ஆன்மிகம்
நடராஜர்

உத்திரகோசமங்கை நடராஜர் மகிமை

Published On 2020-01-09 08:41 GMT   |   Update On 2020-01-09 08:41 GMT
ஆருத்ரா தினமான அன்று மட்டுமே, நடராஜரை மரகதக் கோலத்தில் கண்டுகளிக்கலாம். அன்றைய தினம் அதிகாலை 3 மணிக்கு மீண்டும் சந்தனக் காப்பு செய்யப்பட்டு, நடராஜர் பக்தர்களுக்கு காட்சியளிப்பார்.
தமிழ்நாட்டில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பழமையான சிவாலயங்கள் இருக்கின்றன. இவற்றில் 276 தலங்கள் பாடல் பெற்ற தலங்கள் என்ற சிறப்பை பெற்றவை.
இந்த பழம்பெரும் சிவத்தலங்களில் மகத்துவமும் தனித்துவமும் நிறைந்தது உத்தரகோசமங்கை எனும் திருத்தலமாகும். இந்த திருத்தலம் ராமநாதபுரத்துக்கு மிக, மிக அருகில் உள்ளது.

சிவத்தலங்களில் பாடல் பெற்ற முதல் தலம் இந்த தலம்தான். இதன்மூலம் இந்த தலமே தமிழ்நாட்டின் முதல் சிவாலயம் என்பதை உறுதிபடுத்துகிறது.
சமயக்குறவர்களில் நால்வரில் ஒருவரான மாணிக்கவாசகர் தம் வாழ்நாளில் பெரும் பகுதியை இத்தலத்தில் கழித்தார். அவர் தன் பாடலில், சிவன் உண்பதும், உறங்குவதும் உத்தரகோசமங்கை தலத்தில்தான் என்று குறிப்பிட்டுள்ளார்.

ஓம் எனும் பிரணவ மந்திரத்தை பார்வதி தேவிக்கு சிவபெருமான் இத்தலத்தில் வைத்துதான் ரகசியமாக சொல்லி கொடுத்தார் என்பார்கள். அதுபோல பார்வதிக்கு நாட்டியக்கலையை ஈசன் இங்கு ரகசியமாக சொல்லிக் கொடுத்தார் என்பார்கள்.

‘மண் தோன்றிய போதே மங்கை தோன்றியது’ என்பார்கள். உலகிலேயே முதலில் தோன்றிய சிவன் கோவில் இது என்று கூறப்படுகிறது.
ஆதி காலத்தில் அதுவும் நவக்கிரகங்கள் அறியப்படாத காலத்தில் இருந்த சூரியன், சந்திரன், செவ்வாய் மட்டுமே இங்கு கிரகங்களாக உள்ளது என்பதில் இருந்தே, இந்த ஆலயம் மிக மிகப் பழமையானது என்பதை அறியலாம்.

சிவபெருமான் பார்வதிதேவிக்கு வேதாகமங்களின் ரகசியங்களை உபதேசம் செய்த இடம் இதுவாகும். அதனால் இந்த ஊருக்கு உத்தரகோசமங்கை என்ற பெயர் தோன்றியது என்று சொல்கிறார்கள். அதாவது உத்திரன் (ருத்திரன்) + கோசம் + மங்கை. மங்கைக்கு உத்திரன் உபதேசம் செய்த இடம், ஆதலால் உத்திரகோசமங்கை என்றானது என்கிறார்கள். ஆனால் இத்தல பெயர் விளக்கத்துக்கு வேறொன்றும் சொல்லப்படுகிறது. உத்திரம் என்றால் உபதேசம். கோசம் என்றால் ரகசியம். மங்கை என்றால் பார்வதி என்றுபொருள். பார்வதிதேவிக்கு ஈசன் ரகசியமாக வேதத்தை உபதேசம் செய்த இடம் என்ற அர்த்தத்தில் இத்தலம் உத்தரகோச மங்கை என்ற பெயரில் அழைக்கப்படுகிறது என்கிறார்கள். இத்தல மூலவர் ‘மங்களநாதர்’ சுயம்புவாக, இலந்தை மரத்தடியில் தோன்றியவர்.

அந்த இலந்தை மரமே இவ்வாலயத்தின் தலவிருட்சமாக விளங்குகிறது. மங்களநாதரின் உடனுறை அம்பிகையின் திருநாமம் மங்களேஸ்வரி என்பதாகும்.
மாணிக்கவாசகர் இத்தலத்தில் சிவலிங்க வடிவிலும், நின்ற கோலத்திலும் காட்சி தருகிறார்.

‘நீத்தல் விண்ணப்பம்’ என்னும் திருவாசகப் பகுதி இத்தலத்தில் பாடப்பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. திருவாசகத்தில் 38 இடங்களில் இத்தலத்தைப் போற்றிப் பாடியுள்ளார் மாணிக்கவாசகர்.

உலகிலேயே மிகச்சிறந்த சிவ பக்தனைத்தான் திருமணம் முடிப்பேன் என்று காத்திருந்தாள் மண்டோதரி. இதனால் அவளுக்கு நீண்ட நாட்களாக திருமணம் ஆகாமல் இருந்தது. பின்பு இத்தல ஈசனையும், அம்பாளையும் மண்டோதரி வழிபட்டாள். அதன்பிறகே ராவணனை கரம் பிடித்தாள். மேலும் ராவணன்- மண்டோதரி திருமணம் இத்தலத்திலேயே நடைபெற்றது என்று கூறப்படுகிறது.

இங்குள்ள நடராஜ பெருமான் ஐந்தரை அடி உயரம். முழுவதும் மரகத திருமேனி. ஆண்டு முழுவதும் சந்தனக் காப்பிலேயே பக்தர்களுக்கு காட்சியளிக்கிறார். ஆண்டுக்கு ஒருமுறை திருவாதிரை அன்று மட்டுமே சந்தனம் களையப்பட்டு அபிஷேகம் நடைபெறும். அதுவும் 32 வகை மூலிகைகளால் அபிஷேகம் செய்யப்படும்.

ஆருத்ரா தினமான அன்று மட்டுமே, நடராஜரை மரகதக் கோலத்தில் கண்டுகளிக்கலாம். அன்றைய தினம் அதிகாலை 3 மணிக்கு மீண்டும் சந்தனக் காப்பு செய்யப்பட்டு, நடராஜர் பக்தர்களுக்கு காட்சியளிப்பார்.

மனதை கவரும் மரகத சிலை


உத்தரகோசமங்கையில் உள்ள நடராஜர் சிலை 5 அடி உயரம் கொண்ட பச்சை மரகதக் கல்லால் ஆனது. அவர் பெயர் ரத்தின சபாபதி. அவரையே ஆதிசிதம்பரேசர் என்று அழைக்கின்றனர்.

ஒளிவெள்ளத்தில் இந்த சிலையைப் பார்க்கும்போது உயிர்ப்புடன் இருப்பது போல் தோன்றுவதை நாம் உணர முடியும். அபூர்வமான இந்த விக்கிரகத்தில் மனித உடலில் உள்ளது போல் பச்சை நரம்புகள் இருப்பதைக் காணலாம். எனவே இந்த சிலை உலக அதிசயத்தில் ஒன்றாக உள்ளது.

இந்த நடராஜர் விக்ரகம் மத்தளம் முழங்க மரகதம் உடைபடும் என்பதால் ஒலி, ஒளி அதிர்வுகளை தாங்க இயலாத தன்மை கொண்டது. எனவே இந்த கோவிலில் மேளதாளங்கள் எதுவும் இசைக்கப்படுவதில்லை. எந்த விதத்திலும் விக்கிரகம் சேதப்பட்டுவிடக் கூடாது என்பதற்காக ஆண்டு முழுவதும் சந்தனக் காப்பு சாத்தப்பட்டு பாதுகாத்து வருகிறார்கள்.

வருடத்திற்கு ஒரு நாள் அதாவது மார்கழி மாதம் பவுர்ணமி நாளில் திருவாதிரை நட்சத்திரத்தில் மட்டும் சந்தனக்காப்பு கலைக்கப்படும். அன்று முழுவதும் சந்தனக்காப்பு இல்லாத மரகதக்கல் மேனியால் ஆன நடராஜரை, பக்தர்கள் தரிசனம் செய்யலாம். அதனைத்தொடர்ந்து நடராஜர் சிலைமீது சந்தனாதிதைலம் பூசப்பட்ட பின்னர் வெண்ணெய், சந்தனம், குங்குமம், மஞ்சள் திரவியம், தேன், பால், தயிர், இளநீர் உள்பட 32 வகையான அபிஷேகம் நடைபெறும்.
இந்த நிகழ்ச்சியில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்வார்கள்.

மேலும் நடராஜர் மீது பூசப்பட்டிருக்கும் சந்தனம் மருத்துவ குணம் கொண்டது என்பதால் அதனை பக்தர்கள் போட்டி போட்டு வாங்கி செல்வார்கள். இதையடுத்து அன்று இரவு சரியாக 12 மணி அளவில் சிறப்பு பூசைகள் நடத்தப்பட்டு மீண்டும் மரகத நடராஜர் சிலை மீது சந்தனம் பூசப்படும்.

திருவாதிரை அன்று கோவிலில் அதிக கூட்டம் இருக்கும் காலை பத்து மணியில் இருந்து மரகத நடராஜரைப்பார்க்கலாம்.இரவு 3 மணிக்கு மேல் சந்தனம் பூசிவிடுவார்கள் பிறகு அடுத்த வருடம்தான் மரகத நடராஜரை தரிசிக்க முடியும். 
Tags:    

Similar News