ஆன்மிகம்
மயிலாடுதுறை மயூரநாதர் கோவிலில் திருக்கல்யாணம் நடந்த போது எடுத்த படம்.

மயிலாடுதுறை மயூரநாதர் கோவிலில் திருக்கல்யாணம்

Published On 2021-11-15 07:57 GMT   |   Update On 2021-11-15 07:57 GMT
மயிலாடுதுறை மயூரநாதர்கோவிலில் நடந்த திருக்கல்யாணம் நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
மயிலாடுதுறையில் அமைந்துள்ள மயூரநாதர்கோவில் நாயன்மார்கள் திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர் ஆகியோரால் பாடல்பெற்ற பழைமை வாய்ந்த புகழ்பெற்ற கோவிலாகும். மயிலாடுதுறையில் துலாக்கட்ட காவிரிக்கரையில் புனித நீராடி அம்மன் மயிலாக இறைவனை பூஜித்ததாகவும், மயிலாடுதுறை துலாக்கட்ட காவிரியில் ஐப்பசி மாதத்தில் கங்கை முதலான புண்ணிய நதிகள் நீராடி தங்கள் பாவச்சுமைகளை போக்கி கொண்டதாகவும் தலபுராணத்தில் கூறப்பட்டுள்ளது.

இதனை முன்னிட்டு ஐப்பசி மாதத்தில் கடைசி 10 நாட்கள் மயிலாடுதுறையில் அமைந்துள்ள அனைத்து கோவில்களின் சாமி மற்றும் அம்மன் காவிரிக்கரைக்கு எழுந்தருளி தீர்த்தவாரி நடைபெறுவது வழக்கம்.

அதன்படி இந்த ஆண்டு மயூரநாதர் கோவில், வதாண்யேஸ்வரர் கோவில், படித்துறை விஸ்வநாதர் கோவில், அய்யாரப்பர் கோவில், காசி விஸ்நாதர்கோவில் உள்ளிட்ட கோவில்களில் கடந்த 7-ந் தேதி கொடியேற்றத்துடன் துலா உற்சவ விழா தொடங்கியது.

விழாவின் முக்கிய நிகழ்ச்சியான திருக்கல்யாணம் நேற்று முன்தினம் இரவு நடந்தது.

அப்போது மயூரநாதர், அவையாம்பிகையுடன் வசந்த மண்டபத்தில் எழுந்தருளினார். அங்கு, பெண்கள் சீர்வரிசை எடுத்து வந்தனர். தொடர்ந்து ஊஞ்சல் உற்சவம் நடைபெற்றது. சிவாச்சாரியார், வேத விற்பன்னர்கள் மந்திரங்கள் ஓத திருவாவடுதுறை ஆதீன குருமகா சன்னிதானம் அம்பலவாண தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் முன்னிலையில் திருக்கல்யாண விழா நடந்தது. பின்னர் சிறப்பு தீபாராதனைகள் நடைபெற்றது. நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
Tags:    

Similar News