செய்திகள்
எடப்பாடி பழனிசாமி

விவசாயிகளுக்கான நிவாரணத்தை ரூ.40 ஆயிரமாக உயர்த்த வேண்டும்- எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள்

Published On 2021-11-23 08:01 GMT   |   Update On 2021-11-23 08:01 GMT
மழையினால் பாதிக்கப்பட்டுள்ள மாவட்டங்களில் உள்ள குடும்ப அட்டைதாரர்களுக்கு, வாழ்வாதார உதவியாக ரூ.5,000 கொடுக்க வேண்டும் என எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
சென்னை:

எதிர்க்கட்சி தலைவரும், முன்ளாள் முதல்-அமைச்சருமான எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறி இருப்பதாவது:-

தமிழ்நாட்டில் கடந்த 15 நாட்களாக, குறைந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலத்தின் காரணமாக கனமழை பெய்து வருகிறது. தமிழகத்தின் பல மாவட்டங்கள் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளன.

அ.தி.மு.க. சார்பில் சென்னை மாநகர், சென்னை புறநகர் மற்றும் டெல்டா மாவட்டங்களில் மழை நீர் சூழ்ந்து மூழ்கிய இடங்களை நேரில் பார்வையிட்டதோடு, பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகளும் வழங்கப்பட்டன. மேலும், பாதிக்கப்பட்ட மாவட்டங்களில், கழகத்தில் பல்வேறு நிலைகளில் பணியாற்றி வரும் நிர்வாகிகளும், கழக சட்டமன்ற உறுப்பினர்களும் நிவாரண உதவிகளை வழங்கி வருகின்றனர்.

மிக கனமழையினால், மாநிலத்தின் அனைத்து நீர்நிலைகளும் முழு கொள்ளளவை எட்டி உள்ளது. அணைகளில் இருந்தும், ஏரிகளில் இருந்தும் உபரி நீர் அப்படியே ஆறுகளில் திறந்துவிடப்படுவதால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில், வேளாண் நிலங்கள், குடியிருப்பு பகுதிகள், சாலைகள் நீரில் மூழ்கி உள்ளதோடு, தரைப்பாலங்கள், சிறு சிறு தடுப்பணைகள் அடித்துச் செல்லப்பட்டுள்ளன.

நான், பொதுமக்களையும், விவசாயிகளையும் நேரடியாக சந்தித்த போது, அவர்கள் தெரிவித்த முக்கியமான கருத்துக்கள் வருமாறு:-

* தமிழ்நாடு முழுவதும் லட்சக்கணக்கான ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த நெற்பயிற்கள் நீரில் மூழ்கி பாதிப்படைந்துள்ளன.

* மேலும், வாழை, மரவள்ளிக்கிழங்கு, மக்காச் சோளம், கம்பு உள்ளிட்ட பிற பயிர் வகைகளும் பெருமளவு பாதிப்படைந்துள்ளன. இதற்கான நிவாரணம் இதுவரை அறிவிக்கப்படவில்லை.

* யூரியா உரங்கள் வரலாறு காணாத உச்ச விலைக்கு விற்கப்படுகின்றன.

* விவசாயத் தொழிலாளர்களுக்கான கூலி உயர்வு, டீசல் விலை உயர்வின் காரணமாக, வேளாண் செலவுகள் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு 50 சதவீதம் முதல் 75 சதவீதம் வரை உயர்ந்துள்ளது.



* மேலே குறிப்பிடப்பட்டுள்ள பயிர் உற்பத்திக்கான செலவுகள் உயர்ந்துள்ளதால் அரசு நிவாரணமாக அறிவித்துள்ள, முழுமையாக சேதமடைந்த நெற்பயிருக்கு ஹெக்டேர் ஒன்றுக்கு ரூ.20,000 என்பதை உயர்த்தி, ஹெக்டேருக்கு ரூ.40,000ஆகவும், நெற்பயிர் மறுசாகுபடி செலவு ஹெக்டேர் ஒன்றுக்கு ரூ.6,038 என்பதை, ரூ.12,000 ஆக உயர்த்தி வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தனர்.

* இதுவரை பாதிக்கப்பட்ட பகுதிகள் முழுவதையும் மாநில அரசு அதிகாரிகளோ, அமைச்சர் பெருமக்களோ நேரடியாகச் சென்று ஆய்வு மேற்கொள்ளவில்லை.

*பாதிப்படைந்த வீடுகள், கால்நடைகள் போன்றவைகள் கணக்கெடுக்கப்படவில்லை; நிவாரணமும் இதுவரை அறிவிக்கப்படவில்லை; சுகாதாரமான குடிநீர் வழங்கப்படவில்லை.

*அரசு வெள்ள நிவாரணத்திற்கு ஒதுக்கியுள்ள 300 கோடி ரூபாய், சாலைகள் மற்றும் வடிகால்களை சீரமைக்க மட்டுமா? அல்லது விவசாயிகளுக்கு வழங்கப்படும் நிவாரணத்தையும் உள்ளடக்கியதா என்று தெளிவாகக் குறிப்பிடவில்லை.

* மேலும், முந்தைய ஆட்சியில் நிவாரணத் தொகையாக அதிகபட்சம் 2 ஹெக்டேர் என்று இருந்ததை மாற்றி, மழை வெள்ளத்தால் சேதமடைந்த நிலப்பரப்பு முழுவதற்கும் நிவாரணம் வழங்கப்படும் என்று அறிவித்திருந்தது. ஆனால், இப்போது இந்த அரசு அறிவித்த நிவாரண அறிவிப்பில் எவ்வளவு நிலம் என்று தெளிவாகக் குறிப்பிடவில்லை.

*இதுவரை, சென்னையைத் தவிர மற்ற மாவட்டங்களில் மருத்துவ முகாம்களோ, கால்நடைகளுக்கான மருத்துவ முகாம்களோ நடத்தப்படவில்லை. முக்கியமாக, கால்நடைகளுக்கு மருத்துவ முகாம் நடத்த வேண்டும்.

* இன்னும் வெள்ள நீர் வீடுகளைச் சூழ்ந்துள்ளதால், வெள்ளம் பாதித்த பெரும்பான்மையான மாவட்டங்களைச் சேர்ந்த மக்கள் தங்களுக்கு வெள்ள நிவாரணமாக, அம்மா அரசால் கடந்த முறை வழங்கியது போல, வாழ்வாதார உதவித்தொகையையும், அத்தியாவசியப் பொருட்களையும் வழங்க வேண்டும் என்றும் கோரினர்.

இந்த தி.மு.க. அரசு, கீழே குறிப்பிடப்பட்டுள்ளவைகளை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.

* நெற்பயிர் ஹெக்டேர் ஒன்றுக்கு ரூ.40,000 நிவாரணமாக உயர்த்தி வழங்க வேண்டும்.

* மறுசாகுபடி செலவிற்காக, ஹெக்டேர் ஒன்றுக்கு ரூ.12,000 நிவாரணமாக உயர்த்தி வழங்க வேண்டும்.

* பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளுக்கு சுகாதாரமான குடிநீரை உடனடியாக வழங்க வேண்டும். அத்தியாவசியப் பொருட்களின் விலைகளையும், முக்கியமாக தக்காளி, வெங்காயம் போன்ற காய்கறிகளின் விலைகளையும் கட்டுக்குள் கொண்டுவர வேண்டும்.

*மழையினால் பாதிக்கப்பட்ட ஊரகச் சாலைகள் உட்பட அனைத்து சாலைகளையும் உடனடியாக சீர் செய்ய வேண்டும்.

*மறு உழவுப் பணிகளுக்குத் தேவையான விதைகள், உரங்கள் போன்றவை நியாயமான விலையில், தட்டுப்பாடின்றி கிடைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

*எந்தவிதமான நிபந்தனையுமின்றி கூட்டுறவுக் கடன் சங்கங்கள் மூலம் விவசாயிகள் சுணக்கமின்றி விவசாயப் பணிகளை மேற்கொள்ள வட்டியில்லா பயிர்க்கடன் வழங்க வேண்டும்.

*மழையினால் சேதம் அடைந்த வீடுகள், உயிரிழந்த கால்நடை மற்றும் கோழிகளுக்கான இழப்பீட்டினை உடனடியாக அறிவித்து வழங்க வேண்டும்.

* பாதிக்கப்பட்ட இடங்களில் உடனடியாக மருத்துவ முகாம்களை நடத்தி, மக்களுக்கு சிகிச்சை அளித்திட வேண்டும். மேலும், கால்நடைகளுக்கும் மருத்துவ முகாம் நடத்திட வேண்டும்.

*மழையினால் பாதிக்கப்பட்டுள்ள மாவட்டங்களில் உள்ள குடும்ப அட்டைதாரர்களுக்கு, வாழ்வாதார உதவியாக ரூ.5,000 கொடுக்க வேண்டும். அத்தியாவசியப் பொருட்களை வழங்க வேண்டும்.

இந்த தி.மு.க . அரசு செய்யத்தவறியதாக நாங்கள் எதைக் கூறினாலும், இப்போதுதான் ஆட்சிக்கு வந்ததாகக் கூறுகின்றனர். இவர்கள் ஆட்சி அதிகாரத்தில் இருந்தவர்கள்தான். ஏற்கெனவே, அமைச்சர்களாக இருந்தவர்கள்தான் இப்போதும் உள்ளனர்.

இனியாவது இந்த அரசு விழித்துக் கொண்டு, இயற்கைப் பேரிடர் காலங்களில் அ.தி.மு.க. அரசு எப்படி திறம்பட செயலாற்றி, மக்களின் துயரைப் போக்கியதோ, அப்படி உடனடியாக நிவாரண நடவடிக்கைகளை மேற்கொண்டு இயல்பு வாழ்க்கைக்குக் கொண்டு வர வேண்டும்.

இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

Tags:    

Similar News