ஆன்மிகம்
மாட்டு பொங்கல் விழாவின்போது வழிபாடு நடத்தப்படும் சன்னியாசி கல் உள்ள பகுதியை படத்தில் காணலாம்.

மாட்டு பொங்கல் விழாவில் வினோத வழிபாடு

Published On 2021-01-15 04:12 GMT   |   Update On 2021-01-15 04:12 GMT
தர்மபுரி மாவட்டத்தில் மோதூர் பகுதியில் மாட்டு பொங்கல் விழாவின் போது இந்த வினோத வழிபாடு இப்போதும் தொடர்வது குறிப்பிடத்தக்கது.
தர்மபுரி மாவட்டத்தில் மிகவும் பழமை வாய்ந்த வரலாற்று முக்கியத்துவம் கொண்ட பகுதிகளில் ஒன்றாக இருப்பது மோதூர் கிராமம். இந்த பகுதி கடந்த 2,500 ஆண்டுகளுக்கு முன்பு சங்க கால அதியமான் மன்னர்களின் ஆட்சி மையமாக விளங்கியது.

இந்த பகுதியில் வாழ்ந்த மக்களின் வாழ்வாதாரமாக அந்த காலத்தில் மாடுகள், ஆடுகள் உள்ளிட்ட கால்நடைகள் இருந்தன. இதனால் கால்நடைகளை வளர்ப்பதிலும், அவற்றை நோய்களில் இருந்து பாதுகாப்பதிலும் இந்த பகுதியை சேர்ந்த மக்கள் அதிக கவனம் செலுத்தினார்கள். இந்த பகுதியில் கால்நடைகளுக்கு ஏற்படும் நோய் தாக்குதலை கட்டுப்படுத்துவது பழங்காலத்தில் முக்கிய பிரச்சினையாக இருந்தது.

அந்த காலத்தில் இங்கு வந்து தங்கிய ஒரு சன்னியாசி கால்நடைகளை பாதுகாக்க சில வழிமுறைகளை கூறியுள்ளார். அதன்படி கிராம மக்கள் கூடும் இடத்தில் கற்களை நட்டு வைத்து அவற்றின் மீது மஞ்சள், குங்குமம் கலந்த தண்ணீரை நூற்றுக்கணக்கான குடங்களில் ஊற்றுவார்கள். அப்போது கீழே ஓடும் தண்ணீரை 4 புறமும் மண் கரை அமைத்து தேக்குவார்கள். அங்கு பொங்கல் வைத்து பூஜை நடத்துவார்கள்.

பின்னர் தேக்கி வைக்கப்பட்டிருக்கும் தண்ணீருக்குள் ஆடு, மாடுகளை நடக்க விடுவார்கள். அப்போது அந்த தண்ணீரை தீர்த்தமாக கால்நடைகள் மீது தெளிப்பது வழக்கம். இவ்வாறு செய்யும் போது கால்நடைகளை நோய் தாக்காது என்பது நம்பிக்கை. இந்த வழிபாடு நடத்தப்படும் பகுதியில் நடப்பட்டுள்ள கற்கள் சன்னியாசி கல் என அழைக்கப்படுகிறது. மோதூர் பகுதியில் மாட்டு பொங்கல் விழாவின் போது இந்த வினோத வழிபாடு இப்போதும் தொடர்வது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News