செய்திகள்
தென்கொரியா செய்தி சேனலில் வடகொரியாவின் ஏவுகணை சோதனை குறித்த செய்தி ஒளிபரப்பானதை காட்டும் படம்.

வடகொரியா மீண்டும் ஏவுகணை சோதனை

Published On 2021-09-29 01:55 GMT   |   Update On 2021-09-29 01:55 GMT
வடகொரியா சோதித்த ஏவுகணை ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலால் தடைசெய்யப்பட்ட கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை என ஜப்பான் பிரதமர் யோஷிஹைட் சுகா குற்றம்சாட்டியுள்ளார்.
சியோல் :

ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் தீர்மானங்களை மீறியும் சர்வதேச நாடுகளின் எதிர்ப்புகளுக்கு மத்தியிலும் வடகொரியா அணு ஆயுதங்கள் மற்றும் ஏவுகணைகளை தொடர்ச்சியாக சோதித்து அண்டை நாடுகளை அச்சுறுத்தி வந்தது.

எனினும் இந்த விவகாரம் தொடர்பாக கடந்த 2018-ம் ஆண்டு அமெரிக்காவின் அப்போதைய ஜனாதிபதி டிரம்ப் மற்றும் வடகொரியா தலைவர் கிம் ஜாங் அன் ஆகிய இருவரும் முதல் முறையாக நேரில் சந்தித்து பேசிய பிறகு வடகொரியாவின் போக்கு மாறியது.

அணு ஆயுதங்கள் மற்றும் ஏவுகணைகளை சோதிப்பதை வடகொரியா நிறுத்தியது. ஆனால் கடந்த 2019-ம் ஆண்டு அமெரிக்காவுடனான அணு ஆயுத பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்ததால் வடகொரியா மீண்டும் ஏவுகணை சோதனைக்கு திரும்பியது.

அந்த வகையில் கடந்த சில வாரங்களாக வடகொரியா அடுத்தடுத்து புதிய ஏவுகணைகளை ஏவி சோதித்து வருகிறது. இதில் நடுத்தர, தொலைதூர மற்றும் ரெயிலில் இருந்து ஏவக்கூடிய ஏவுகணைகளும் அடங்கும்.

அதன் தொடர்ச்சியாக வடகொரியா நேற்று புதிய குறுகிய தூர ஏவுகணையை சோதித்தது. வடகொரியாவின் வடக்கு பகுதியில் அமைந்துள்ள ஜகாங் மாகாணத்தில் உள்ள மலைப்பாங்கான பகுதியில் இருந்து கிழக்கு கடற்கரையை நோக்கி இந்த ஏவுகணை ஏவப்பட்டதாக தென்கொரியா ராணுவம் தெரிவித்துள்ளது.

அதேவேளையில் வடகொரியா சோதித்த ஏவுகணை ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலால் தடைசெய்யப்பட்ட கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை என ஜப்பான் பிரதமர் யோஷிஹைட் சுகா குற்றம்சாட்டியுள்ளார்.
Tags:    

Similar News