செய்திகள்
பொக்லின் மூலம் இடிக்கப்பட்ட பங்களா சுற்றுச்சுவர்

17 பேர் பலியான நடூர் கிராமத்தில் 4 பங்களாக்கள் சுவர் இடித்து அகற்றம்

Published On 2019-12-06 06:34 GMT   |   Update On 2019-12-06 06:34 GMT
17 பேர் பலியான மேட்டுப்பாளையம் நடூர் கிராமத்தில் 4 பங்களாக்கள் சுற்றுச்சுவர் இடித்து அகற்றப்பட்டது.
காரமடை:

மேட்டுப்பாளையம் நடூர் ஏ.டி. காலனியில் துணிக்கடை உரிமையாளர் சிவசுப்ரமணியன் என்பவரது வீட்டின் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்ததில் 17 பேர் இறந்தனர்.

இதனை தொடர்ந்து இப்பகுதி பொதுமக்கள், குடியிருப்பு பகுதிகளில் உள்ள சுற்றுச்சுவர் உயரமாக இருப்பதால் ஆபத்தை ஏற்படுத்தும். சுவரின் உயரத்தை குறைக்கும்படி நகராட்சி கமி‌ஷனர் மற்றும் கலெக்டருக்கு மனு அனுப்பினர். இதைத் தொடர்ந்து மாவட்ட நிர்வாகம் துணிக்கடை உரிமையாளர் சிவ சுப்பிரமணியன் வீட்டின் சுற்றுச் சுவர் மற்றும் அதனை சுற்றி உயரமாக கட்டப்பட்ட 4 பங்களாக்கள் சுற்று சுவரை இடிக்க உத்தரவிட்டது.

அதன்படி நேற்று காலை 2 பொக்லைன் எந்திரங்களை பயன்படுத்தி சுவர் இடிக்கப்பட்டது. முதலில் நடூர் முதல் வீதியில் சுப்பிரமணியனுக்கு சொந்தமான 15 அடி உயரம் 252 அடி நீளமுள்ள சுற்றுச்சுவர் இடிக்கப்பட்டது. 2-வது வீதியில் தங்கவேல் என்பவருக்கு சொந்தமான 151 அடி நீள சுவரும், 3-வது வீதியில் ராஜேந்திரனுக்கு சொந்தமான 88 அடி நீளம் சுவரும் இடிக்கப்பட்டது.

மேலும் 17 பேர் பலிக்கு காரணமாக இருந்த சிவ சுப்பிரமணியனுக்கு சொந்தமான 21அடி உயரம் 87 அடி நீளமுள்ள சுவற்றையும் இடித்தனர். மொத்தம் 578 அடி நீளமுள்ள சுற்றுச்சுவர் இடிக்கப்பட்டது.

இதற்கு வீட்டின் உரிமையாளர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். அவர்கள் கூறும்போது, எங்களுக்கு எவ்வித முன் அறிவிப்பு கொடுக்கவில்லை. சுவற்றை பாதியளவு இடிக்கலாம். ஆனால் முற்றிலும் இடித்து விட்டனர். இதனால் எங்களுக்கு பாதுகாப்பு இருக்காது. இப்பிரச்சனைக்கு அதிகாரிகள் தீர்வு காண வேண்டும் என்றனர்.



Tags:    

Similar News