செய்திகள்
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

700 ஆயுள் கைதிகளை விடுதலை செய்ய நடவடிக்கை- சட்டசபையில் முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு

Published On 2021-09-13 09:56 GMT   |   Update On 2021-09-13 11:22 GMT
தி.மு.க. ஆட்சியில் இருந்த போதெல்லாம் காவலர்கள் நலனில் சிறப்பு கவனம் செலுத்தப்பட்டுள்ளது. 1969-ம் ஆண்டில் தி.முக. ஆட்சியில்தான் முதல் ஆணையம் அமைக்கப்பட்டது.

சென்னை:

காவல் துறை மானிய கோரிக்கையின் மீதான விவாதத்திற்கு பதில் அளித்து சட்டசபையில் முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார்.

தமிழகத்தில் நடைபெறும் எங்கள் ஆட்சியை அனைத்து பத்திரிகைகளும் பாராட்டி வருகின்றன. நாங்கள் ஆட்சிக்கு வந்த பிறகு வன்முறை இல்லை, சாதிய மோதல்கள் இல்லை, துப்பாக்கிச்சூடு இல்லை. அமைதியாக மக்கள் வாழ அடித்தளம் அமைத்துள்ளோம்.

கொரோனா காலத்தில் காவல் துறையினர் விடுப்பு இன்றி பணியாற்றினார்கள். அவர்களது பணிக்கு ஈடு இணை ஏதுமில்லை. அதனை கருத்தில் கொண்டு காவலர்களுக்கு தலா ரூ.5 ஆயிரம் நிவாரணம் வழங்கப்பட்டது.

காவலர்கள் நலன் கருதி பல்வேறு அறிவிப்புகளை நான் ஏற்கனவே வெளியிட்டுள்ளேன். 9 ஆயிரத்து 28 நேரடி சப்-இன்ஸ்பெக்டர்களுக்கு நியமன ஆணை வழங்கப்பட்டுள்ளது.

100 நாட்களில் மனுக்களுக்கு தீர்வு காணும் திட்டத்தில் உள்துறை மீது அளிக்கப்பட்ட 1,498 மனுக்களுக்கு தீர்வு கண்டுள்ளோம்.

சிறையில் நீண்ட நாட்களாக இருக்கும் கைதிகளின் நலன் கருதி செப்டம்பர் 15-ந் தேதி அண்ணா பிறந்தநாளன்று 700 ஆயுள் கைதிகளை விடுதலை செய்ய முடிவு எடுத்துள்ளோம்.

 


தி.மு.க. ஆட்சியில் இருந்த போதெல்லாம் காவலர்கள் நலனில் சிறப்பு கவனம் செலுத்தப்பட்டுள்ளது. 1969-ம் ஆண்டில் தி.முக. ஆட்சியில்தான் முதல் ஆணையம் அமைக்கப்பட்டது.

அதன் பிறகு 1989, 2006-ம் ஆண்டுகளிலும் ஆணையங்கள் அமைக்கப்பட்டன. இந்த 3 ஆணையங்களும் அளித்த பரிந்துரைகளின் மீது காவலர்கள் நலனுக்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. மீண்டும் ஒரு காவல் ஆணையம் விரைவில் அமைக்கப்படும்.

8 வழிச்சாலை மற்றும் குடியுரிமை சட்ட மசோதாவுக்கு எதிராக நடந்த போராட்டங்கள் உள்பட அ.தி.மு.க. ஆட்சியில் நடைபெற்ற போராட்டங்கள் மீது போடப்பட்ட வழக்குகள் அனைத்தும் வாபஸ் பெறப்பட்டுள்ளது.

ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில் போடப்பட்ட 36 வழக்குகளும் வாபஸ் பெறப்பட்டுள்ளது. ஸ்டெர்லைட் ஆலை தொடர்பான விசாரணை ஆணையத்தின் அறிக்கை பெறப்பட்டுள்ளது. இறுதி அறிக்கையை விரைவில் தாக்கல் செய்ய அறிவுறுத்தி உள்ளோம்.

ஜெயலலிதா மரண வழக்கு தொடர்பான ஆறுமுகசாமி விசாரணை ஆணையமும் விரைவில் விசாரணையை முடிக்க வேண்டும் என்று அறிவுறுத்தி உள்ளோம். லஞ்ச ஒழிப்பு துறையில் அளிக்கப்படும் புகார்களின் அடிப்படையில் விசாரணை தீவிரமாக நடைபெற்று வருகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

இதையும் படியுங்கள்... நீட் தேர்வுக்கு விலக்கு கோரும் மசோதா நிறைவேறியது -பாஜக வெளிநடப்பு

Tags:    

Similar News