பெண்கள் மருத்துவம்
மாதவிடாய் காலத்தில் உடற்பயிற்சி செய்கிறீர்களா?

மாதவிடாய் காலத்தில் உடற்பயிற்சி செய்கிறீர்களா?

Published On 2021-12-22 02:47 GMT   |   Update On 2021-12-22 08:26 GMT
மாதவிடாய் காலத்தில் கடினமான உடற்பயிற்சிகளை தவிர்த்து எளிமையான பயிற்சிகளை மேற்கொள்ளலாம். எந்தெந்த உடற்பயிற்சிகளை மேற்கொள்ளலாம்? எதை தவிர்க்கலாம் என்பது குறித்து பார்ப்போம்.
மாதவிடாய் காலத்தில் ரத்தப்போக்கு மட்டுமின்றி தசைப்பிடிப்பு, வயிற்று வலி, சோர்வு, மன அழுத்தம் போன்ற பிரச்சினைகள் ஏற்படுவதுண்டு. அந்த சமயத்தில் உடலுக்கும், மனதுக்கும் முழு ஓய்வு தேவைப்படும்.

உடற்பயிற்சி மீது நாட்டம் கொண்டவர்கள் கூட உடலுக்கு ஓய்வு கொடுக்க விரும்புவார்கள். அப்படி அறவே உடற்பயிற்சியை தவிர்க்க வேண்டியதில்லை. கடினமான உடற்பயிற்சிகளை தவிர்த்து எளிமையான பயிற்சிகளை மேற்கொள்ளலாம். எந்தெந்த உடற்பயிற்சிகளை மேற்கொள்ளலாம்? எதை தவிர்க்கலாம் என்பது குறித்து பார்ப்போம்.

இலகுவான நடை: வழக்கமாக மேற்கொள்ளும் நடைப்பயிற்சியின் வேகத்தை குறைக்க வேண்டும். இந்த நடைப்பயிற்சிக்கு நேரம் ஒதுக்க வேண்டியதும் இல்லை. இயல்பாக வெளியே செல்லுங்கள். கால்களுக்கு அழுத்தம் கொடுக்காமல் மென்மையாக நடங்கள். மனதுக்கு பிடித்தமான இடங்களை சுற்றி பாருங்கள். கால்கள் சோர்வு அடையும் வரை நடக்காதீர்கள். சிறிது நேரம் நடந்துவிட்டு இளைப்பாறுங்கள்.

வலிமைப் பயிற்சி: உடலுக்கு வலிமை சேர்க்கும் பயிற்சிகளை மேற்கொண்டு வருவது கட்டுடலை பேண உதவும். சரும அழகையும் மேம் படுத்த வழிவகுக்கும். மாதவிடாய் காலத்தில் ஆரோக்கியத்துடன் செயல்படுவதற்கும் உதவும். எனினும் மாதவிடாய் காலத்தில் அத்தகைய கடுமையான பயிற்சிகளை மேற்கொள்ள வேண்டியதில்லை. அதிக எடை கொண்ட உபகரணங்களை பயன்படுத்தி பயிற்சி மேற்கொள்வதை தவிர்க்க வேண்டும். உடல் ஒத்துழைக்கும் என்றால் குறைந்த எடை கொண்ட சாதனங்களை பயன்படுத்தி இலகுவான பயிற்சிகளை செய்யலாம்.

கார்டியோ பயிற்சி: மாதவிடாய் முடிவடையும் கால கட்டம் நெருங்கும்போது நீச்சல், ஜாகிங் அல்லது சைக்கிள் ஓட்டுதல் போன்ற லேசான கார்டியோ பயிற்சிகளை மேற்கொள்வது நல்லது என்று கருதப்படுகிறது. இந்த பயிற்சிகள் நுரையீரல் சிறப்பாக செயல்படுவதற்கு வழிவகுக்கும்.

யோகா: மாதவிடாய் சமயத்தில் கண்டிப்பாக மேற்கொள்ள வேண்டிய பயிற்சிகளுள் ஒன்று யோகா. இது உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் பலன் தரக்கூடியது. அதிலும் மாதவிடாய் காலத்தில் கூடுதல் நன்மைகளை வழங்கும். குறிப்பாக அந்த சமயத்தில் உடலையும், மனதையும் சுறு சுறுப்பாக வைத்திருக்க உதவும். தசைகளுக்கும் வலிமை சேர்க்கும். மனநிலை மாற்றம், பசி, சோர்வு, எரிச்சல், மன அழுத்தம் உட்பட பல்வேறு அறிகுறிகளை வெளிப்படுத்தும். மாதவிடாய்க்கு முந்தைய நோய் அறிகுறியான பி.எம்.எஸ். பாதிப்பின் தன்மையை குறைக்க உதவும்.

இந்த லேசான பயிற்சிகள் மாதவிடாய் காலத்தில் ஏற்படும் தசை வலி, தசை பிடிப்பு மற்றும் சோர்வு ஆகியவற்றைக் குறைக்க உதவும்.
Tags:    

Similar News