செய்திகள்
இந்தியா அமெரிக்கா

இந்தியாவுக்கு ரூ.660 கோடிக்கு விமான உதிரி பாகங்களை விற்க அமெரிக்கா ஒப்புதல்

Published On 2020-10-03 02:06 GMT   |   Update On 2020-10-03 02:06 GMT
இந்திய விமானப்படைக்கு சொந்தமான மிகப்பெரிய சரக்கு விமானமான ‘சி130 ஜே சூப்பர் ஹெர்குலஸ்’ விமானங்களுக்கு தேவையான உதிரி பாகங்களை இந்தியாவுக்கு விற்பனை செய்ய அமெரிக்காவின் ராணுவ தலைமையகமான பென்டகன் ஒப்புதல் அளித்துள்ளது.
வாஷிங்டன் :

இந்திய விமானப்படைக்கு சொந்தமான மிகப்பெரிய சரக்கு விமானமான ‘சி130 ஜே சூப்பர் ஹெர்குலஸ்’ விமானங்களுக்கு தேவையான உதிரி பாகங்களை இந்தியாவுக்கு விற்பனை செய்ய அமெரிக்காவின் ராணுவ தலைமையகமான பென்டகன் ஒப்புதல் அளித்துள்ளது. இதற்காக, இரு நாடுகளுக்கும் இடையில் 90 மில்லியன் டாலர் (இந்திய மதிப்பில் சுமார் ரூ.660 கோடியே 50 லட்சத்து 55 ஆயிரம்) ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அமெரிக்க ராணுவ பாதுகாப்பு ஒத்துழைப்பு நிறுவனம் இந்த தகவலை அமெரிக்க நாடாளுமன்றத்துக்கு தெரிவித்துள்ளது. இந்த ஒப்பந்தம் இந்திய-அமெரிக்கா இடையிலான பாதுகாப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்துவதன் மூலம் அமெரிக்காவின் வெளியுறவு கொள்கை மற்றும் தேசிய பாதுகாப்பு உறுதி செய்யப்படும் என அமெரிக்க ராணுவ பாதுகாப்பு ஒத்துழைப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்த ஒப்பந்தத்தின்படி, சி 130 ஜே சூப்பர் ஹெர்குலஸ் விமானத்தை பழுது பார்க்க அமெரிக்கா இந்தியாவுக்கு உதவும். சி 130 ஜே சூப்பர் ஹெர்குலஸ் விமானத்தை பயன்படுத்தும் 17 நாடுகளில் இந்தியாவும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது. இந்திய விமானப்படையில் சி 130 ஜே சூப்பர் ஹெர்குலஸ் விமானங்கள் 5 இருக்கின்றன. 6-வது விமானத்தை வாங்கவும் இந்தியா திட்டமிட்டுள்ளது.
Tags:    

Similar News