ஆன்மிகம்
இலவச தரிசன டோக்கன் வாங்க நீண்ட வரிசையில் ரோட்டில் காத்திருந்த பக்தர்கள்.

திருப்பதியில் இன்று முதல் இலவச தரிசனம்: டோக்கன் வாங்க அதிகாலையில் குவிந்த பக்தர்கள்

Published On 2021-09-08 05:08 GMT   |   Update On 2021-09-08 08:30 GMT
அலிபிரியில் உள்ள பூதேவி ஸ்ரீதேவி காம்ப்ளக்ஸில் வழங்கப்பட்டு வந்த தரிசன டிக்கெட்டுகள் வழங்கும் இடம் மாற்றப்பட்டு இன்று முதல் பஸ் நிலையம் அருகே உள்ள ஸ்ரீனிவாசம் விடுதி வளாகத்துக்கு மாற்றப்பட்டுள்ளது.
திருப்பதி :

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கொரோனா தொற்று காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் ரூ.300-க்கான 3 ஆயிரம் டிக்கெட்டுகள் ஆன்லைனில் வெளியிடப்பட்டு பக்தர்கள் தரிசனம் செய்து வந்தனர்.

பின்னர் தொற்று குறைந்ததால் பக்தர்களின் எண்ணிக்கை 8 ஆயிரமாக உயர்த்தப்பட்டது. மொத்தம் தினமும் ரூ.300 கட்ட தரிசனம் வி.ஐ.பி. தரிசனம் என 20 ஆயிரத்துக்கும் அதிகமான பக்தர்கள் தரிசனம் செய்துவந்தனர். ஆனால் இலவச தரிசனம் அனுமதிக்கபடவில்லை. வெளியூர் வெளி மாநிலங்களில் இருந்து தரிசனத்திற்காக வரும் பக்தர்கள் ஆன்லைனில் தரிசன டிக்கெட் கிடைக்காததால் அவதி அடைந்து வந்தனர்.

இலவச தரிசனத்தை தொடங்கவேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். இந்நிலையில் பக்தர்களின் கோரிக்கையை பரிசீலனை செய்த தேவஸ்தான அதிகாரிகள் சோதனை ஓட்டமாக இலவச தரிசனம் தொடங்க முடிவு செய்துள்ளனர். அதன்படி இன்று முதல் சித்தூர் மாவட்ட பக்தர்களுக்கு மட்டும் 2000 தரிசன டிக்கெட்டுகள் வழங்க முடிவு செய்தனர்.

இன்று காலை 8 மணி முதல் டிக்கெட்டுகள் வழங்கப்படும் என அதிகாரிகள் அறிவித்திருந்தனர். திருப்பதியில் தொடர்ந்து மழை பெய்து வருவதால், ஏற்கனவே அலிபிரியில் உள்ள பூதேவி ஸ்ரீதேவி காம்ப்ளக்ஸில் வழங்கப்பட்டு வந்த தரிசன டிக்கெட்டுகள் வழங்கும் இடம் மாற்றப்பட்டு இன்று முதல் பஸ் நிலையம் அருகே உள்ள ஸ்ரீனிவாசம் விடுதி வளாகத்துக்கு மாற்றப்பட்டுள்ளது. இலவச தரிசன டிக்கெட்டுகள் வழங்கப்படும் என்ற தகவல் அறிந்த சித்தூர் மாவட்ட பக்தர்கள் ஏராளமானோர் இலவச தரிசன டிக்கெட்டுகள் பெறுவதற்காக அதிகாலையிலேயே ஸ்ரீனிவாசம் விடுதி வளாகத்தில் குவிந்தனர்.

நேரம் அதிகரிக்க அதிகரிக்க 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் சமூக இடைவெளியை மறந்து குவிந்ததால் பக்தர்கள் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. பக்தர்களை கட்டுப்படுத்த முடியாமல் தேவஸ்தான ஊழியர்கள் திக்குமுக்காடினர்.

இது குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பக்தர்களை வரிசையில் நிற்க வைத்து டிக்கெட்டுகளை பெற்றுச் செல்ல வைத்தனர். இன்று டிக்கெட் பெற்ற பக்தர்கள் நாளை தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுகின்றனர்.

இதுகுறித்து தேவஸ்தான அதிகாரிகள் கூறுகையில்:- சோதனை ஓட்டமாக சித்தூர் மாவட்ட பக்தர்களுக்கு மட்டும் தினமும் 2,000 இலவச தரிசன டிக்கெட்டுகள் வழங்கப்படுகிறது. இதையடுத்து வெளியூர் மற்றும் வெளி மாவட்ட மாநில பக்தர்களை தரிசனத்திற்கு அனுமதி அளிப்பது குறித்து அதிகாரிகள் முடிவு செய்வார்கள் என்றனர்.
Tags:    

Similar News