ஆன்மிகம்
திருநள்ளாறு கோவில்

திருநள்ளாறு: சனிப்பெயர்ச்சியில் இருந்து 48 நாட்களுக்கு சனீஸ்வரரை தரிசனம் செய்யலாம்

Published On 2020-12-17 09:18 GMT   |   Update On 2020-12-17 09:18 GMT
பிரசித்தி பெற்ற திருநள்ளாறு சனீஸ்வரர் கோவிலில் சனிப்பெயர்ச்சி முதல் தொடந்து 48 நாட்களுக்கு சனீஸ்வரரை தரிசனம் செய்யலாம் என மாவட்ட கலெக்டர் அர்ஜூன் சர்மா அறிவித்துள்ளார்.
புதுச்சேரி மாநிலம் காரைக்கால் மாவட்டம் திருநள்ளாறில் பிரசித்தி பெற்ற சனீஸ்வரர் கோவில் அமைந்து உள்ளது. இந்த கோவிலில் சனிபகவான் தனி சன்னதி கொண்டு அருள்பாலித்து வருகிறார். இந்த கோவிலில் சனிக்கிழமைதோறும் ஆயிரக்கணக்கான பக்தர்களும், சனிப்பெயர்ச்சியின்போது லட்சக்கணக்கான பக்தர்களும் வந்து சாமி தரிசனம் செய்வது வழக்கம்.

2½ ஆண்டுகளுக்கு ஒருமுறை வாக்கிய பஞ்சாங்கப்படி சனிப்பெயர்ச்சி விழா இந்த கோவிலில் சிறப்பாக நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு வருகிற 27-ந் தேதி(ஞாயிற்றுக்கிழமை) காலை 5.22 மணிக்கு சனிப்பெயர்ச்சி விழா நடைபெறவுள்ளது. அதுசமயம், சனிபகவான் தனுசு ராசியில் இருந்து மகர ராசிக்கு பிரவேசிக்கிறார். இதையே சனிப்பெயர்ச்சி என்கிறோம்.

சனிப்பெயர்ச்சியன்று திரளான பக்தர்கள் இந்த கோவிலுக்கு வருகை தருவது வழக்கம். இந்த ஆண்டு கொரோனா காலம் என்பதால் பக்தர்களின் நலன் கருதி கோவில் நிர்வாகம் பக்தர்கள் கோவிலுக்கு வர ஆன்லைன் முன்பதிவு உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இதனால் பக்தர்களின் கூட்டம் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. இந்த நிலையில், காரைக்கால் மாவட்ட கலெக்டரும், திருநள்ளாறு சனீஸ்வரர் கோவில் தனி அதிகாரியுமான அர்ஜுன் சர்மா வெளியிட்டுள்ள ஒரு செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

திருநள்ளாறு சனீஸ்வரர் கோவிலில் 2½ வருடங்களுக்கு ஒரு முறை நடைபெறும் சனிப்பெயர்ச்சி விழா வருகிற 27-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) 5.22 மணிக்கு நடைபெற உள்ளது. அன்றைய தினம் கோவில் வளாகத்தில் சமூக இடைவெளியை அமல்படுத்தும்போது சில பக்தர்கள் சிரமத்துக்கு ஆளாக நேரிடும்.

எனவே பக்தர்களின் சிரமங்களை தவிர்க்க, சனிப்பெயர்ச்சி நாள் மட்டும் அல்லாது அன்றைய தேதியில் இருந்து, ஒரு மண்டலத்துக்கு (அடுத்த 48 நாட்கள்) இக்கோவிலில் சனீஸ்வரரை தரிசனம் செய்யலாம். அந்த தரிசனம் சனிப்பெயர்ச்சி அன்று கிடைக்கும் பலனை பெற்றுத்தரும்.

சனிப்பெயர்ச்சி அன்று பக்தர்கள் தரிசனம் செய்ய மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள். சிறப்பு அர்ச்சனை, பூஜைகள் எதுவும் செய்யப்பட மாட்டாது. கோவிலுக்குள் நுழையும் அனைத்து பக்தர்களும் கோவில் நுழைவு வாயிலில் உடல் வெப்பநிலை சோதனைக்கு உட்படுத்தப்படுவார்கள். 10 வயதிற்குட்பட்ட குழந்தைகள் மற்றும் 65 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள் மற்றும் உடல்நலக்குறைவு உள்ளவர்கள் கோவிலில் தரிசனத்தை தவிர்க்க அறிவுறுத்தப்படுகிறார்கள்.

மேலும் சனிப்பெயர்ச்சி நாள் மற்றும் அதற்கு அடுத்து வரும் ஒவ்வொரு சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் பக்தர்கள் இலவச தரிசனம், சிறப்பு தரிசனம், கட்டண தரிசனம் செய்ய தேவஸ்தான இணையதளத்தில் (ஆன்லைன் முகவரி (www.thirunallarutemple.org) முன்பதிவு செய்வது மிக அவசியம் ஆகும்.

இந்த சனிப்பெயர்ச்சி விழாவின்போது வருகை தரும் பக்தர்கள் பாதுகாப்பான மற்றும் மகிழ்ச்சியான தரிசனத்திற்காக காரைக்கால் மாவட்ட நிர்வாகம், பேரிடர் மேலாண்மை ஆணையம் அறிவுறுத்தும் ஆலோசனைகள், வழிகாட்டல்கள், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பக்தர்கள் அனைவரும் அவசியம் பின்பற்றி ஒத்துழைப்பு வழங்க வேண்டுகிறோம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Tags:    

Similar News