செய்திகள்
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு கரூரில் விவசாயிகள் பாராட்டு விழா

Published On 2021-02-19 07:44 GMT   |   Update On 2021-02-19 07:44 GMT
கூட்டுறவு கடன்களை தள்ளுபடி செய்த முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு விவசாயிகள் சார்பில் வருகிற 21-ந்தேதி கரூர் தண்ணீர்பந்தல்பாளையத்தில் பாராட்டு விழா நடக்கிறது.
கரூர்:

அ.தி.மு.க. இணை ஒருங்கிணைப்பாளரும், முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமி வருகிற 21-ந்தேதி புதுக்கோட்டை மற்றும் கரூர் மாவட்டங்களில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். இதில் அவர் அரசு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி தேர்தல் பிரசாரம் மேற்கொள்கிறார்.

காலை 10 மணிக்கு விவசாயிகளின் நீண்ட நாள் கோரிக்கையான காவிரி- வைகை-குண்டாறு இணைப்புத்திட்டத்திற்கு புதுக்கோட்டை மாவட்டம் குன்னத்தூரில் முதல்வர் பழனிசாமி அடிக்கல் நாட்டுகிறார்.

பின்னர் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் அவர் பிற்பகல் 3 மணியளவில் கரூர் மாவட்டத்திற்கு வருகிறார். இதையடுத்து கரூர் லைட் ஹவுஸ் கார்னரில் அமைக்கப்பட்டுள்ள மறைந்த முதல்வர் ஜெயலலிதா மற்றும் காந்தி சிலைகளை முதல்வர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்து மரியாதை செலுத்துகிறார்.

அதைத்தொடர்ந்து கரூர் மனோகரா கார்னர் பகுதியில் பொதுமக்கள் மத்தியில் தேர்தல் பிரசாரம் மேற்கொள்கிறார். பின்னர் வெங்கமேடு பஸ் நிறுத்தம் பகுதியில் பொதுமக்களின் வரவேற்பை ஏற்றுக்கொள்கிறார். அங்கிருந்து நேராக கரூர்-வாங்கல் சாலையில் உள்ள தண்ணீர்பந்தல்பாளையத்தில் கரூர் மாவட்ட அனைத்து விவசாயிகள் சங்கம் மற்றும் விவசாயிகள் நடத்தும் உழவன் திருவிழா மற்றும் விவசாயிகள் மாநாட்டில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பங்கேற்கிறார்.

இந்த நிகழ்ச்சியில் விவசாயிகளின் கண்காட்சி, கலை நிகழ்ச்சிகள் இடம் பெறுகிறது. பின்னர் காவிரி டெல்டாவை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்ததற்கும், சமீபத்தில் கூட்டுறவு சங்கங்களில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் ரூ.12,110 கோடியை ரத்து செய்ததற்கும், விவசாய பம்பு செட்டுகளுக்கு 24 மணி நேரம் மும்முனை மின்சாரம் வழங்கியதற்கும், குடிமராமத்து திட்டம் மூலம் அனைத்து ஏரி, குளங்கள், வாய்க்கால்கள் தூர் வாரியதற்கும் நன்றி தெரிவித்து பாராட்டு விழா நடக்கிறது.

விழாவிற்கு புகளூர் வாய்க்கால் மற்றும் பாப்புலர் முதலியார் வாய்க்கால் பாசன விவசாயிகள் சங்கத் தலைவர் நடராஜன் தலைமை தாங்குகிறார். வாங்கல் மற்றும் நெரூர் வாய்க்கால் பாசன விவசாயிகள் சங்க தலைவர் முத்துக்குமாரசாமி வரவேற்று பேசுகிறார்.

இதில் தமிழக மின்சாரம் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் பி.தங்கமணி, தமிழக போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஆகியோர் முன்னிலை வைக்கிறார்கள். கீதா மணிவண்ணன் எம்.எல்.ஏ., முத்தனூர்கவுண்டன் புதூர் காவிரி நதிநீர் பாசன விவசாயிகள் சங்க தலைவர் முன்னாள் எம்.எல்.ஏ. வடிவேல், ஓய்வுபெற்ற மேற்கு மண்டல ஐ.ஜி. பாரி, கரூர் மாவட்ட ஆத்துப்பாளையம் மற்றும் நொய்யல் பாசன விவசாயிகள் சங்க தலைவர் முன்னாள் எம்.எல்.ஏ. மலையப்பசாமி ஆகியோர் வாழ்த்தி பேசுகிறார்கள்.

இதையடுத்து முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ஏற்புரை நிகழ்த்துகிறார். முடிவில் நொய்யல் கால்வாய் பாசன விவசாயிகள் நலச்சங்க தலைவர் எம்.பி.நடேசன் நன்றி கூறுகிறார்.

இந்த நிகழ்ச்சிகளுக்குப் பின்னர் முதல்வர் எடப்பாடி பழனிசாமி நாமக்கல் மாவட்டம் மோகனூர் வழியாக சொந்த ஊரான சேலம் எடப்பாடி சிலுவம்பாளையம் புறப்பட்டு செல்கிறார். முதல்வர் வருகையையொட்டி மாவட்ட செயலாளர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தலைமையில் அ.தி.மு.க.வினர் சிறப்பான வரவேற்பு ஏற்பாடுகளை செய்து வருகிறார்கள்.
Tags:    

Similar News