செய்திகள்
பிரதமர் மோடி

வாழ்க்கையில் வெற்றி பெற பிரதமர் சொன்ன 3 மந்திரங்கள்

Published On 2021-02-23 18:53 GMT   |   Update On 2021-02-23 18:53 GMT
கரக்பூர் ஐ.ஐ.டி. பட்டமளிப்பு விழாவில் பேசிய பிரதமர் மோடி, வாழ்க்கையில் வெற்றி பெற 3 மந்திரங்களை தெரிவித்தார்.
புதுடெல்லி:

மேற்கு வங்காள மாநிலம் காரக்பூர் ஐ.ஐ.டி.யின் 66-வது பட்டமளிப்பு விழா நேற்று நடைபெற்றது. தங்கம், வெள்ளி பதக்கங்கள் பெற்ற 75 மாணவர்களுக்கு மட்டும் நேரடியாக பட்டங்கள் வழங்கப்பட்டன. 2 ஆயிரத்து 800-க்கு மேற்பட்டவர்களுக்கு காணொலி காட்சி மூலம் வழங்கப்பட்டன.

டெல்லி எய்ம்ஸ் இயக்குனர் டாக்டர் ரந்தீப் குலேரியா, டெல்லி மெட்ரோ ரெயில் கழகத்தின் முன்னாள் நிர்வாக இயக்குனர் ஈ.ஸ்ரீதரன் உள்பட 27 சாதனையாளர்கள் கவுரவிக்கப்பட்டனர்.

இந்த நிகழ்ச்சியில், பிரதமர் மோடி காணொலி காட்சி மூலம் பேசினார். அவர் பேசியதாவது:-

பட்டம் பெற்று செல்லும் மாணவர்கள், தங்களுக்கென புதிய வாழ்க்கையை தொடங்குவது மட்டுமின்றி, பல்லாயிரக்கணக்கான மக்களின் வாழ்க்கையை மாற்றும் பணியையும் தொடங்க வேண்டும்.

அவர்கள் பெற்ற பதக்கங்களும், விருதுகளும் மக்களின் கோரிக்கை பட்டியல் போன்றவை. அவற்றை அவர்கள் நிறைவேற்ற வேண்டும். 21-ம் நூற்றாண்டின் விருப்பங்கள் மாறி விட்டதால், ஐ.ஐ.டி.கள் அடுத்த கட்டத்துக்கு நகர்த்தப்பட வேண்டும்.

மாணவர்கள், வாழ்க்கையில் வெற்றி பெற 3 மந்திரங்களை கடைப்பிடிக்க வேண்டும். சுய விழிப்புணர்வு, தன்னம்பிக்கை, சுயநலம் இல்லாமை ஆகியவைதான் அந்த மந்திரங்கள்.

விஞ்ஞானம், தொழில்நுட்பம் போன்றவற்றுக்கு முற்றுப்புள்ளியே கிடையாது. ஒருவர் புதிய கண்டுபிடிப்பில் வெற்றிபெறாவிட்டால் கூட தவறுகளில் இருந்து கற்றுக்கொள்ளலாம்.

பருவநிலை மாற்றம் இப்போது உலகத்துக்கே சவாலாக உருவெடுத்துள்ளது. அதற்கு சர்வதேச சோலார் கூட்டணி அமைக்கும் யோசனையுடன் இந்தியா முன்வந்துள்ளது. சூரிய சக்தியின் விலை மிகவும் குறைவாக உள்ள நாடுகளில் இந்தியாவும் ஒன்று.

இருப்பினும், அதை வீடு, வீடாக கொண்டு சேர்க்கும் சவால்கள் இருக்கின்றன.

இவ்வாறு அவர் பேசினாா்.
Tags:    

Similar News