செய்திகள்
சலூன் கடையில் நூலகம் அமைத்த பொன் மாரியப்பன்

தூத்துக்குடி முடி திருத்தும் தொழிலாளியிடம் தமிழில் பேசிய பிரதமர் மோடி

Published On 2020-10-27 01:41 GMT   |   Update On 2020-10-27 01:41 GMT
தூத்துக்குடி மில்லர்புரத்தில் உள்ள முடி திருத்தும் தொழிலாளியிடம் ‘மனதின் குரல்’ நிகழ்ச்சி மூலமாக பிரதமர் மோடி தமிழில் பேசினார்.
தூத்துக்குடி:

தூத்துக்குடி மில்லர்புரத்தைச் சேர்ந்தவர் பொன்.மாரியப்பன். முடி திருத்தும் தொழிலாளியான இவர், தூத்துக்குடி மில்லர்புரத்தில் ஒரு சலூன் கடை தொடங்கினார். வாடிக்கையாளர்களுக்கு வாசிப்பு பழக்கத்தை ஏற்படுத்தும் வகையில், தனது சலூன் கடையில் சிறிய அளவில் நூலகத்தை அமைத்தார்.

மேலும் வாடிக்கையாளர்களிடம் நூலகத்தில் என்ன புத்தகம் படித்தீர்கள்?, அது உபயோகமாக இருந்ததா? என்பதை ஒரு குறிப்பேட்டில் பதிவிட அறிவுறுத்துகிறார். அதன்மூலம் நூலகத்தின் நிறை, குறைகளை அறிந்து கொண்டு, அதற்கு ஏற்ப நூலகத்தை விரிவுபடுத்தி வருகிறார்.

இந்த நிலையில் ‘மனதின் குரல்’ நிகழ்ச்சி மூலமாக நேற்று முன்தினம் நாட்டு மக்களிடையே பிரதமர் நரேந்திர மோடி உரையாடினார். அப்போது பொன்.மாரியப்பனிடமும் பிரதமர் பேசினார். தமிழில் பேசிய பிரதமர் மோடி, வணக்கம் நல்லா இருக்கீங்களா? என்று பொன்.மாரியப்பனிடம் கேட்டார். தொடர்ந்து முடிதிருத்தகத்தில் நூலகம் அமைக்கும் எண்ணம் எப்படி வந்தது?, உங்களுக்கு பிடித்த புத்தகம் என்ன? என்று தமிழிலேயே உரையாடினார்.

அதற்கு பதில் அளித்த பொன்.மாரியப்பன், நான் 8-ம் வகுப்பு வரை மட்டுமே படித்ததால், வாழ்க்கையை படிக்க நூலகம் அமைத்தேன். எனக்கு மிகவும் பிடித்த புத்தகம் திருக்குறள் என்று கூறினார். தொடர்ந்து பிரதமர் மோடி, பொன்.மாரியப்பனுக்கு வாழ்த்துகளை தெரிவித்து விடைபெற்றார்.

இதுகுறித்து பொன்.மாரியப்பன் கூறும்போது, “பிரதமர் மோடி எனக்கு வாழ்த்து தெரிவித்தது மிகுந்த உற்சாகத்தை தந்துள்ளது. இதன்மூலம் சலூன் கடையில் நூலகத்தை மேலும் சிறப்பாக செயல்படுத்த வேண்டும் என்ற ஆர்வத்தை அதிகரித்துள்ளது” என்று மகிழ்ச்சியுடன் கூறினார்.
Tags:    

Similar News