ஆன்மிகம்
முருகன்

சஷ்டியில் இருந்தால் ‘அகப்பை’யில் வரும்

Published On 2020-01-11 08:53 GMT   |   Update On 2020-01-11 08:53 GMT
‘சஷ்டியில் இருந்தால் அகப்பையில் வரும்’ என்பது பழமொழி. அதாவது சஷ்டி திதியில் விரதமிருந்து முருகப்பெருமானை நினைத்து வழிபட்டால் பிள்ளைப்பேறு கிடைக்காதவர்களுக்கு ‘அகப்பை’ எனப்படும் கருப்பையில் பிள்ளைப்பேறு உண்டாகும் என்பது இதன் பொருள்.
நாள், திதி, யோகம், கரணம், நட்சத்திரம் ஆகிய ஐந்து அங்கங்களையும் பெற்றதுதான் ‘பஞ்சாங்கம்.’ அவைகள் சிறப்பாக நமக்கு வழிவகுத்துக் கொடுக்கவும், இயற்கை சீற்றங்களில் சிக்காமல் இனிய வாழ்க்கை அமைத்துக் கொடுக்கவும் தமிழ்வருடப் பிறப்பு அன்று சிவாலயங்களில் பஞ்சாங்கம் படிப்பது வழக்கம். அதை ஆலயத்திற்கு வழிபட வரும் மக்கள் கேட்டு மகிழ்வர்.

“நாள் செய்வதை நல்லவன் கூட செய்யமாட்டான்” என்று நாள் பற்றியும், “கோள் செய்வதை கொடுப்பவன் கூட செய்யமாட்டான்” என்று கிரகங்கள் பற்றியும், “விதியை மாற்றும் வலிமை திதிக்கு உண்டு” என்று திதி பற்றியும், “யோகமுள்ளவன் தேக நலனும், செல்வ வளமும் காண்பான்” என்று யோகம் பற்றியும், “கரணம் தப்பினால் மரணம்” என்று கரணம் பற்றியும், “நட்சத்திரம் பார்த்து காரியம் தொடங்கினால் அச்சமின்றி வாழலாம்” என்று நட்சத்திரம் பற்றியும் நமது முன்னோர்கள் சொல்லி வைத்திருக் கிறார்கள்.

இவற்றுள் திதியின் வலிமையை அறிந்து கொள்ள வேண்டுமானால், ஏகாதசி, சதுர்த்தி, சஷ்டி, பஞ்சமி, அஷ்டமி ஆகிய நாட்களில் அவற்றிற்குரிய தெய்வங்களுக்கு சிறப்பு பூஜை செய்வதன் மூலம் தெரிந்து கொள்ளலாம். விதிக்கப்பட்ட விதியை மாற்றுகின்ற ஆற்றல் சஷ்டி திதிக்கு உண்டு. விநாயகப் பெருமானுக்கு `சதுர்த்தி’ திதி உகந்தது போல, முருகப்பெருமானுக்கு ‘சஷ்டி’ திதி உகந்தது. ஒரு சிலர் அமாவாசை முடிந்த மறுநாள் முதல் தொடங்கி, ஆறு நாட்களும் விரதமிருந்து சஷ்டிஅன்று விரதத்தைப் பூர்த்தி செய்வர். 6 நாட்கள் விரதம் இருக்க இயலாதவர்கள் சஷ்டி அன்று மட்டுமாவது விரதமிருந்து எதிர்பார்த்த பலனை அடையலாம்.

‘சஷ்டியில் இருந்தால் அகப்பையில் வரும்’ என்பது பழமொழி. அதாவது சஷ்டி திதியில் விரதமிருந்து முருகப்பெருமானை நினைத்து வழிபட்டால் பிள்ளைப்பேறு கிடைக்காதவர்களுக்கு ‘அகப்பை’ எனப்படும் கருப்பையில் பிள்ளைப்பேறு உண்டாகும் என்பது இதன் பொருள். இந்த விரதம் மேற்கொள்வதற்கு உகந்த நாள் ஐப்பசி மாதம் வருகின்ற கந்த சஷ்டியாகும்.

பிள்ளைச் செல்வம் பெறுவதில் தடை உள்ளவர்கள், கடைப்பிடிக்க வேண்டிய விரதம் இதுவாகும். சந்தான விருத்தி வேண்டுமானால் சஷ்டி விரதம் இருக்க வேண்டும். அது புத்திர சந்தானத்தைப் பெற வழிவகுக்கும். இந்த விரதம் மக்கள் செல்வத்தை வழங்கும் மகத்தான விரதமாகும்.

இந்த ஆண்டுக்கான கந்தசஷ்டி தினம் ஐப்பசி மாதம் 16-ந் தேதி (2-11-2019) சனிக்கிழமை வருகிறது. அன்றைய தினம் அதிகாலையில் குளித்து தூய உடை அணிந்து, கந்தப்பெருமானை கவசம் பாடி வழிபட்டால் வந்த துயர் விலகும். சஷ்டி கவம், சண்முக கவசம் ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றை பாடி, பஞ்சமுக விளக்கேற்றி கந்தனுக்கு பிடித்த அப்பமான கந்தரப்பத்தையும், பாசிப் பருப்பு பாயசத்தையும் நைவேத்தியமாக படைத்து வழிபட வேண்டும். அன்று முழுவதும் இனிப்புப் பொருள் மட்டுமே ஓரளவு உட்கொள்வதோடு, சிவாலயத்திற்குச் சென்று முருகப்பெருமானுக்கு நடை பெறும் அபிஷேக, ஆராதனை களைக் கண்டு வழிபடுங்கள். அன்றைய தினம் மாலை சூரசம்ஹார விழா நடைபெறும். முருகப்பெருமான் செந்தூரில் ‘சூரசம்ஹாரம்’ செய்ததாக புராணங்கள் சொல்கின்றன.

வாழ்க்கையை வளப்படுத்த விரதங்கள் எத்தனையோ இருக்கின்றன. அவற்றில் நம்முடைய வாழ்க்கைக்கு எந்த விரதத்தை கடைப்பிடிக்க வேண்டுமோ அவற்றைத் தேர்ந்தெடுத்துக் கடைப்பிடித்தால் வளர்ச்சி வந்துசேரும்; வருமானமும் பெருகும்.

சஷ்டியன்று திருச்செந்தூரில் பல லட்சக் கணக்கான பக்தர்கள் ஒன்று கூடி முருகப்பெருமானை வழிபாடு செய்வார்கள். ‘திருச்செந்தூரின் கடலோரத்தில் செந்தில்நாதன் அரசாங்கம். தேடித் தேடி வருவோர்க்கெல்லாம் தினமும் கூடும் தெய்வாம்சம்’ என்று கவியரசு கண்ணதாசன் வர்ணித்திருக்கிறார். அப்படிப்பட்ட தெய்வாம்சம் நமக்குக் கிடைக்க, திருவருள் கைகூட, குருபீடமாக விளங்கும் திருச்செந்தூருக்குச் சென்று முருகப்பெருமானை வழிபட்டு வரலாம். அருகில் இருக்கும் கந்தப்பெருமானின் ஆலயங்களுக்கும் சென்று வழிபடலாம். வீட்டிலுள்ள பூஜை அறையிலும் வள்ளி-தெய்வானை சமேத ஆறுமுகப்பெருமான் படத்தை வைத்து வழிபாடு செய்யலாம்.

குழந்தைச் செல்வம் மட்டுமல்லாமல், புகழ், கீர்த்தி, செல்வாக்கு ஆகிய அத்தனையும் நமக்குக் கிடைக்கவும், செல்வச் செழிப்புடன் வாழவும் நாம் அனைவரும் இந்த சஷ்டி விரதத்தைக் கடைப்பிடிக்க வேண்டும்.

‘சுக்குக்கு மிஞ்சிய மருந்தும் இல்லை. சுப்ரமணியருக்கு மிஞ்சிய தெய்வமும் இல்லை’ என்பது முன்னோர் மொழி. கந்தசஷ்டி அன்று விரதமிருந்து அந்த ஆறுமுகப் பெருமானை வழிபட்டு அனைத்து யோகங்களையும் பெறுவோம்.

‘ஜோதிடக்கலைமணி’ சிவல்புரி சிங்காரம்
Tags:    

Similar News