செய்திகள்
தமிழருவி மணியன் பேசிய காட்சி.

தமிழகத்தில் ஊழலற்ற ஆட்சியை ரஜினியால் மட்டுமே தரமுடியும்-தமிழருவி மணியன் சொல்கிறார்

Published On 2019-11-03 10:32 GMT   |   Update On 2019-11-03 10:32 GMT
தமிழகத்தில் ஊழலற்ற மக்கள் விரும்பும் ஆட்சியை ரஜினியால் மட்டுமே தரமுடியும் என்று தமிழருவி மணியன் பேசியுள்ளார்.

நாகர்கோவில்:

காந்திய மக்கள் இயக்கம் சார்பில் மாற்று அரசியல் மலரட்டும் என்ற பெயரில் கருத்தரங்கம் நேற்று மாலை நாகர்கோவிலில் உள்ள ஜெபமாலை திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இதில் காந்திய மக்கள் இயக்க நிறுவன தலைவர் தமிழருவி மணியன் கலந்து கொண்டு பேசினார்.

நான் சிறுவயதில் இருந்தே காந்தியடிகளின் கொள்கைகளை பின்பற்றி வாழ்ந்து வருகிறேன். நமது நாடு சுதந்திரமடைந்து 70 ஆண்டுகளுக்கு மேல் ஆகியும் தற்போது வரை நாட்டு மக்களின் முன்னேற்றத்தில் எதிர்பார்த்த அளவு இல்லை. இதற்கு காரணம் மத்தியில் ஆட்சி செய்யும் பா.ஜனதாவும், காங்கிரசும் ஆகும். இந்த இரு கட்சிகளும் மாநில அரசின் உரிமைகளை பறிப்பதில் உறுதியாக உள்ளனர். மாநில அரசு உரிமைகளை பறிப்பது காந்தியத்துக்கு எதிரானது.

சட்டம்-ஒழுங்கு சரியாக இருப்பதற்கு மக்களின் நல்லபண்புகளே காரணம். ஒரு நாட்டின் முன்னேற்றத்துக்கு மூலக்காரணம் கல்வியாகும். அதுவும் தாய்மொழி கல்வி மிக முக்கியம். வெளிநாடுகளில் தாய்மொழி கல்விக்கு அதிக முக்கியத்துவம் தருகிறார்கள். ஆனால் நமது மாநிலத்தில் ஆங்கிலம் படித்தால் தான் மதிப்பு என்று நினைக்கிறார்கள். அது முற்றிலும் தவறானது. தமிழக மக்களின் அடையாளம் நமது தாய் தமிழ் மொழி. மொழி அழியும் போது நமது அடையாளமும் அழியும்.

அ.தி.மு.க., தி.மு.க. ஆகிய இருகட்சிகளை நீக்கிவிட்டு புதியதாக ஒருவரை அமர்த்துவது அல்ல மாற்று அரசியல். மக்களின் வாழ்வாதாரத்தில் மாற்றத்தை உண்டாக்கவும், அவர்களது முன்னேற்றத்தையும் பற்றி சிந்தித்து மாற்றி அமைப்பதுமே ஆகும். அப்படி பார்த்தால் தமிழகத்தில் உள்ள 2 திராவிட கட்சிகளும் மக்களுக்கான பொது பணியை செய்ய தவறி வருகின்றது.


அ.தி.மு.க., தி.மு.க., ஆகிய இரு கட்சிகளும் தமிழகத்தில் இருந்து மக்களால் புறக்கணிக்கப்படும்போது, தமிழகத்தில் பொன்னான காலம் உதயமாகும் என்பதில் சந்தேகம் இல்லை. எனது 50 ஆண்டு கால அரசியல் வாழ்க்கையில் பல அரசியல் தலைவர்களை சந்தித்து கூட்டணி வைத்திருக்கிறேன். அப்படி பார்க்கும்போது தமிழகத்தில் ஊழலற்ற மக்கள் விரும்பும் ஆட்சியை ரஜினியால் மட்டுமே தரமுடியும் என்பது பொது மக்களின் கருத்து. என்னுடைய கருத்தும் அதுதான்.

இவ்வாறு அவர் பேசினார். 

Tags:    

Similar News