உள்ளூர் செய்திகள்
கைது

லஞ்சம் வாங்கிய பெண் நில அளவையர் கைது

Published On 2021-12-31 10:05 GMT   |   Update On 2021-12-31 10:05 GMT
உசிலம்பட்டியில் லஞ்சம் வாங்கிய பெண் நில அளவையர் கைது செய்யப்பட்ட சம்பவம் அந்தப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
உசிலம்பட்டி:

மதுரை மாவட்டம், உசிலம்பட்டியில் தேனி ரோட்டில் அளவையர் துறை அலுவலகம் உள்ளது. இங்கு உசிலம்பட்டியைச் சேர்ந்த வினோதன் மனைவி காஞ்சனா நில அளவையராக பணியாற்றி வருகிறார்.

சில நாட்களுக்கு முன்பு நக்கலப்பட்டி ஊராட்சி பூச்சிப்பட்டியைச் சேர்ந்த ரஞ்சித்குமார் என்பவர் பட்டா பெறுவது தொடர்பாக நிலத்தை அளந்து தருமாறு விண்ணப்பித்துள்ளார்.

நிலத்தை அளக்க காஞ்சனா ரூ.4 ஆயிரம் லஞ்சம் கேட்டதாக கூறப்படுகிறது. ரஞ்சித்குமாருக்கு லஞ்சம் கொடுக்க விருப்பம் இல்லை. இது தொடர்பாக அவர் மதுரை மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் செய்தார்.

டி.எஸ்.பி. சத்தியசீலன் உத்தரவின் பேரில் ரசாயனம் கலந்த பணத்தை இன்று ரஞ்சித்குமார் நில அளவையர் காஞ்சனாவிடம் வழங்கினார்.

அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு இன்ஸ்பெக்டர் ரமேஷ் பிரபு தலைமையிலான போலீசார் காஞ்சனாவை கையும், களவுமாக பிடித்து கைது செய்தனர். இந்த சம்பவம் அந்தப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Tags:    

Similar News