செய்திகள்
மக்காச்சோளப்பயிர்கள் சாய்ந்ததால் விவசாயிகள் கவலை

திருப்பூர், அவினாசி, பல்லடத்தில் பலத்த காற்றுடன் கொட்டித்தீர்த்த கனமழை

Published On 2021-04-21 07:41 GMT   |   Update On 2021-04-21 11:11 GMT
திருப்பூர், அவினாசி, பல்லடத்தில் கனமழை கொட்டித்தீர்த்தது. பல்லடத்தில் மக்காச்சோளப்பயிர்கள் சாய்ந்ததால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
திருப்பூர்:

திருப்பூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வெயில் வாட்டி வதைத்து வந்தது. இதன் காரணமாக பொதுமக்கள் கடும் சிரமத்தை சந்தித்தனர். இதற்கிடையே அவ்வப்போது திடீரென மழையும் பெய்து வருவதால் கோடை வெப்பம் தணிந்து குளிர்ச்சி நிலவுகிறது. இந்நிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவு திருப்பூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை கொட்டித்தீர்த்தது.

இந்த மழையின் காரணமாக திருப்பூரில் உள்ள பல்லடம் ரோடு, தாராபுரம் ரோடு, யூனியன் மில் ரோடு, ஊத்துக்குளி ரோடு, மங்கலம் ரோடு உள்ளிட்ட பகுதிகளில் மழைவெள்ளம் சாலைகளில் பெருக்கெடுத்து ஓடியது.

அவினாசி சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று முன்தினம் காலை முதல் மாலைவரை கடுமையான வெயில் காணப்பட்டது. பின்னர் இரவு 8 மணியளவில் வானில் கருமேகங்கள் சூழ்ந்தது. நள்ளிரவு 12.30 மணியக்கு இடி, மின்னலுடன் ஒரு மணிநேரம் கன மழை பெய்தது.

இடி, மின்னல்காரணமாக இரவு மின் துண்டிப்பு ஏற்பட்டது. மழை காரணமாக பல இடங்களில் ரோட்டில் பள்ளமான பகுதிகளில் மழைநீர் குட்டைபோல் தேங்கி நின்றது. இதனால் போக்குவரத்து இடையூறு ஏற்பட்டது.

பல்லடம் அருகே உள்ள, கணபதிபாளையம், நொச்சிபாளையம், அல்லாளபுரம், குப்பிச்சிபாளையம் உள்ளிட்ட பகுதிகளில் 500-க்கும் மேற்பட்ட ஏக்கரில், மக்காசோளம் பயிரிடப்பட்டுள்ளது. மக்காச்சோளப்பயிர்கள் நன்கு வளர்ந்து சில நாட்களில் அறுவடை செய்யும் நிலையில் இருந்தது.

இந்தநிலையில் பல்லடம் பகுதியில் நேற்று முன்தினம் இரவு இடி மின்னலுடன் மழை பெய்தது. காற்றும் பலமாக வீசியது. இதனால் சாகுபடி செய்யப்பட்டிருந்த பல ஏக்கர் நிலங்களிலும் மக்காச்சோளப்பயிர்கள் சாய்ந்து.விவசாயிகள் அறுவடை செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து மக்காச்சோளம் பயிரிட்ட விவசாயி ஒருவர் கூறியதாவது:-

ஒரு ஏக்கர் மக்காச்சோளம் சாகுபடிக்கு, உழவு, உரம், விதை, பூச்சி மருந்து என, 35 ஆயிரம் ரூபாய் வரை செலவாகி உள்ளது. கதிர்கள் இன்னும் 10,20 நாட்களில் அறுவடைக்கு தயாராகி இருந்தது. இந்த நிலையில் மழையால் மக்காச்சோளப்பயிர்கள் அனைத்தும் அடியோடு சாய்ந்தது. இந்த பயிர்களை கால்நடைகளுக்கு மட்டுமே உணவாக பயன்படுத்த முடியும். விவசாயத்தில் பெரிய லாபம் இல்லாத நிலையில், இங்குள்ள விவசாயிகள் கால்நடைகள் வளர்ப்பதையே முக்கிய தொழிலாகக் கொண்டுள்ளனர். இந்த நிலையில் மக்காச்சோளப் பயிர்கள் அறுவடை செய்ய முடியாத நிலையில் உள்ளது. இதனால் தீவனத் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளது.எனவே மக்காச்சோள ப்பயிர்கள் பயிரிட்டு பாதிக்கப்பட்டுள்ள அனைத்து விவசாயிகளுக்கும் அரசு உரிய நிவாரணம் வழங்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்நிலையில் மாவட்டம் முழுவதும் பெய்த மழை அளவு விவரம் வருமாறு:- திருப்பூர் வடக்கு 22 மி.மீட்டர், அவினாசி 32 மி.மீட்டர், பல்லடம் 37 மி.மீட்டர், ஊத்துக்குளி 10.3 மி.மீட்டர், காங்கேயம் 4 மி.மீட்டர், திருப்பூர் கலெக்டர் அலுவலக பகுதி 10 மி.மீட்டர், திருப்பூர் தெற்கு 16 மி.மீட்டர் என மொத்தம் மாவட்டத்தில் 131.60 மி.மீட்டர் மழைபதிவானது. இதன் சராசரி 8.21 மி.மீட்டர் ஆகும்.
Tags:    

Similar News