செய்திகள்
வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ள அரசு கல்லூரியில் தடுப்புகள் அமைக்கும் பணிகள் தீவிரம்

புதுவை மாநிலத்தில் வாக்கு எண்ணிக்கைக்கான ஏற்பாடுகள் தீவிரம்

Published On 2021-04-30 03:54 GMT   |   Update On 2021-04-30 03:54 GMT
புதுவை மாநிலத்தில் வாக்கு எண்ணும் மையத்தில் தடுப்பு கட்டைகள் அமைக்கப்பட்டுள்ளது. வாக்கு எண்ணிக்கைக்கான மேஜைகள் போடப்பட்டு தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.
புதுச்சேரி:

புதுச்சேரி சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு கடந்த மாதம் 6-ந்தேதி நடந்தது. வாக்குப்பதிவு முடிந்ததும் வாக்குப்பதிவு எந்திரங்கள் பலத்த பாதுகாப்புடன் எடுத்துச் செல்லப்பட்டு லாஸ்பேட்டை தாகூர் கலைக்கல்லூரி, அரசு பெண்கள் பாலிடெக்னிக் கல்லூரி, மோதிலால் நேரு பாலிடெக்னிக் கல்லூரி, காரைக்கால் அறிஞர் அண்ணா கலைக்கல்லூரி மற்றும் மாகி, ஏனாம் பகுதிகளில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன.

வாக்குப்பதிவு எந்திரங்களுக்கு 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மேலும் கண்காணிப்பு கேமராமூலம் கண்காணிக்கப்படுகிறது.

இதற்கிடையே நாளை மறுதினம் (ஞாயிற்றுக்கிழமை) வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகளில் தேர்தல் துறை தீவிரமாக ஈடுபட்டுள்ளது.

வாக்கு எண்ணும் மையத்தில் தடுப்பு கட்டைகள் அமைக்கப்பட்டுள்ளது. வாக்கு எண்ணிக்கைக்கான மேஜைகள் போடப்பட்டு தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. பொதுமக்கள் கூட்டம் கூடாதவாறு வாக்கு எண்ணிக்கை மையங்களை சுற்றிலும் ஆங்காங்கே தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன. வேட்பாளர்கள், முகவர்கள், அலுவலர்கள் ஆகியோர் தங்களது வாகனங்களை நிறுத்த தனித்தனி இடங்களும் ஒதுக்கப்பட்டுள்ளன.

புதுச்சேரி மாநிலத்தில் 6 மையங்களில் வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது. அதன்படி புதுச்சேரி லாஸ்பேட்டையில் உள்ள அரசு பெண்கள் பாலிடெக்னிக் கல்லூரி, மோதிலால் நேரு பாலிடெக்னிக் கல்லூரி, தாகூர் கலைக்கல்லூரி ஆகிய 3 இடங்களிலும், காரைக்கால் அறிஞர் அண்ணா கலைக்கல்லூரி, மாகி மகாத்மா காந்தி அரசு மேல்நிலைப்பள்ளி மற்றும் ஏனாமில் மினி சிவில் ஸ்டேஷன் ஆகிய இடங்களில் வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது.

கொரோனா பரவல் அச்சம் காரணமாக தேர்தல் ஆணைய அறிவுறுத்தலின்படி அனைத்து வேட்பாளர்கள், முகவர்கள், வாக்கு எண்ணிக்கை மையங்களில் பணிபுரியும் அரசு அதிகாரிகள் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது. புதுச்சேரியில் ஆரம்ப சுகாதார நிலையங்கள் உள்பட 8 இடங்களில் இந்த சிறப்பு பரிசோதனை முகாம் நடந்தது. மொத்தம் 3 ஆயிரத்து 27 பேருக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில், 19 அரசு ஊழியர்கள், 84 முகவர்கள் என 103 பேருக்கு தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News