செய்திகள்
கனிமொழி

மு.க.ஸ்டாலின் ஆட்சிக்கு வர பெண்கள் பாடுபட வேண்டும்- கனிமொழி எம்.பி. பேச்சு

Published On 2021-03-03 08:09 GMT   |   Update On 2021-03-03 08:09 GMT
ஆட்சிப் பொறுப்பில் இருந்தாலும் ஆட்சிப் பொறுப்பிலே இல்லாவிட்டாலும் எப்பொழுதும் மக்களோடு பயணிக்கக் கூடிய ஒரு தலைவர் மு.க. ஸ்டாலின் என கனிமொழி எம்.பி. பேசினார்.
சென்னை:

மு.க. ஸ்டாலின் பிறந்தநாள் விழா தி.மு.க. மகளிரணி சார்பில் அறிவாலயம் கலைஞர் அரங்கத்தில் நடந்தது. இதில் மகளிரணிச் செயலாளரும், தி.மு.க. மக்களவை குழுத் துணைத்தலைவருமான கனிமொழி எம்.பி. பேசியதாவது:-

கடந்த 10 ஆண்டுகளில் தமிழகம் எந்த துறையை எடுத்துக்கொண்டாலும் வீழ்ச்சியை நோக்கி தான் போய்க்கொண்டிருக்கிறது. தமிழகத்தில் மு.க.ஸ்டாலின் எல்லா பகுதிகளுக்கும் சென்று உங்கள் தொகுதியில் ஸ்டாலின் என்ற நிகழ்ச்சியை நடத்திக் கொண்டிருக்கிறார். தமிழகத்திலே தொடர்ந்து மக்களை சந்திக்க கூடிய தலைவர் ஒருவர் இருக்கிறார் என்றால் அவர் மு.க. ஸ்டாலின் தான்.

ஆட்சிப் பொறுப்பில் இருந்தாலும் ஆட்சிப் பொறுப்பிலே இல்லாவிட்டாலும் எப்பொழுதும் மக்களோடு பயணிக்கக் கூடிய ஒரு தலைவர் மு.க. ஸ்டாலின்.

இந்த தேர்தல் என்பது எல்லோரையும் விட பெண்களுக்கு முக்கியமான தேர்தல். பெண்கள் இந்த தேர்தலிலே மிக முக்கியமான பங்காற்ற வேண்டும். ஏனென்றால் இத்தனை ஆண்டுகள் நாம் போராடி பெற்றிருக்கக் கூடிய அத்தனை உரிமைகளையும் இழக்கக்கூடிய அந்த அச்சுறுத்தல் வரக்கூடிய ஒரு இடத்தில் நாம் நின்று கொண்டிருக்கிறோம். இந்த தேர்தலில் நாம் வெற்றி பெற்றாக வேண்டும். ஏனென்றால் தமிழகத்தையும் இந்திய நாட்டையும் மீட்டெடுக்க வேண்டிய கட்டாயத்தில் கட்டுப்பாட்டோடு நாம் நின்று கொண்டிருக்கிறோம்.

விவசாயிகள் பாதுகாக்கப்படவேண்டும். தொழிலாளர்கள் பாதுகாக்கப்பட வேண்டும். விவசாயிகளுக்கு எதிரான சட்டங்கள் தொழிலாளர்களுக்கு எதிரான சட்டங்கள் மொழிக்கு எதிரான சட்டங்கள் கருத்து சுதந்திரத்திற்கு எதிரான சட்டங்கள் என்று எல்லா உரிமைகளையும் வாழக்கூடிய உரிமைகளைக் கூட தட்டிப் பறிக்கக் கூடிய ஒரு நிலையை நாம் தினம் தினம் பார்த்துக் கொண்டிருக்கிறோம்.

ஒவ்வொரு முறையும் மத்திய அரசாங்கம் தவறு செய்யும் பொழுது எழக்கூடிய முதல் குரல் தளபதியின் குரல். அதேபோல இங்கே இருக்கக்கூடிய மக்களின், பெண்களின் உரிமைகள் காப்பாற்றப்பட வேண்டும் என்றால் தளபதி ஆட்சிப் பொறுப்பில் தமிழகத்திற்கு அரணாக இருக்க வேண்டும் என்பதை புரிந்து கொண்டு இந்த தேர்தலிலே நாம் பணியாற்ற வேண்டும்.

அதனால் இந்தத் தேர்தலின் வெற்றியை நிர்ணயிக்கப் போவது நாம். இந்த தேர்தலில் செய்ய வேண்டிய பணிகளை செய்யவேண்டிய கடமை உங்களுக்கு இருக்கிறது.

செய்திகளைக் கொண்டு சேர்க்கக் கூடிய கடமையும் நமக்கு இருக்கிறது. உண்மையான பிரசாரத்தை மு.க.ஸ்டாலினின் செய்திகளை கொண்டுபோய் மக்களிடம் சேர்த்து வெற்றியை உறுதிப்படுத்த வேண்டிய கடமை உங்களுக்கு இருக்கிறது. அதுதான் அவருக்கு தமிழகத்துக்கு நாம் தரக்கூடிய மிகப்பெரிய பரிசாக இருக்கும்.

இவ்வாறு கனிமொழி பேசினார்.
Tags:    

Similar News