செய்திகள்
புதிதாக அமைக்கப்பட்ட ஆக்சிஜன் உற்பத்தி மையத்தை அமைச்சர் பெரியகருப்பன் திறந்து வைத்தார்

ரூ.1 கோடியில் ஆக்சிஜன் உற்பத்தி மையம் - அமைச்சர் பெரியகருப்பன் திறந்து வைத்தார்

Published On 2021-10-08 11:59 GMT   |   Update On 2021-10-08 11:59 GMT
சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ரூ.1 கோடி மதிப்பீட்டில் புதிதாக அமைக்கப்பட்ட ஆக்சிஜன் உற்பத்தி மையத்தை அமைச்சர் பெரியகருப்பன் திறந்து வைத்தார்.
சிவகங்கை:

சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ரூ.1 கோடி மதிப்பீட்டில் புதியதாக அமைக்கபட்ட ஆக்சிஜன் உற்பத்தி மையம் திறப்பு விழா மாவட்ட கலெக்டர் மதுசூதன் ரெட்டி, தலைமையில் நடைபெற்றது. மானாமதுரை எம்.எல்.ஏ. தமிழரசி முன்னிலை வகித்தார். ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் கே.ஆர். பெரியகருப்பன் புதிதாக அமைக்கப்பட்ட ரூ.1 கோடி மதிப்பீட்டிலான ஆக்சிஜன் உற்பத்தி மையத்தை திறந்து வைத்தார். பின்னர் அவர் கூறியதாவது:-

கொரோனா நோய்த்தொற்று உச்சத்திலிருந்த முதலாம் அலையிலும், இரண்டாம் அலையிலும் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை வழங்குவதற்கு ஆக்சிஜன் இன்றியமையாத ஒன்றாக இருந்து வந்தது. . ஆங்காங்கே தற்காலிக ஆக்சிஜன் உற்பத்தித்திறன்கள் மற்றும் ஆக்சிஜன் கலன்கள் பெறப்பட்டு தேவையான சிகிச்சையினை வழங்கி மக்களை தமிழக அரசு பாதுகாத்தது. தற்போது மீண்டும் அந்தநிலை வராத வண்ணம் ஆங்காங்கே காற்றிலிருந்து ஆக்சிஜன் தயாரித்து மருத்துவச் சிகிச்சை பயன்படுத்தும் வகையில் மத்திய அரசும், மாநில அரசும் இணைந்து இத்திட்டத்தை தொடங்கி உள்ளது.

தமிழகம் முழுவதும் 70 மருத்துவமனைகளில் தலா ரூ.1 கோடி மதிப்பீட்டில் ஆக்சிஜன் உற்பத்தி மையம் தொடங்கப்பட்டுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் சிவகங்கை மற்றும் காரைக்குடி ஆகிய 2 ஊர்களில் இந்த மையம் தொடங்கபட்டுள்ளது. அதன்மூலம் ஒரு நிமிடத்திற்கு 1,000 லிட்டர் இயற்கையாக காற்றிலிருந்து ஆக்சிஜன் தயாரிக்கும் வகையில் தொடங்கப்பட்டுள்ளது.

இந்தநிகழ்ச்சியில் சிவகங்கை மருத்துவ கல்லூரி முதல்வர் ரேவதிபாலன், மருத்துவமனை கண்காணிப்பாளர் பாலமுருகன், அரசு மருத்துவ அலுவலர் டாக்டர் முகம்மது ரபி, உதவி மருத்துவர் மிதுன், சிவகங்கை ஊராட்சி ஒன்றிய தலைவர் மஞ்சுளா பாலசந்தர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News