அழகுக் குறிப்புகள்
வசந்த காலமும் லினன் துணிகளும்

வசந்த காலமும் லினன் துணிகளும்

Published On 2022-03-19 02:34 GMT   |   Update On 2022-03-19 02:34 GMT
பொதுவாக ஆண்களுக்கு அலுவலகம் போட்டுச் செல்லவும் வீட்டில் போட்டுக் கொள்ளவும் விழாக்களுக்கு அணிந்து கொள்ளவும் ஏற்ற ஷர்ட்களாக லினென் இருப்பது குறிப்பிடத்தக்கது.
குளிர்காலம் முடியத் தொடங்கி வரும் வசந்த காலம் மற்றும் வெயில் காலம் முழுவதும் நமக்கு அணிந்துகொள்ள வசதியாக இருக்கும் ஓர் துணி வகைதான் லினென். லினென் துணிகள் பார்ப்பதற்கு அழகாகவும் கம்பீரமான தோற்றத்தை கொடுக்க கூடியதாகவும் நளினமாகவும் மென்மையாகவும் இருக்கக் கூடியவை. பொதுவாக ஆண்களுக்கு அலுவலகம் போட்டுச் செல்லவும் வீட்டில் போட்டுக் கொள்ளவும் விழாக்களுக்கு அணிந்து கொள்ளவும் ஏற்ற ஷர்ட்களாக லினென் இருப்பது குறிப்பிடத்தக்கது. லினென் துணிகளின் நன்மைகளைப் பற்றி கீழ்வருமாறு பார்ப்போம்.

லினனின் நீடித்து உழைக்கும் தன்மை:

இயற்கையாகக் கிடைக்கும் தாவர இழைகளில் மிகவும் வலுவானது லினென். துணியை துவைக்க துவைக்க மேலும் இறுகி மேலும் வலுவாக மாறுகிறது. இந்த இழைகள் கிமு 8000 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே உபயோகத்தில் இருந்து வந்ததாக தெரிகிறது. எகிப்திய கரன்சி லினென் இழைகளை கொண்டு பயன்படுத்தப்பட்டது இதற்கு சான்றாகும்.

லினென் இழைகள் சுற்றுச்சூழலுக்கு உகந்தது:

ஆளி (பிளாக்ஸ்) செடிகளின் தாள்களில் இருந்து தான் லினென் இழைகள் தயாரிக்கப்படுகின்றன. இந்த ஆளி செடிகள் சுமாரான மண்களிலும், எந்த விதமான உரமும் இன்றி வளரக்கூடியதும், இதற்கு அதிகமான தண்ணீரும் தேவையில்லை. பருத்தி செடிகளை விட இதற்கு தண்ணீர் குறைவாக தேவைப்படுவதுடன் பராமரிப்பும் குறைவாகவே தேவைப்படும். இந்த ஆளி செடியின் எல்லா பகுதிகளுமே உபயோகப்படுத்தப்படுகிறது. இந்த ஆளி விதைகள் நம் உடலுக்கு ஆண்டி ஆக்சிடென்டாகவும், மலமிளக்கியாகவும் பயன்படுகிறது. இந்த ஆளி விதைகளில் இருந்து எடுக்கப்படும் எண்ணெய் பல உணவு தயாரிப்பு நிறுவனங்களில் பயன்படுத்தப்படுகிறது. மேலும் இந்த லிெனன் இழைகள் இயற்கையாய் மக்கக்கூடிய தன்மை கொண்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.

லினன் துணிகள் காற்றோட்டம் கொண்டவை:

லினன் துணிகள் காற்றோட்டம் கொண்டவையாகவும் ஈரப்பதத்தை உறிந்துக் கொள்ளக் கூடியதாகவும் இருக்கிறது. இந்த ஆடைகளை நாம் அணியும் போது நம் உடலுக்கு காற்றோட்டம் நன்றாக கிடைக்கிறது என்பதால் நம் உடலிலிருந்து வெளியாகும் வெப்பம் எளிதாக இவ்வாறு கடந்துவிடும். அதேபோல் வெளியிலிருந்த காற்றும் ஆடைக்குள் நுழைந்து உடலை தழுவும் பொது குளிர்ச்சியாக இருக்கும். இந்த துணிகள் காற்றிலுள்ள ஈரப்பதத்தை அதிக அளவில் உறிந்து கொள்ளக் கூடியதாய் இருந்தாலும் ஈரமாக உணரச் செய்வதில்லை. எனவே இந்த துணி நல்ல வெயில் காலங்களிலும் நாம் வியர்வைக் கறையின்றி அணிந்து கொள்ள வசதியாக இருக்கிறது.

லினென் துணிகளில் பூச்சி அண்டுவதில்லை:

இயற்கையான லினென் இழைகள் பூச்சிகள் மற்றும் பூஞ்சைகளை எதிர்க்கும் ஆற்றல் கொண்டதாக இருக்கிறது. எனவே நாம் நீண்ட காலம் உபயோகிக்காமல் வைத்திருந்தாலும் புதிது போலவே தோற்றம் அளிப்பதாக இருக்கிறது. துர்நாற்றமும் இதிலிருந்து வெளிப்படுவதில்லை.

லினென் துணிகள் விலை உயர்ந்தவை:

ஆளி செடிகளின் தாள்கள் தரையிலிருந்து முழு நீளத்துடன் அறுந்து விடாமல் உருவப்படுகிறது. பிறகு இந்தச் செடிகள் வயல்களில் பரப்பி வைக்கப்பட்டு காய வைக்கப்படுகிறது. அப்படிக் காய வைக்கும்பொழுது இந்த இழைகள் மென்மையாக மாறுகிறது. பிறகு இந்தத் தாள்கள் சேகரிக்கப்பட்டு மெஷினில் சுருட்டப்பட்டு மூன்று மாதங்களுக்கு மேலாக சேமிக்கப்படுகிறது. இந்த மூன்று மாத காலத்தில் இந்த இழைகள் மேலும் மென்மையாக மாறியபின் அவை முறுக்கப்பட்டு பின்பு சுழலச் செய்யும் தொழில்நுட்பம் மூலம் இழைகளாக பிரிக்கப்படுகின்றது. ஆளி செடியிலிருந்து இழைகளை பிரிக்கும் தொழில்நுட்பம் சற்றே சற்று கடினமானதாக இருப்பதால் இந்த துணிகள் விலை உயர்ந்ததாக இருக்கிறது.

லினன் துணிகளில் ஆண்கள் பெண்கள் அணிந்து கொள்ளும் வகையில் ஷாட்டுகள், டீ சர்ட்கள், ஜாக்கெட்டுகள், டாப் என்று பலவித ஆடைகள் உள்ளன. இவை அணிந்து கொள்பவர்களுக்கு வசதியாக மற்றும் பார்ப்பதற்கு கம்பீரமாகவும் அழகாகவும் தோற்றமளிக்க உதவுகிறது. லினென் துணிகளில் புடவைகளும் கூட இந்திய சந்தைகளில் அதிக அளவில் கிடைக்கிறது. இந்த புடவைகளும் நீடித்து உழைக்க கூடியதாகவும் லேசான ஒரு விரைப்பு தன்மை கொண்டதாகவும் கஞ்சி போடாமலே அணியக் கூடியதாகவும் மிகவும் கவர்ச்சியாகவும் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News