செய்திகள்
கோப்புபடம்

தனியார் மதுபான தொழிற்சாலை முன்பு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

Published On 2020-11-12 13:14 GMT   |   Update On 2020-11-12 13:14 GMT
மீண்டும் பணி வழங்கக்கோரி விழுப்புரத்தில் உள்ள தனியார் மதுபான தொழிற்சாலை முன்பு ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
விழுப்புரம்:

விழுப்புரம் வழுதரெட்டியில் தனியார் மதுபான தொழிற்சாலை உள்ளது. இந்த ஆலையில் பணியாற்றி வந்த ஊழியர்களில் 30 பேர், கடந்த சில மாதங்களாக ஊதிய உயர்வு, பணிநிரந்தரம், உற்பத்தி ஊக்கத்தொகை உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்தியதன் விளைவாக ஊதிய உயர்வு கோரிக்கை மட்டும் நிறைவேறியது. ஆனால் போராட்டத்தை முன்னின்று நடத்திய 30 பேரும் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

இதனால் அந்த ஊழியர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதோடு போதிய வருமானமின்றி தவித்து வருகின்றனர். எனவே தங்களுக்கு மீண்டும் பணி வழங்கக்கோரி அவர்கள் ஆலை நிர்வாகத்திடம் பலமுறை முறையிட்டனர். இருப்பினும் அவர்களுக்கு மீண்டும் பணி வழங்கப்படவில்லை. இதுபற்றி கடந்த வாரம் மாவட்ட கலெக்டர், போலீஸ் சூப்பிரண்டு ஆகியோரை நேரில் சந்தித்து கோரிக்கை மனு கொடுத்தனர். ஆனால் இதுநாள் வரையிலும் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

இந்நிலையில் ஆத்திரமடைந்த ஊழியர்கள் நேற்று காலை தனியார் மதுபான தொழிற்சாலைக்கு திரண்டு வந்து அங்குள்ள அலுவலக நுழைவுவாயில் முன்பு திடீரென ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது தங்களுக்கு மீண்டும் பணி வழங்கக்கோரி அவர்கள் கோஷம் எழுப்பினர்.

இதுகுறித்த தகவல் அறிந்ததும் விழுப்புரம் தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் விநாயகமுருகன், சப்-இன்ஸ்பெக்டர்கள் பிரகாஷ், மணிமாறன் ஆகியோர் விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்ட ஊழியர்களிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது ஆலை நிர்வாகத்திடம் பேசி உரிய நடவடிக்கை எடுப்பதாக போலீசார் உறுதியளித்தனர். இதனை ஏற்றுக்கொண்ட அவர்கள் அனைவரும் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.

Tags:    

Similar News