செய்திகள்
கோப்புப்படம்

முதல் தகவல் அறிக்கை பதிவு : ஹத்ராஸ் வழக்கு விசாரணையை சி.பி.ஐ. தொடங்கியது

Published On 2020-10-11 18:49 GMT   |   Update On 2020-10-11 18:49 GMT
ஹத்ராஸில் தாழ்த்தப்பட்ட இன இளம்பெண் கற்பழித்து, சித்ரவதைக்கு ஆளாக்கி கொல்லப்பட்டது தொடர்பாக சி.பி.ஐ. வழக்கு பதிவுசெய்து விசாரணையை தொடங்கியது.
புதுடெல்லி:

உத்தரபிரதேச மாநிலம், ஹத்ராஸில் கடந்த மாதம் 14-ந் தேதி 19 வயதான தாழ்த்தப்பட்ட இனத்தை சேர்ந்த பெண் வயலுக்கு சென்றபோது காணாமல் போனார். அவர் உணர்வற்ற நிலையில் கண்டுபிடிக்கப்பட்டார்.

அவர் உயர் சாதியை சேர்ந்த 4 பேரை கொண்ட கும்பலால் கற்பழிக்கப்பட்டு, சித்ரவதை செய்யப்பட்டதாக தெரியவந்தது. அவர் உள்ளூர் ஆஸ்பத்திரியில் முதல் கட்ட சிகிச்சை அளிக்கப்பட்டு, டெல்லி ஆஸ்பத்திரியில் மேல் சிகிச்சைக் காக சேர்த்தும் பலனற்றுஉயிரிழந்தார்.

அவரது உடலை இரவோடு இரவாக டெல்லியில் இருந்து சொந்த ஊருக்கு கொண்டு சென்று, அவசர கதியில் வலுக்கட்டாயமாக மாவட்ட நிர்வாகம் தகனம் செய்தது, நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

இந்த கொடூர சம்பவம் தொடர்பாக மாநில போலீசார் கொலை முயற்சி வழக்கு பதிவு செய்தனர்.

இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு நீதி கேட்டு எதிர்க்கட்சிகளும், பல்வேறு அமைப்புகளும் போராட்டங்களில் குதித்தன.

அதன்பின்னர் மாநில அரசின் பரிந்துரையின் பேரில் இந்த வழக்கு சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றப்பட்டது.

இதுபற்றி சி.பி.ஐ. செய்தி தொடர்பாளர் ஆர்.கே.கவுர் நேற்று கூறுகையில், “இந்த வழக்கில் புகார்தாரர், கடந்த மாதம் 14-ந் தேதி தனது சகோதரியின் கழுத்தை குற்றம் சுமத்தப்பட்டவர்கள் நெரிக்க முயன்றதாக கூறி உள்ளார். உ.பி. மாநில அரசு வேண்டுகோள்படியும், மத்திய அரசின் அறிவிக்கைபடியும் சி.பி.ஐ. வழக்கு பதிவு செய்துள்ளது” என கூறி உள்ளார்.

இந்த வழக்கு, கூட்டு கற்பழிப்பு, கொலை உள்ளிட்ட குற்றங்களுக்காக இந்திய தண்டனைச் சட்டத்தின் படியும், எஸ்.சி., எஸ்.டி., வன்கொடுமை சட்டத்தின்கீழும் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த வழக்கு விசாரணை, காசியாபாத் நகரில் உள்ள சி.பி.ஐ. பிரிவிடம் ஒப்படைக்கப்பட்டு, தொடங்கி உள்ளது.

இதற்கிடையே இந்த கொடூர சம்பவம் தொடர்பாக அலகாபாத் ஐகோர்ட்டின் லக்னோ அமர்வு தானாக முன்வந்து இன்று (திங்கட்கிழமை) விசாரணை நடத்துவது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News