செய்திகள்
சம்பவம் நடந்த பகுதி

பிரான்ஸ் துப்பாக்கி சூடு- குடும்ப சண்டையை தடுக்க சென்ற 3 போலீஸ்காரர்கள் சுட்டுக்கொலை

Published On 2020-12-23 10:18 GMT   |   Update On 2020-12-23 10:18 GMT
பிரான்சில் குடும்ப சண்டையை தடுக்க சென்ற 3 போலீஸ்காரர்கள் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
பாரிஸ்:

மத்திய பிரான்சின் செயின்ட்ஜஸ்ட் அருகே, ஒரு கிராமத்தில் உள்ள ஒரு வீட்டில் சண்டை நடப்பதாகவும், உள்ளே இருந்து கூக்குரல் கேட்பதாகவும் இன்று அதிகாலையில் காவல்துறைக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து அங்கு போலீசார் சென்று சண்டை நடந்த வீட்டை சுற்றி வளைத்தனர். அப்போது ஒரு பெண் அந்த வீட்டின் கூரை மீது நின்று தன்னை காப்பாற்றும்படி கதறி உள்ளார்.

அவரை போலீசார் காப்பாற்ற முயன்றனர். அப்போது அந்த வீட்டில் இருந்த சுமார் 48 வயது மதிக்கத்தக்க நபர், திடீரென போலீசாரை நோக்கி துப்பாக்கியால் சுட்டார். இதில் 3 போலீஸ்காரர்கள் உயிரிழந்தனர். ஒருவர் காயமடைந்தார். அத்துடன் அந்த நபர், தனது வீட்டிற்கும் தீ வைத்தார். வீட்டின் கூரையில் நின்றிருந்த பெண்ணை போலீசார் மீட்டனர். 

தாக்குதல் நடத்திய நபர், சிறிது நேரத்தில் அவரது காருக்குள் இறந்து கிடந்தார். அவர் தற்கொலை செய்திருக்கலாம் என கூறப்படுகிறது. குடும்ப சண்டையை தடுக்க சென்ற போலீஸ்காரர்கள் கொல்லப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

பொதுமக்களை காப்பாற்றும்  முயற்சியில் உயிர்த்தியாகம் செய்த போலீஸ்காரர்களின் குடும்பத்தினருக்கு அதிபர் இம்மானுவேல் மேக்ரான் இரங்கல் தெரிவித்துள்ளார்.
Tags:    

Similar News