ஆன்மிகம்
கோவிலின் வடக்கு ரதவீதி சாலையில் தடுப்பு கம்புகள் கட்டப்பட்டு இருப்பதை படத்தில் காணலாம்.

தை அமாவாசை: ராமேசுவரம் கோவிலில் நாளை பகல் முழுவதும் நடை திறந்திருக்கும்

Published On 2021-02-10 04:00 GMT   |   Update On 2021-02-10 04:00 GMT
தை அமாவாசையை முன்னிட்டு ராமேசுவரம் கோவிலில் நாளை பகல் முழுவதும் நடை திறந்திருக்கும் என்பதால் சுமார் ஒரு லட்சம் பக்தர்கள் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அகில இந்திய புண்ணியத் தலங்களில் ஒன்றாக விளங்கும் ராமேசுவரம் ராமநாதசாமி கோவிலில் வழக்கமாக தை மற்றும் ஆடி அமாவாசை, புரட்டாசி மகாளய அமாவாசை நாட்களில் வழக்கத்தை விட பக்தர்களின் கூட்டம் பலமடங்கு அதிகமாக இருப்பது வழக்கம்.

இந்தநிலையில் இந்த ஆண்டின் தை அமாவாசை ஆனது நாளை (வியாழக்கிழமை) வருகின்றது. கடந்த மார்ச் 23-ந் தேதி முதல் கொரோனா வைரஸ் பரவல் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ராமேசுவரம் கோவிலுக்குள் பக்தர்கள் செல்ல தடை விதிக்கப்பட்டதோடு அக்னிதீர்த்த கடல் மற்றும் 22 தீர்த்த கடலில் புனித நீராடும் தடை விதிக்கப்பட்டிருந்தது. இதனால்கடந்த ஆடி அமாவாசை மற்றும் புரட்டாசி மாத மகாளய அமாவாசை நாட்களிலும் ராமேசுவரம் கோவிலுக்கு பக்தர்கள் வருவதற்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. ஆடி மற்றும் புரட்டாசி மகாளய அமாவாசை பக்தர்கள் வர முடியாத காரணத்தால் பக்தர்கள் மிகுந்த ஏமாற்றம் அடைந்தனர்.

நாளை தை அமாவாசை தினத்தில் இதுவரை இல்லாத அளவிற்கு ராமேசுவரம் கோவிலில் நாளை பக்தர்களின் கூட்டம் சுமார் ஒரு லட்சத்திற்கும் மிக அதிகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. இவ்வாறு கோவிலுக்கு வரக்கூடிய பக்தர்கள் அக்னி தீர்த்த கடலில் புனித நீராடி கடற்கரையில் அமர்ந்து இறந்து போன முன்னோர்களின் ஆத்மா சாந்தி அடைய திதி தர்ப்பண பூஜை செய்த பின்னர் கோவிலில் உள்ள தீர்த்தங்களில் நீராடி விட்டு சாமி தரிசனம் செய்வது வழக்கம். பக்தர்களின் கூட்டம் நாளை மிக அதிகமாக இருக்கும் என்பதால் கூட்ட நெரிசலை கட்டுப்படுத்தும் விதமாக ராமேசுவரம் கோவிலின் முதல் பிரகாரம், இரண்டாம் பிரகாரம் மற்றும் பிரசித்தி பெற்ற மூன்றாம் பிரகாரத்தில் தடுப்பு கம்புகள் அமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றது.

இதேபோல் கோவிலின் கிழக்கு ரத வீதியிலிருந்து தீர்த்தங்களில் நீராட செல்லும் வடக்கு கோபுர ரதவீதி சாலையிலும், தரிசனம் செய்ய செல்லும் பாதையான கிழக்கு ரதவீதி சாலையிலிருந்து தெற்கு கோபுர ரதவீதி சாலை வரையிலும் தடுப்பு கம்புகள் அமைக்கும் பணியும் நடைபெற்று வருகின்றது.

அதேபோல் தை அமாவாசையான நாளை ராமேசுவரம் கோவிலில் காலை 7 மணியளவில் சாமி அம்பாள் தங்க ரிஷப வாகனத்திலும், வாரி வழங்கும் நிகழ்ச்சியும் நடைபெறுகின்றன.

மேலும் வழக்கமாக காலை 5 மணிக்கு கோவில் திறக்கப்பட்டு பகல் ஒரு மணி அளவில் சாத்தப்பட்டு மீண்டும் 3 மணிக்கு திறக்கப்படுவது வழக்கம். ஆனால் நாளை தை அமாவாசை ஆக இருப்பதால் அதிகாலை 2.30 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு 3.30 முதல் 4.30 மணி வரை ஸ்படிக லிங்க தரிசனமும் தொடர்ந்து வழக்கமான பூஜை நடைபெறும் எனவும், நாளை அதிகாலை 2.30 மணிக்கு திறக்கப்படும் நடையானது பகல் முழுவதும் திறக்கப்பட்டு இரவு 9 மணிக்கு அடைக்கப்படும் என்றும் கோவில் நிர்வாகத்தால் அறிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News