ஆன்மிகம்
ஐவர் மலை தோற்றம்

அற்புதங்கள் நிறைந்த ஐவர்மலை

Published On 2020-01-08 08:38 GMT   |   Update On 2020-01-08 08:38 GMT
பழனி - கொழுமம் சாலையில் பாப்பம்பட்டியில் இருந்து 3 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது ஐவர்மலை. வெளியுலகுக்கு பரவலாக தெரியும் இந்த மலை, பல ஞானிகளையும், சித்தர்களையும் உருவாக்கி தந்துள்ளது.
இந்தியா உலகுக்கு அளித்த அற்புத கலை யோகா. இந்த கலையில் மனிதனுள் ஜீவாத்மா, பரமாத்மா என இருவகை ஆத்மாக்கள் உள்ளதாகவும், இந்த 2 ஆத்மாக்களும் ஐக்கியமாகி மனிதன் முக்தி அடைவதே தியானத்தின் உச்சநிலை என்றும் கூறப்பட்டுள்ளது.

ஐவர்மலை

ஐம்புலன்களை அடக்கி, தனது சித்தியால் (அறிவால்), ஐம்பூதங்களை அறிந்து வாழ்ந்தவர்களே ‘சித்தர்கள்’ என அழைக்கப்படுகின்றனர். இவர்கள் பெரும்பாலும் அடர்ந்த காடு, மலை ஆகியவற்றில் அமர்ந்து தியானத்தின் மூலம் ஞானம் பெற்றனர். இந்த நிலையை பெற்றவர்கள்தான் ஞானிகளாகவும், சித்தர்களாகவும் விளங்குகின்றனர். அந்த வகையில் பழனி பகுதியில் ஏராளமான சித்தர்கள் வாழ்ந்து முக்தி அடைந்துள்ளதை பல ஜீவசமாதிகள் மூலம் அறிய முடிகிறது.

பழனி - கொழுமம் சாலையில் பாப்பம்பட்டியில் இருந்து 3 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது ஐவர்மலை. வெளியுலகுக்கு பரவலாக தெரியும் இந்த மலை, பல ஞானிகளையும், சித்தர்களையும் உருவாக்கி தந்துள்ளது. அதேபோல் சமணர்கள் இந்த மலையில் ஞானம் பெற்று முக்தி அடைந்துள்ளனர். மகாபாரத இதிகாசம் நடைபெற்ற துவாபார யுக காலத்தில், பஞ்சபாண்டவர்கள் தங்கள் நாட்டை இழந்து காடுகளில் வசித்தபோது, திரவுபதியுடன் இந்த மலையில் தங்கி இருந்ததால் இம்மலைக்கு ‘ஐவர் மலை’ என்று பெயர் வந்ததாக கூறப்படுகிறது. இதன் அருகே தென்புறத்தில் அமைந்துள்ள மலை ‘துரியோதனன் மலை’ என்றும், ‘திரியோதிதை’ மலை என்றும் மக்களால் அழைக்கப்படுகிறது.

போகரின் வேள்வி

பழனி முருகன் கோவிலின் மூலவர் சிலையை வடிவமைத்த போகர் சித்தருக்கும், ஐவர் மலைக்கும் தொடர்பு இருப்பதாக புராண கதைகள் கூறுகின்றன. சீனாவில் இருந்து இந்தியா திரும்பி வந்தபோது, போகருக்கு பிரம்மஹத்தி தோஷம் பிடித்து இருந்தது. இந்த தோஷம் நீங்குவதற்கு அவர் ஐவர் மலையில் வேள்வி நடத்தினார். அதன் முடிவில் அவரின் இஷ்ட தெய்வமான புவனேஸ்வரி அம்மன் தோன்றி, பழனி மலையில் நவபாஷாணத்தால் முருகன் சிலையை நிறுவி வழிபடு என்று அருள்வாக்கு கூறினார். அதன்படியே போகரால் உருவாக்கப்பட்டதுதான் பழனியில் உள்ள முருகன் சிலை என்று கூறப்படுகிறது.

பொதுவாக இந்து மதத்தினர் பஞ்சபூதங்களை வணங்குவதற்கென தனித்தனி கோவில்கள் உள்ளன. அவை:- நிலம் - காஞ்சிபுரம், நீர் - திருவானைக்காவல், காற்று - காளகஸ்தி, நெருப்பு - திருவண்ணாமலை, ஆகாயம் - சிதம்பரம். ஆனால் பஞ்சபூதங்கள் அனைத்தையுமே ஒரே இடத்தில் வணங்குவதற்கான ஒன்றாக இந்த ஐவர் மலை சொல்லப்படுகிறது.

இந்த ஐவர்மலை, தியானம் செய்வதற்கு மிகவும் ஏற்ற சூழலில் அமைந்துள்ளது. அந்த வகையில் தமிழகம், கேரளா என பல்வேறு மாநிலங்களில் இருந்து பலர் இங்கு வந்து தியானம் செய்து வருகின்றனர். சுமார் 150 ஆண்டுகளுக்கு முன்பு கேரளாவில் இருந்து நாராயணசாமி பரதேசி என்பவர், இந்த மலைக்கு வந்து தங்கியுள்ளார். பஞ்சபாண்டவர்கள் தங்கி இருந்ததை அறிந்த அவர், இங்கு திரவுபதி அம்மனுக்கென கோவிலை உருவாக்கி வணங்கி வந்தார். காலப்போக்கில் அவர் அங்கேயே முக்தி அடைந்தார். அதன் பின்னர் அவர் வழி வந்த பத்மநாபசுவாமி, பெரியசுவாமி ஆகியோரும் இங்கு வந்து தியானம் செய்து முக்தி அடைந்துள்ளனர்.

‘குன்று இருக்கும் இடமெல்லாம் குமரன் இருப்பான்’ என்ற ஆன்மிக வாசகத்துக்கு ஏற்ப, கலியுக கடவுளான முருகப்பெருமான், ஐவர்மலையில் ‘குழந்தை வேலப்பர்’ ஆக பக்தர்களுக்கு அருள்புரிந்து வருகிறார். அதேபோல் மலையில் வள்ளலார் சன்மார்க்க சங்கம் நிறுவப்பட்டு அதன் மடம் உள்ளது. சுமார் 75 ஆண்டுகளுக்கு முன்பு வள்ளலார் பக்தரான முருகானந்த சுவாமிகள் என்பவர், வாழ்வின் உண்மை பொருளான அமைதியை தேடுபவர்கள் இங்கு வந்து அதன் பயனை அடைய வேண்டும் என்பதற்காக ஐவர்மலையில் வள்ளலார் மடத்தை நிறுவினார்.

இந்த முருகானந்த சுவாமிகள் ஐவர்மலையில் வசித்த காலத்தில், பழனியைச் சேர்ந்த லட்சுமண செட்டியார் என்பவர் தீராத நோயால் அவதிப்பட்டு வந்தாா். அவர், முருகானந்த சுவாமிகளை நாடியபோது, ஐவர் மலையில் முருகன் கோவிலை நிறுவி வழிபடுமாறு கூறியுள்ளார். அதைத்தொடர்ந்து அங்கு குழந்தை வேலப்பர் கோவில் கட்டப்பட்டது என்பது செவி வழிச் செய்தியாகும். பழனி மலைக்கோவிலை போல் இங்கும் இடும்பனுக்கு தனி சன்னிதி உள்ளது.

இந்த குழந்தை வேலப்பர் கோவிலில், காலை, மதியம், மாலை என 3 கால பூஜைகள் நடைபெற்று வருகிறது. மேலும் மாத கார்த்திகை, அமாவாசை, பவுர்ணமி மற்றும் திருக்கார்த்திகை உள்ளிட்ட விசேஷ நாட்களில் ஏராளமான பக்தர்கள் இந்தக் கோவிலில் வீற்றிருக்கும் குழந்தை வேலப்பரை வணங்கி செல்கின்றனர். அதேபோல் இங்கு மலையடிவாரம் மற்றும் உச்சியில் விநாயகருக்கென தனித்தனி சன்னிதிகள் உள்ளன. மலை உச்சியில் உள்ள விநாயகர் கோவிலில் உள்ள தூபத்தில் ஏற்றப்படும் தீபமானது, காற்றினால் அணையாத வண்ணம் அமைக்கப்பட்டுள்ளது. இந்தக் கோவிலுக்கு அய்யம்பாளையம், பாப்பம்பட்டி, குப்பம்பாளையம் உள்ளிட்ட கிராம மக்கள் வந்து சாமி தரிசனம் செய்கின்றனர்.

பாண்டிய மன்னன் கூன்பாண்டியன் ஆட்சி காலத்தில், தமிழகத்தில் வாழ்ந்த பல சமண முனிவர்கள் விரட்டி அடிக்கப்பட்டனர். அவர்களில் பலரும் இந்த ஐவர்மலையில் தங்கி, தியானம் செய்து முக்தி அடைந்துள்ளனர். அப்போது அவர்கள் அங்கு தங்கி தூங்குவதற்கு பயன்படுத்திய கல் படுக்கைகள் இங்கு உள்ளன. இதற்கு சான்றாக, அங்குள்ள திரவுபதி அம்மன் கோவில் அருகே உள்ள மலையில் சமண முனிவர்கள் அமர்ந்து தியானம் செய்த கோலத்திலும், நின்ற கோலத்திலும் உருவங்கள் செதுக்கப்பட்டுள்ளன.

தற்போது இங்குள்ள சமண சிற்பங்கள் யாவும் சேதப்படுத்தப்படாமல் இருக்க தொல்லியல் துறையினர் ஐவர்மலையை பாதுகாத்து வருகின்றனர். ஆனால் இங்கு பக்தர்கள் வந்து செல்வதற்கு போதிய போக்குவரத்து வசதிகள் இல்லை. எனவே அற்புதங்கள் நிறைந்த இந்த ஐவர்மலையை பாதுகாக்க போதிய வசதிகள் செய்ய அரசு முன்வர வேண்டும் என்பது அனைவரின் கோரிக்கையாக உள்ளது.

வற்றாத சுனைகள்

ஐவர்மலையில் வற்றாத 2 சுனைகள் உள்ளன. அவை:- சூரிய புஷ்ப கரணி, சந்திர புஷ்பகரணி என்ற பெயரில் அழைக்கப்படுகின்றன. சூரிய புஷ்பகரணியில் தாமரை மலர்களும், சந்திர புஷ்பகரணியில் அல்லி மலர்களும் நிறைந்துள்ளன. சூரிய கதிர்கள் தாமரை மீதும், சந்திர கதிர்கள் அல்லி மீதும் விழும் வண்ணம் இந்த சுனைகள் அமைந்திருப்பது சிறப்பு. ஆடி அமாவாசை அன்று சூரியனும், சந்திரனும் ஒரே நேர்கோட்டில் அமைவதாகவும், அப்போது சூரிய - சந்திர கதிர்கள் ஐவர்மலையில் விழுவதாகவும் பக்தர்களால் நம்பப்படுகிறது. எனவேதான் ஆடி அமாவாசை நாட்களில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் இங்கு வந்து திரவுபதி அம்மன், குழந்தை வேலப்பரை வணங்கி செல்கின்றனர்.
Tags:    

Similar News