செய்திகள்
குட்டியானை

மயக்க ஊசி செலுத்தி பிடிக்கப்பட்ட குட்டி யானை தாயுடன் சேர்ந்தது

Published On 2020-01-13 17:31 GMT   |   Update On 2020-01-13 17:31 GMT
சூளகிரி அருகே மயக்க ஊசி செலுத்தி பிடிக்கப்பட்ட குட்டி யானை தாயுடன் சேர்ந்தது. தற்போது யானை கூட்டத்துடன் அந்த குட்டி யானையும் சேர்ந்து சுற்றி வருகிறது.
ராயக்கோட்டை:

கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரியை அடுத்த உத்தனப்பள்ளி அருகே உள்ள சானமாவு காட்டுப் பகுதியில்  60-க்கும் மேற்பட்ட யானைகள் சுற்றி திரிகின்றன. அப்போது அந்த கூட்டத்தில் இருந்து பிரிந்து வந்த 8 மாத குட்டி பெண் யானை அகரம் கிராமத்திற்குள் புகுந்தது. பொதுமக்களை பார்த்ததும் அங்கும் இங்கும் ஓடியது. 

பின்னர் கோரைபுல் பயிரிடப்பட்டு இருந்த விவசாய நிலத்திற்குள் புகுந்த அந்த குட்டி யானையை வனத்துறையினரும் கால்நடை டாக்டரும் மயக்க ஊசி போட்டு பிடித்தனர். பின்னர் அந்த குட்டி யானையை லாரியில் ஏற்றிச் சென்று சானமாவு காட்டில் விடுவித்தனர். இரவில் மயக்கம் தெளிந்த அந்த குட்டி யானை தாய் யானையுடன் சேர்ந்தது. தற்போது யானை கூட்டத்துடன் அந்த குட்டி யானையும் சேர்ந்து சுற்றி வருகிறது.

இதேபோல கடந்த 2016-ம் ஆண்டு ஜூலை மாதம் கெலமங்கலம் அருகே தடுப்பு பள்ளத்தில் ஒரு குட்டி யானை தவறி விழுந்தது. அந்த யானையை கிராம மக்கள் உதவியுடன் வனத்துறையினர் மீட்டு காட்டுக்குள் விட்டனர். அந்த யானை தாயுடன் சேர்ந்தது. 

கடந்த 2017-ம் ஆண்டு மே மாதம் ஒரு யானை மின்சாரம் தாக்கி இறந்தது. அதன் குட்டி 2 மாதங்களாக வனத்துறை பராமரிப்பில் இருந்தது. பின்னர் அந்த யானையை காட்டில் விட முயற்சித்தனர். ஆனால் மற்ற யானைகள் அந்த குட்டி யானையை கூட்டத்தில் சேர்க்கவில்லை. இதனால் அந்த குட்டி யானையை மீட்டு சென்னை வண்டலூர் பூங்காவில் வைத்து பராமரித்து வருகிறார்கள்.

கடந்த 2018-ம் ஆண்டு ஜனவரி மாதம் 9-ந் தேதி உத்தனப்பள்ளி அனுமந்த புரத்தில் பிறந்து ஒரு வாரமே ஆன ஆண் குட்டி யானை வழி தவறிவந்து ஏரி சேற்றில் சிக்கி உயிர் இழந்தது. 

அதே ஆண்டில் ஜனவரி மாதம்  ராயக்கோட்டை அருகே பாவாரப்பட்டியில் கிணற்றில் விழுந்த குட்டி யானையை வனத்துறையினர் மீட்டு யானை கூட்டத்தில் சேர்க்க முயன்றனர். ஆனால் அந்த குட்டி யானையை மற்ற யானைகள் காலால் மிதித்து கொன்று விட்டன. தற்போது வழி தவறிவந்த குட்டி யானையை தாய் யானை அரவணைத்துக் கொண்டது.
Tags:    

Similar News