செய்திகள்
ஜிஎஸ்எல்வி எப்10

பூமி கண்காணிப்பு செயற்கைகோளுடன் ஜிஎஸ்எல்வி ராக்கெட் 5ந்தேதி விண்ணில் ஏவப்படுகிறது

Published On 2020-02-27 03:09 GMT   |   Update On 2020-02-27 03:09 GMT
பூமி கண்காணிப்புக்கான ஜிசாட்-1 செயற்கைகோள் ஜி.எஸ்.எல்.வி-எப்10 ராக்கெட் மூலம் வரும் 5-ந்தேதி விண்ணில் ஏவப்படுகிறது. இதற்கான ஆயத்தப்பணியில் இஸ்ரோ விஞ்ஞானிகள் ஈடுபட்டு உள்ளனர்.
சென்னை:

இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் (இஸ்ரோ) பி.எஸ்.எல்.வி. மற்றும் ஜி.எஸ்.எல்.வி. வகை ராக்கெட்டுகளை தயாரித்து அவற்றில் செயற்கைகோள்களை பொருத்தி விண்ணில் செலுத்தி வருகிறது. பூமி கண்காணிப்பு, காலநிலை மாற்றத்தை முன்கூட்டியே அறிந்து கொள்வது உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்கான செயற்கைகோள்கள் வடிவமைக்கப்பட்டு வருகிறது.

அந்தவகையில் தற்போது பூமி கண்காணிப்புக்காக ஜிசாட்-1 என்ற செயற்கைகோளை இஸ்ரோ தயாரித்து உள்ளது. இதனை ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஸ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் உள்ள 2-வது ஏவுதளத்தில் இருந்து ஜி.எஸ்.எல்.வி-எப்10 என்ற ராக்கெட் மூலம் வரும் 5-ந்தேதி (வியாழக்கிழமை) மாலை 5.43 மணிக்கு விண்ணில் ஏவப்படுகிறது.



இதுகுறித்து இஸ்ரோ மூத்த விஞ்ஞானிகள் கூறியதாவது:-

பூமி கண்காணிப்புக்காக 2 ஆயிரத்து 268 கிலோ எடை கொண்ட ஜிசாட்-1 என்ற செயற்கைகோள் தயாரிக்கப்பட்டு உள்ளது. இந்த செயற்கைகோள் பூமியில் இருந்து புறப்பட்ட 18-வது நிமிடத்தில் 170 கிலோ மீட்டர் உயரத்தில் புவி வட்டபாதையில் நிலைநிறுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டு உள்ளது. ஜியோ இமேஜிங் என்று அழைக்கப்படும் அதிநவீன தொழில்நுட்பத்துடன் கூடிய செயற்கைகோளாகும். வானிலை நிலமைகளுக்கு உட்பட்டு 5-ந்தேதி மாலை 5.43 மணிக்கு விண்ணில் ஏவப்படுகிறது.

2020-ம் ஆண்டு ஏவப்படும் முதல் ராக்கெட் மற்றும் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட கிரேயோஜெனிக் என்ஜின் பொருத்தப்பட்ட 8-வது ராக்கெட் என்ற பெருமையும் பெருகிறது. ஜி.எஸ்.எல்.வி. வகையில் 14-வது ராக்கெட் என்பதுடன், ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து ஏவப்படும் 76-வது ராக்கெட்டாகும்.

இந்த ராக்கெட்டில் முதல் முறையாக 4 மீட்டர் விட்டம் கொண்ட ‘ஆகிவ் வடிவ பேலோட் பேரிங்’ என்று அழைக்கப்படும் வெப்ப கவசம் பொருத்தப்பட்டு உள்ளது. ராக்கெட் ஏவுவதற்கான ஆயத்தப்பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறோம். இறுதிக்கட்டபணியான கவுண்ட்டவுன் ஓரிரு நாட்களில் தொடங்க வாய்ப்பு உள்ளது.

இவ்வாறு விஞ்ஞானிகள் கூறினார்கள்.
Tags:    

Similar News