செய்திகள்
முக ஸ்டாலின்

ரூ.5.70 லட்சம் கோடி கடன் சுமை: தமிழக அரசு நிதி நெருக்கடியை உருவாக்கி உள்ளது- முக ஸ்டாலின் அறிக்கை

Published On 2021-02-23 09:19 GMT   |   Update On 2021-02-23 09:19 GMT
தமிழக அரசு நிதி நெருக்கடியை உருவாக்கி உள்ளது என்று திமுக தலைவர் முக ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

சென்னை:

தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

நாட்டு மக்களின் நலனை அறவே புறக்கணித்து, தொடர்ந்து முறைகேடுகள் செய்து, தம்மையும் தம்மைத் தாங்கிப் பிடிக்கும் பினாமிகளையும் மேலும் மேலும் வளப்படுத்திக் கொள்வதற்காகவே, கடன் வாங்கி, தமிழக மக்கள் தலையில் 5.70 லட்சம் கோடி ரூபாய் கடனைச் சுமத்தியுள்ள முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் நிதி அமைச்சரும் துணை முதல்- அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் ஆகியோருக்கு, கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

6-வது சம்பளக் கமி‌ஷனை அமல்படுத்தி பொருளாதார தேக்க நிலைமை இருந்த நிதியாண்டில் கூட, உபரி நிதிநிலை அறிக்கையை விட்டுச் சென்றது திராவிட முன்னேற்றக் கழக ஆட்சி.

ஆனால் 10 ஆண்டுகால அ.தி.மு.க. ஆட்சியில் தொடர் வருவாய்ப் பற்றாக்குறை, நிதிப் பற்றாக்குறை என்று எல்லா நிலைகளிலும், மிக மோசமானதொரு நிதி நிர்வாகத்தைக் கையாண்டு வருமானத்திற்கு மீறிய சொத்துக்குவிப்புப் புகாருக்கு உள்ளாகியுள்ள நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வமும், முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியும் தமிழக மக்களுக்கு, என்றும் எளிதில் நீங்காத மாபெரும் நிதிப்பேரிடரையும், நிதி நெருக்கடியையும் உருவாக்கி விட்டார்கள்.

தமிழக மக்களின் பேராதரவுடன், தி.மு.க. ஆட்சிப் பொறுப்பேற்றதும் “ஊழலுக்கு இணைந்த அ.தி.மு.க.வின் இந்தக் கறைபடிந்த கரங்கள்” ஒரு அரசின் செலவுகளில், கடனுக்கு வட்டி கட்டுவதே இரண்டாவது பெரிய செலவு என்ற அளவிற்கு நிதி மேலாண்மையில் ஏற்படுத்தியுள்ள அனைத்து முறைகேடுகளையும் விசாரித்து உரிய நடவடிக்கை எடுத்து தமிழகத்தின் நிதி நிலைமை தமிழக மக்களுக்காக தமிழகத்தின் முன்னேற்றத்திற்காக என்பதை உறுதிப்படுத்திடும் வகையில் வேகமாகச் சீரமைக்கப்படும் என்று தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

Tags:    

Similar News