செய்திகள்

அலைமோதும் கூட்டம் - கொடைக்கானலில் விடுதிகள் கிடைக்காமல் பயணிகள் தவிப்பு

Published On 2019-04-20 10:23 GMT   |   Update On 2019-04-20 10:23 GMT
கொடைக்கானலில் சுற்றுலாப்பயணிகள் அதிகமாக கூடியதாலும் அறைகள் கிடைக்காததாலும் சுற்றுலா பயணிகள் தவித்தனர்.
கொடைக்கானல்:

கொடைக்கானலில் கடந்த 4 நாட்களாக அவ்வப்போது மழை பெய்து வருகிறது. இதனால் வெப்பம் தணிந்து குளுமையான நிலை உருவாகி உள்ளது. இதனால் காலையிலிருந்தே சுற்றுலாப்பயணிகள் வருகை அதிகரித்தது.

எனவே நகரிலிருந்து சுமார் 10 கிலோமீட்டர் தூரம் வரை வாகனங்கள் அணிவகுத்து நின்றன. பிரையண்ட் பூங்கா, படகுக் குழாம், பில்லர் ராக் , பசுமைப் பள்ளத்தாக்கு போன்ற பகுதிகளில் சுற்றுலாப் பயணிகள் அதிகமாக கூடியதால் வாகனங்கள் நகர முடியாமல் ஸ்தம்பித்து நின்றன.

இயற்கை எழில் காட்சிகளை முழுமையாக கண்டுரசிக்க முடியாமல் சுற்றுலாப்பயணிகள் தவித்தனர். மேலும் தங்குவதற்கு அறைகள் கிடைக்காததால் கொடைக்கானலுக்கு ஏன் வந்தோம் என செய்வதறியாது விழித்துக்கொண்டு நின்றது மிகவும் பரிதாபமாக இருந்தது.

கொடைக்கானல் வரும் சுற்றுலாப் பயணிகள் பலருக்கு விதிமீறல் கட்டிடங்கள் சீல் வைக்கப்பட்டது தெரியாமல் வழக்கம்போல் கொடைக்கானலுக்கு படையெடுத்துள்ளனர்.

கொடைக்கானலில் தங்கி இதமான சூழலை அனுபவிக்க நினைத்தவர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. குழந்தைகளும் பெண்களும் மிகவும் ஏக்கத்துடன் காணப்பட்டனர். அடுத்தமாதம் இதற்கு மேல் கூட்டம் அலைமோதும் என்பதால் விதிமீறல் கட்டிட விவகாரத்தில் அவர்களுக்கு நல்ல தீர்ப்பு கிடைக்கும் வகையில் நடவடிக்கையை விரைந்து முடிக்கவும், சுற்றுலாப்பயணிகளின் சிரமத்தைப்போக்கவும் வழிவகை செய்ய மாநில அரசு தலையிட வேண்டி கொடைக்கானல் பொதுமக்களும், சுற்றுலாப் பயணிகளும் கோரிக்கை வைத்துள்ளனர்.

Tags:    

Similar News