க வீரர் கெய்க்வாட் 4 ரன்னில் ஆட்டமிழந்தார்.

மற்றொரு தொடக்க ஆட்டக்காரரான டூ பிளெசிசுடன் மொயீன் அலி ஜோடி சேர்ந்து அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

இருவரும் மும்பை பந்துவீச்சாளர்களை திணறடித்தனர். டூ பிளெசிஸ் 50 ரன்களும், மொயீன் அலி 58 ரன்களும் குவித்தனர். ரெய்னா 2 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தார்.

அதன்பின் இறங்கிய அம்பதி ராயுடு அதிரடியில் மிரட்டினார். பந்துகளை பவுண்டரி மற்றும் சிக்சர்களாக தெறிக்க விட்டார். அவருக்கு ரவீந்திர ஜடேஜா கம்பெனி கொடுக்க, ஸ்கோர் மளமளவென உயர்ந்தது. இந்த ஜோடியை மும்பை பவுலர்களால் கடைசி வரை பிரிக்க முடியவில்லை.



இறுதியில், சென்னை அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 218 ரன்கள் குவித்தது.

20 பந்துகளில் விரைவாக அரை சதம் கடந்த அம்பதி ராயுடு, மொத்தம் 27 பந்துகளை எதிர்கொண்டு 4 பவுண்டரி, 7 சிக்சர்களுடன் 72 ரன்கள் விளாசினார். ஜடேஜா 22 பந்துகளில் 2 பவுண்டரி உள்பட 22 ரன்கள் சேர்த்தார்.

இதையடுத்து, 219 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் மும்பை அணி களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களாக டி காக், ரோகித் சர்மா இறங்கினர். இருவரும் இணைந்து முதல் விக்கெட்டுக்கு 71 ரன்கள் சேர்த்தனர்.

ரோகித் சர்மா 35 ரன்னிலும், டி காக் 38 ரன்னிலும் அவுட்டாகினர். அடுத்து இறங்கிய சூர்யகுமார் யாதவ் 3 ரன்னில் ஆட்டமிழந்தார். அப்போது மும்பை அணி 3 விக்கெட் இழப்புக்கு 81 ரன்கள் எடுத்திருந்தது.

அடுத்து இறங்கிய குருணால் பாண்ட்யாவுடன், பொல்லார்டு ஜோடி சேர்ந்தார். பொல்லார்டு ஆரம்பம் முதலே ருத்ர தாண்டவம் ஆடினார். கிடைத்த பந்துகளை சிக்சர், பவுண்டரிகளாக விளாசினார். இதனால் அவர் 17 பந்துகளில் அரை சதம் கடந்தார். இந்த ஜோடி 49 பந்தில் 89 ரன்கள் சேர்த்தது. 17வது ஓவரில் குருணால் பாண்ட்யா 32 ரன்னில் அவுட்டனார்.

மும்பை அணி வெற்றி பெற கடைசி 2 ஓவரில் 31 ரன்கள் தேவைப்பட்டது. 19வது ஓவரில் சாம் கர்ரன் 15 ரன்கள் விட்டுக் கொடுத்து 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதனால் மும்பை வெற்றிபெற கடைசி ஓவரில் 16 ரன்கள் தேவைப்பட்டது.

இறுதியில், மும்பை அணி 20 ஓவரில் 219 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. பொல்லார்டு 34 பந்துகளில் 87 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். இது மும்பை அணி பெற்ற 4வது வெற்றி ஆகும்.

சென்னை சார்பில் சாம் கர்ரன் 3 விக்கெட் வீழ்த்தினார்.
Tags:    

Similar News