செய்திகள்
தென்ஆப்பிரிக்க அணியின் கேப்டன் பவுமா - வெஸ்ட் இண்டீஸ் அணியின் கேப்டன் பொல்லார்ட்

20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட்: தென்ஆப்பிரிக்கா-வெஸ்ட்இண்டீஸ் அணிகள் இன்று மோதல்

Published On 2021-10-26 03:52 GMT   |   Update On 2021-10-26 03:52 GMT
20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இன்று நடைபெறும் ஆட்டங்களில் தென்ஆப்பிரிக்கா-வெஸ்ட்இண்டீஸ், பாகிஸ்தான்-நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன.
துபாய்:

7-வது 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்து வருகிறது. தற்போது ‘சூப்பர்-12’ சுற்று ஆட்டங்கள் அரங்கேறி வருகிறது. இதில் இன்று (செவ்வாய்க்கிழமை) 2 ஆட்டங்கள் நடக்கின்றன.

இந்திய நேரப்படி மாலை 3.30 மணிக்கு துபாயில் நடைபெறும் லீக் ஆட்டம் ஒன்றில் நடப்பு சாம்பியன் வெஸ்ட்இண்டீஸ் அணி, தென்ஆப்பிரிக்காவை (குரூப்-1) எதிர்கொள்கிறது.

பொல்லார்ட் தலைமையிலான வெஸ்ட்இண்டீஸ் அணி தனது தொடக்க ஆட்டத்தில் இங்கிலாந்துக்கு எதிராக 55 ரன்னில் சுருண்டு மோசமான தோல்வியை சந்தித்தது. உலக கோப்பை போட்டியில் அந்த அணியின் குறைவான ஸ்கோர் இது என்பதால் கடும் விமர்சனத்துக்கு ஆளானது. அதிரடி பட்டாளத்தை கொண்டுள்ள அந்த அணியில் கிறிஸ் கெய்ல் (13 ரன்) தவிர வேறு யாரும் இரட்டை இலக்கத்தை எட்டவில்லை. இதனால் அந்த அணி சரிவில் இருந்து மீண்டு வர வேண்டிய நெருக்கடியில் இருக்கிறது.

தெம்பா பவுமா தலைமையிலான தென்ஆப்பிரிக்க அணி தன்னுடைய முதலாவது ஆட்டத்தில் 5 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவிடம் வீழ்ந்தது. மார்க்ராம் (40 ரன்கள்) மட்டும் நிலைத்து நின்று ஆடினார். தெம்பா பவுமா, குயின்டான் டி காக், வான்டெர் துஸ்சென் உள்ளிட்ட பேட்ஸ்மேன்கள் சோபிக்கவில்லை. பந்து வீச்சில் காஜிசோ ரபடா, அன்ரிச் நோர்டியா, கேஷவ் மகராஜ், தப்ரைஸ் ஷம்சி ஆகியோர் நல்ல நிலையில் உள்ளனர். பேட்ஸ்மேன்கள் தங்கள் பணியை சரியாக செய்தால் அந்த அணி எழுச்சி பெற முடியும். இந்த ஆட்டத்தில் தோல்வியை சந்தித்தால் அரைஇறுதி வாய்ப்பு மங்கும் என்பதால் இரு அணிகளும் வெற்றிக்காக கடுமையாக மல்லுகட்டும். எனவே இந்த ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு குறைவு இருக்காது. ஒட்டுமொத்த சர்வதேச 20 ஓவர் போட்டியில் இரு அணிகளும் இதுவரை 15 முறை நேருக்கு நேர் மோதி இருக்கின்றன. இதில் தென்ஆப்பிரிக்கா 9 ஆட்டத்திலும், வெஸ்ட்இண்டீஸ் 6 ஆட்டத்திலும் வெற்றி பெற்று இருக்கின்றன.



இரவு 7.30 மணிக்கு சார்ஜாவில் நடைபெறும் மற்றொரு ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன் பாகிஸ்தான் அணி, நியூசிலாந்தை (குரூப்-2) சந்திக்கிறது.

பாபர் அசாம் தலைமையிலான பாகிஸ்தான் அணி தொடக்க ஆட்டத்தில் 10 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியாவை பந்தாடிய உற்சாகத்துடனும், உத்வேகத்துடனும் களம் காணுகிறது. அந்த அணியின் பேட்டிங் மற்றும் பந்து வீச்சு வலுவாக இருக்கிறது.

கேன் வில்லியம்சன் தலைமையிலான நியூசிலாந்து அணியில் பேட்டிங்கில் டிவான் கான்வே, மார்ட்டின் கப்தில், கிளென் பிலிப்ஸ், ஜேம்ஸ் நீஷம் ஆகியோரும், பந்து வீச்சில் டிரென்ட் பவுல்ட், டிம் சவுதி, பெர்குசன் ஆகியோரும் பலம் சேர்க்கிறார்கள். பயிற்சி ஆட்டத்தில் முழங்கால் காயம் காரணமாக பேட்டிங் செய்யாத வில்லியம்சன் ஆட முடியாமல் போனால் அந்த அணிக்கு இழப்பாகும். இரு அணிகளும் சமபலம் வாய்ந்தது என்பதால் இந்த ஆட்டத்தில் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது.

இவ்விரு அணிகளும் 20 ஓவர் போட்டியில் இதுவரை 24 முறை நேருக்கு நேர் சந்தித்து இருக்கின்றன. இதில் பாகிஸ்தான் அணி 14 ஆட்டத்திலும், நியூசிலாந்து அணி 10 ஆட்டத்திலும் வெற்றி கண்டு இருக்கின்றன. இந்த இரண்டு ஆட்டங்களையும் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல்கள் நேரடியாக ஒளிபரப்பு செய்கிறது.
Tags:    

Similar News