செய்திகள்
கோப்புப்படம்

உயரும் பலி எண்ணிக்கை- இந்தியாவில் ஒரே நாளில் 6,148 பேர் உயிரிழப்பு

Published On 2021-06-10 05:38 GMT   |   Update On 2021-06-10 05:38 GMT
மத்திய சுகாதாரத்துறை இன்று காலை வெளியிட்ட அறிக்கையில், நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 94,052 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதுடெல்லி:

இந்தியாவில் கொரோனா 2-ம் அலை சரிந்து வரும் நிலையில், தொடர்ந்து 3-வது நாளாக நேற்றும் பாதிப்பு 1 லட்சத்திற்கும் கீழ் குறைந்தது.

இதுதொடர்பாக மத்திய சுகாதாரத்துறை இன்று காலை வெளியிட்ட அறிக்கையில், நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 94,052 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் மொத்த பாதிப்பு 2 கோடியே 91 லட்சத்து 83 ஆயிரத்து 121 ஆக உயர்ந்தது.

நேற்று அதிகபட்சமாக தமிழ்நாட்டில் 17,321, கேரளாவில் 16,204, மராட்டியத்தில் 10,989, கர்நாடகாவில் 10,959, ஆந்திராவில் 8,766, மேற்கு வங்கத்தில் 5,384, ஒடிசாவில் 6,019 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டது.

இதுவரை மராட்டியத்தில் 58,63,880, கர்நாடகாவில் 27,28,248, கேரளாவில் 26,74,166, தமிழ்நாட்டில் 22,92,025, ஆந்திராவில் 17,79,773, உத்தரபிரதேசத்தில் 17,00,476, மேற்குவங்கத்தில் 14,42,830, டெல்லியில் 14,30,128 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மற்ற மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் பாதிப்பு 10 லட்சத்திற்கும் குறைவாக உள்ளது.

2-ம் அலையில் கடந்த மாதம் பலி எண்ணிக்கை கடுமையாக உயர்ந்தது. எனினும் சில மாநிலங்களில் கொரோனா மரணங்கள் மாநிலங்களின் பட்டியலில் சேர்க்கப்படவில்லை என்ற புகார்கள் எழுந்தன.

இதுதொடர்பாக குழு அமைக்கப்பட்டு ஆய்வு நடத்தப்பட்ட நிலையில் பீகார், மராட்டிய மாநிலங்களில் விடுபட்ட மரணங்கள் தற்போது சுகாதாரத்துறை பட்டியலில் சேர்க்கப்பட்டு வருகிறது.

அந்தவகையில் நேற்று பீகார் மாநில பட்டியலில் விடுபட்ட மரணங்கள் உள்பட 3,971, மராட்டியத்தில் 661 இறப்புகள் பட்டியலில் சேர்க்கப்பட்டது.

இதுதவிர தமிழ்நாட்டில் 405, கர்நாடகாவில் 192, கேரளாவில் 156 பேர் நேற்று இறந்துள்ளனர். இதனால் நேற்று ஒரேநாளில் 6,148 மரணங்கள் சேர்க்கப்பட்டது. இதன்மூலம் மொத்த பலி எண்ணிக்கை 3,59,676 ஆக உயர்ந்தது.


இதில் அதிகபட்சமாக மராட்டியத்தில் 1,01,833, கர்நாடகாவில் 32,291, கேரளாவில் 10,437, தமிழ்நாட்டில் 28,170, ஆந்திராவில் 11,696, உத்தரபிரதேசத்தில் 21,516, மேற்குவங்கத்தில் 16,555, டெல்லியில் 24,704, சத்தீஸ்கரில் 13,271, பஞ்சாபில் 15,293 பேர் அடங்குவர்.

இதற்கிடையே நேற்று கொரோனா பாதிப்பில் இருந்து 1,51,367 பேர் மீண்டுள்ளனர்.

இதுவரை குணம் அடைந்தோரின் எண்ணிக்கை 2 கோடியே 76 லட்சத்து 55 ஆயிரத்து 493 ஆக உயர்ந்தது. தற்போது ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 11,67,952 ஆக குறைந்துள்ளது.

இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தகவல்படி, நேற்று 20,04,690 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

இதுவரை மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகளின் மொத்த எண்ணிக்கை 37.21 கோடியாக உயர்ந்தது.

Tags:    

Similar News