செய்திகள்
கூடலூர் மலப்புரம் சாலையில் கீழ்நாடுகாணியில் நடுரோட்டில் மரம் விழுந்து கிடப்பதை காணலாம்

கூடலூர், பந்தலூரில் விடிய விடிய கொட்டி தீர்த்த கனமழை

Published On 2021-10-21 04:57 GMT   |   Update On 2021-10-21 04:57 GMT
ஊட்டி, காந்தல், உள்பட சுற்றுப்புற பகுதிகளில் சுமார் 1 மணி நேரத்திற்கு மேலாக பலத்த இடி, காற்றுடன் கனமழை கொட்டியது.
கூடலூர்:

நீலகிரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக காலை நேரத்தில் மிதமான வெயிலும், அவ்வப்போது கன மழையும் பெய்து வருகிறது.

கூடலூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் காலையில் நல்ல வெயில் அடித்தது. மதியத்திற்கு பிறகு வானத்தில் கருமேகங்கள் சூழ்ந்து அந்த பகுதியே இருளாக காட்சியளித்தது. சிறிது நேரத்தில் கூட லூர், பந்தலூர், தேவர்சோலை, உப்பட்டி, சேரம்பாடி, பாட்டவயல், நடுவட்டம், ஓவேலி, உள்ளிட்ட பகுதிகளில் இடி, மின்னலுடன் மழை பெய்தது.

மாலையில் தொடங்கிய மழை இன்று அதிகாலை வரை பெய்து கொண்டே இருந்தது. இதனால் கூட லூர், பந்தலூர் பஜார் பகுதிகள், பஸ் நிலையம், மார்க்கெட் பகுதிகள், முக்கிய சாலைகள் அனைத்திலும் தண்ணீர் ஆறாக ஓடியது. இதனால் வாகனங்கள் மெல்ல மெல்ல ஊர்ந்தபடியே சென்றதால் வாகன ஓட்டிகள் மிகவும் அவதியடைந்தனர்.

தொடர் மழையால் பாண்டியாறு, புன்னம்புழா, மாயாறு உள்ளிட்ட ஆறுகளுக்கு தண்ணீர் வரத்து அதிகரித்து காணப்படுகிறது. ஆற்றிலும் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. மழைக்கு கூடலூர்-மலப்புரம் சாலையில் கீழ்நாடுகாணி பகுதியில் மரம் முறிந்து விழுந்து அரைமணி நேரம் போக்குவரத்து பாதிப்பானது.

தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து மரத்தை அகற்றி போக்குவரத்தை சீர் செய்தனர்.

ஊட்டி, காந்தல், உள்பட சுற்றுப்புற பகுதிகளில் சுமார் 1 மணி நேரத்திற்கு மேலாக பலத்த இடி, காற்றுடன் கனமழை கொட்டியது. பலத்த மழையின் காரணமாக ஊட்டி-குன்னூர் சாலையில் வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் அருகில் இருந்து சேரிங்கிராஸ் வரையிலும், கமர்ஷியல் சாலை, படகு இல்லம் சாலை, ரெயில்வே பாலம் உள்ளிட்ட பகுதிகளிலும் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது.

இதனால் வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் பெரிதும் சிரமம் அடைந்தனர். தொடர்ந்து மழை பெய்து வருவதால் சாலைகளில் மக்கள் நடமாட்டம் குறைந்துள்ளதோடு, வாகன போக்குவரத்தும் கணிசமாகக் குறைந்துள்ளது.

குன்னூர், கோத்தகிரி சுற்றுவட்டார பகுதிகளான மவுண்ட் சாலை, பெட்போர்டு, ஓட்டுப்பட்டறை, டானிங்டன், ஒரசோலை பகுதிகளில் பலத்த மழை பெய்தது.

தொடர் மழை காரணமாக மாவட்டம் முழுவதும் கடுமையான குளிர் நிலவி வருகிறது. இதனால் பொதுமக்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கியுள்ளனர். மேகமூட்டமாக இருப்பதால் எதிரே வரும் வாகனங்கள் தெரிவதில்லை. இதனால் சாலைகளில் செல்லக்கூடிய வாகன ஓட்டிகள் தங்கள் வாகனங்களின் முகப்பு விளக்கை ஒளிர விட்டபடியே வாகனத்தை ஓட்டி செல்கின்றனர்.

நீலகிரியில் தொடர்ந்து மழை பெய்து வருவதாலும், மலைரெயில் பாதையில் மீண்டும் மண்சரிவு, பாறைகள் உருண்டும் விழும் சம்பவங்கள் நடக்க வாய்ப்புள்ளதாலும், சுற்றுலா பயணிகள் பாதுகாப்பு கருதி இன்று ஒரு நாள் மட்டும் மேட்டுப்பாளையம்- ஊட்டி மலை ரெயில் ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்த தகவலை ரெயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Tags:    

Similar News