செய்திகள்
சென்னை அண்ணாசாலையில் உள்ள ஒரு வணிகவளாகம் வெறிச்சோடி கிடப்பதை படத்தில் காணலாம்.

கொரோனா கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்தன: சென்னையில் திரையரங்குகள், மால்களில் கூட்டம் குறைந்தது

Published On 2021-04-11 09:04 GMT   |   Update On 2021-04-11 09:04 GMT
கொரோனா அதிகரிப்பால் திரையரங்குகள், வணிக வளாகங்கள், மால்களில் 50 சதவீத இருக்கைகளை மட்டும் பயன்படுத்த வேண்டும் என்று விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் நேற்று முதல் அமலுக்கு வந்தது.
சென்னை:

இந்தியாவில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் கொரோனா ஊடுருவியது. பல உயிர்களை காவு வாங்கியது. கொரோனாவுடன் போராடி சிகிச்சை பெற்று பலர் உயிர் தப்பினர். கொரோனாவின் கொட்டத்தை அடக்க ‘கோவேக்சின்’, ‘கோவிஷீல்டு’ ஆகிய 2 தடுப்பூசிகள் இந்தியாவில் தயாரிக்கப்பட்டது.

எனினும் கொரோனாவின் வீரியம் குறையவில்லை. தற்போது 2-வது அலை வீச தொடங்கி உள்ளது. தமிழ்நாட்டில் கொரோனா மீண்டும் வேகம் எடுக்க தொடங்கி உள்ளது. இதே நிலை நீடித்தால் கொரோனாவின் கூடாரமாக தமிழ்நாடு மாறி விடும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தமிழக அரசு மீண்டும் கையில் எடுத்துள்ளது.

அதன்படி திரையரங்குகள், வணிக வளாகங்கள், மால்களில் 50 சதவீத இருக்கைகளை மட்டும் பயன்படுத்த வேண்டும் என்று விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் நேற்று முதல் அமலுக்கு வந்தது.

அரசின் உத்தரவை ஏற்று திரையரங்குகளில் இருக்கை எண்கள் மாற்றி அமைக்கப்பட்டது. இந்தநிலையில் திரையரங்குகள், வணிக வளாகங்கள், மால்களில் அரசு உத்தரவு முறையாக கடைப்பிடிக்கப்படுகிறதா? என்பதை மாநகராட்சி அதிகாரிகளும், போலீசாரும் இணைந்து ஆய்வு செய்தனர்.

அப்போது முககவசம் அணியாமலும், சமூக இடைவெளியை கடைபிடிக்காமலும் அலட்சியமாக இருந்தவர்களிடம் அபராதம் வசூலிக்கப்பட்டது. இந்த அபராத அதிரடி நடவடிக்கை தொடரும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

அபராத நடவடிக்கைக்கு பயந்து பலரும் முககவசம் அணிந்து வந்திருந்ததையும், சமூக இடைவெளியை முறையாக கடைபிடித்ததையும் காண முடிந்தது. அதே நேரத்தில் கட்டுப்பாடுகள் காரணமாக திரையரங்குகள், மால்களில் வழக்கமான உற்சாகம் இல்லை. குறைவான பேர்களே வந்து சென்றனர். இதுகுறித்து திரையரங்கு மேலாளர்கள் கூறும்போது, ‘கொரோனா கட்டுப்பாட்டால் திரையரங்குக்கு வரும் பொதுமக்களின் எண்ணிக்கை வெகுவாக குறைந்தது. 5 காட்சிகள் ஓடும் திரையங்குகளில் 3 முதல் 4 காட்சிகளே ஓடுகின்றன. மேலும் 50 சதவீதத்துக்கும் குறைவானவர்களே திரையரங்குக்கு வருகை தருகின்றனர்,’ என்றனர்.

மால்களில் உள்ள கடை உரிமையாளர்கள் கூறும்போது, ‘கொரோனா பரவல் எதிரொலியால் வாடிக்கையாளர்கள் அதிகளவில் வருவதில்லை. வியாபாரமும் மந்தமாக உள்ளது,’ என்றனர்.

Tags:    

Similar News