ஆன்மிகம்
கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் ஆடி களப பூஜை

கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் ஆடி களப பூஜை

Published On 2021-08-04 08:03 GMT   |   Update On 2021-08-04 08:03 GMT
கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் இந்த ஆண்டுக்கான களப பூஜை தொடங்கியது. கொரோனா கட்டுப்பாடு காரணமாக பக்தர்கள் யாரும் அனுமதிக்கப்படவில்லை.
கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் ஆண்டுதோறும் ஆடி மாதம் 12 நாட்கள் களப பூஜை நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டுக்கான களப பூஜை நேற்று முன்தினம் தொடங்கி. 13-ந் தேதி வரை நடக்கிறது. முதல்நாள் காலை 10 மணிக்கு திருவாவடுதுறை ஆதீனம் சார்பில் மடாதிபதி திருக்கைலாய பரம்பரை 24-வது குரு மகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ அம்பலவாண தேசிக பரமாச்சாரிய சுவாமி முன்னிலையில் தங்க குடத்தினால் அம்மனுக்கு களபாபிஷேகம் நடைபெற்றது. அம்மனுக்கு பல வகையான அபிஷேகங்கள் செய்யப்பட்ட பின்பு வைர கிரீடம், வைரக்கல் மூக்குத்தி மற்றும் தங்க ஆபரணங்கள் அணிவிக்கப்பட்டு சந்தனகாப்பு அலங்காரத்துடன் அம்மன் அருள்பாலிக்கும் நிகழ்ச்சி நடந்தது.

மாலையில் சாயரட்சை தீபாராதனை, இரவு புஷ்பாபிஷேகம், அம்மனை வெள்ளி பல்லக்கில் எழுந்தருளச் செய்து கோவிலின் உள் பிரகாரத்தை சுற்றி மேளதாளம் முழங்க 3 முறை வலம் வரச் செய்யும் நிகழ்ச்சி, வெள்ளி சிம்மாசனத்தில் அம்மனுக்கு தாலாட்டு நிகழ்ச்சி போன்றவை நடந்தது.

மேலும் ஆடி கிருத்திகையை முன்னிட்டு அம்மன் கொலு மண்டபத்தில் எழுந்தருள செய்து சிறப்பு தீபாராதனை நடத்தப்பட்டது. கொரோனா கட்டுப்பாடு காரணமாக பக்தர்கள் யாரும் அனுமதிக்கப்படவில்லை.

இதற்கான ஏற்பாடுகளை கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் மேலாளர் ஆறுமுகநயினார் தலைமையில் கோவில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.
Tags:    

Similar News