செய்திகள்
கொரோனா வைரஸ்

கொரோனா நோய் எதிர்ப்பாற்றல் சக்தி- மாநில அளவில் விருதுநகர் மாவட்டம் முதலிடம்

Published On 2021-10-09 09:56 GMT   |   Update On 2021-10-09 09:56 GMT
மாநில அளவில் கொரோனா நோய் எதிர்ப்பாற்றல் சக்தி கணக்கீட்டில் விருதுநகர் மாவட்டம் முதல் இடம் பெற்றுள்ளதாக கலெக்டர் மேகநாத ரெட்டி கூறினார்.
விருதுநகர்:

விருதுநகர் மாவட்ட கலெக்டர் மேகநாத ரெட்டி கூறியதாவது:-

விருதுநகர் மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசி போட தகுதியுள்ள 15 லட்சம் பேர் இருக்கும் வகையில் இதுவரை 13 லட்சம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. முதல் தவணை தடுப்பூசி 64 சதவீதம் பேருக்கும், 2-வது தவணை தடுப்பூசி 22.5 சதவீதம் பேருக்கும் போடப்பட்டுள்ளது. அதாவது மீதமுள்ளோருக்கும் தடுப்பூசி போட அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்நிலையில் சமீபத்தில் தமிழக அரசு ஜூலை, ஆகஸ்டு ஆகிய மாதங்களில் கொரோனா தடுப்பூசி போட்டவர்களிடையே நோய் எதிர்ப்பாற்றல்சக்தி குறித்த கணக்கெடுப்பு நடத்தியது. இதில் விருதுநகர் மாவட்டம் 84 சதவீதம் பேர் எதிர்ப்பாற்றல் சக்தி பெற்றுள்ளதாக தெரியவந்த நிலையில் மாநில அளவில் விருதுநகர் மாவட்டம் முதலிடத்தை பெற்றுள்ளது.

இதற்காக தடுப்பூசி முகாம் நடத்த ஒத்துழைப்பு அளித்த அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். நாளை (ஞாயிற்றுக்கிழமை) மாவட்டம் முழுவதும் 1,052 இடங்களில் தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட உள்ளன. அதிலும் குறிப்பாக இந்த முகாம்கள் அனைத்தும் வாக்குச்சாவடி மையங்களில் நடத்தப்படுவதால் அனைத்து பொது மக்களும் எளிதாக மையங்களுக்கு சென்று தடுப்பூசி போட வாய்ப்புள்ளது.

தற்போதைய நிலையில் 1 லட்சத்து ஆயிரம் தடுப்பூசி மருந்துடோஸ் கையிருப்பு உள்ள நிலையில் 1 லட்சம் பேருக்கு தடுப்பூசி போட இலக்கு நிர்ணயிக்கப்பட்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதுவரை இல்லாத அளவுக்கு இந்த முறை தமிழக அரசு அதிகபட்ச தடுப்பூசி மருந்தை நமக்கு வழங்கியுள்ளது. எனவே இந்த வாய்ப்பை பயன்படுத்தி மாவட்டத்தில் ஒரு லட்சம் பேருக்கு தடுப்பூசி போட திட்டமிடப்பட்டுள்ளது.

எனவே நாளை மாவட்ட மக்கள் அனைவரும் தங்கள் அருகில் உள்ள தடுப்பூசி மையத்திற்கு சென்று தடுப்பூசி போடாதவர்கள் தடுப்பூசி போட்டுக்கொள்ளுமாறு வேண்டுகிறேன்.

இதன்மூலம் இம்மாவட்டம் கொரோனா இல்லாத மாவட்டமாக உருவாக மாவட்ட மக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டுகிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News