செய்திகள்
கல்வித்துறை

தனியார் பள்ளிகளுக்கு இனி 3 ஆண்டுகளுக்கு மட்டுமே அங்கீகாரம் - கல்வித்துறை உத்தரவு

Published On 2021-11-21 03:50 GMT   |   Update On 2021-11-21 03:50 GMT
தனியார் பள்ளிகளுக்கு வழங்கப்பட்டு வந்த நிரந்தர அங்கீகாரத்தை ரத்து செய்து, இனி 3 ஆண்டுகளுக்கு மட்டுமே அங்கீகாரம் வழங்க பள்ளிக்கல்வி துறை உத்தரவிட்டுள்ளது.
சென்னை:

தமிழக அரசின் பள்ளிக்கல்வி துறை முதன்மை செயலாளர் காகர்லா உஷா வெளியிட்டுள்ள அரசாணையில் கூறப்பட்டுள்ளதாவது:-

தமிழ்நாட்டில் உள்ள தனியார் பள்ளிகளுக்கு கட்டிடங்களின் உறுதித்தன்மை சான்று, நிரந்தர உள்கட்டமைப்பு சான்று, தடையில்லா சான்று ஆகியவற்றின் அடிப்படையில் நிரந்தர அங்கீகாரம் வழங்கப்பட்டு வந்தது. கடந்த 2004-ம் ஆண்டு ஜூலை 16-ந் தேதி கும்பகோணத்தில் உள்ள ஸ்ரீகிருஷ்ணா தொடக்கப்பள்ளியில் தீ விபத்து ஏற்பட்டு 94 குழந்தைகள் உயிரிழந்த விவகாரத்தையடுத்து, தனியார் பள்ளிகளுக்கு வழங்கப்பட்டு வந்த நிரந்தர அங்கீகாரத்தை ரத்து செய்ய அரசுக்கு, மெட்ரிக் பள்ளிகள் இயக்குனரகம் பரிந்துரைத்தது.

மெட்ரிக் பள்ளிகள் இயக்குனரகத்தின் பரிந்துரையை ஏற்று, 1994-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 2-ந்தேதி வழங்கப்பட்ட அரசாணையின்படி, தனியார் பள்ளிகளுக்கு வழங்கப்பட்டு வரும் நிரந்தர அங்கீகாரம் திரும்ப பெறப்படுகிறது.

மேலும் இனி அனைத்து தனியார் பள்ளிகளுக்கும் 3 ஆண்டு காலத்துக்கு அல்லது கட்டமைப்பு ஸ்திரத்தன்மை சான்றிதழ் அல்லது கட்டிட உரிமத்தில் குறிப்பிடப்பட்டுள்ள காலத்துக்கு மட்டுமே அங்கீகாரம் வழங்கப்படும். இதில் எது முந்தையதோ அதன்படி அவ்வப்போது புதுப்பிக்கப்படும்.

ஏற்கனவே 1994-ம் ஆண்டின் அரசாணையின்படி, நிரந்தர அங்கீகாரம் பெற்ற தனியார் பள்ளிகளின் அங்கீகாரம் தொடரும்.

அதே சமயம் அந்த பள்ளிகள் தமிழ்நாடு கட்டிடச் சட்டம் 1965-ன் கீழ் பள்ளிக் கட்டிடத்தை பொது கட்டிடமாக பயன்படுத்த அனுமதியளித்த சான்றிதழ், பள்ளி கட்டிடத்துக்கான கட்டமைப்பு உறுதித்தன்மை சான்றிதழ், உள்ளூர் சுகாதார அலுவலரால் வழங்கப்பட்ட சுகாதார சான்றிதழ், பள்ளி அமைந்துள்ள பகுதிகளில் உள்ள தீயணைப்பு மற்றும் மீட்பு நிலைய அதிகாரிகளிடம் இருந்து பெறப்படும் ஆட்சேபனை இல்லாத சான்றிதழ் ஆகியவற்றை சமர்பிக்க வேண்டும்.

சான்றிதழ்களை சமர்ப்பிக்க தவறினால் அந்த பள்ளிகளுக்கு வழங்கப்பட்ட நிரந்தர அங்கீகாரம் திரும்ப பெறப்படும்.

இவ்வாறு அரசாணையில் கூறப்பட்டுள்ளது.
Tags:    

Similar News