உள்ளூர் செய்திகள்
புதிய டி.ஐ.ஜி.யாக பொறுப்பேற்றுக்கொண்ட பிரவேஷ்குமார்.

கஞ்சா விற்பனையை முற்றிலும் ஒழிக்க நடவடிக்கை எடுக்கப்படும்- நெல்லை சரக புதிய டி.ஐ.ஜி. பேட்டி

Published On 2022-01-12 11:08 GMT   |   Update On 2022-01-12 11:08 GMT
கஞ்சா விற்பனையை முற்றிலும் ஒழிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என நெல்லை சரக புதிய டி.ஐ.ஜி. பிரவேஷ் குமார் கூறினார்.
நெல்லை:

நெல்லை சரக போலீஸ் டி.ஐ.ஜி.யாக இருந்த பிரவின்குமார் அபிநபு சென்னைக்கு இடமாற்றம் செய்யப்பட்டார்.

இதைத்தொடர்ந்து தஞ்சை சரக டி.ஐ.ஜி.யாக பணியாற்றி வந்த பிரவேஷ் குமார் நெல்லைக்கு இடமாற்றம் செய்யப்பட்டார். அவர் இன்று நெல்லை டி.ஐ.ஜி. அலுவலகத்தில் பொறுப்பேற்று கொண்டார். பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

நெல்லை சரகத்தில் சட்டம்- ஒழுங்கு பிரச்சினைகளுக்கும், ரவுடியிசத்தை ஒழிக்கவும் முக்கியத்துவம் கொடுத்து நடவடிக்கை எடுக்கப்படும். கந்துவட்டி, கட்டப்பஞ்சாயத்தை ஒழிக்கவும் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

ஜாதி மோதல்களை தடுக்க மிகுந்த கவனமுடன் பிரச்சினைகளை கையாண்டு நடவடிக்கை எடுக்கப்படும்.தமிழகம் முழுவதும் கஞ்சா ஒழிப்பு நடவடிக்கைகள் தீவிர மாக நடந்து வருகிறது. 

நான் தஞ்சையில் பணியாற்றிய போது கஞ்சா விற்பவர்களை மட்டுமல்லாது, அவர்களுக்கு சப்ளை செய்யும் முக்கிய புள்ளிகளையும் ஆந்திராவுக்கு சென்று கைது செய்தோம். 

அதேபோல இங்கும் கஞ்சா விற்பவர்களை மட்டுமல்ல, அவர்களுக்கு ‘சப்ளை’ செய்யும் முக்கிய புள்ளிகளையும் கைது செய்து கஞ்சா விற்பனையை முற்றிலும் ஒழிக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

குழந்தைகள் எந்தவிதத்தில் துன்புறுத்தப்பட்டாலும் சம்பந்தப்பட்டவர்கள் மீது தீவிர நடவடிக்கை எடுக்கப்படும்.

காவல் நிலையங்களின் தரத்தை உயர்த்தவும், காவல் நிலையங்களுக்கு என்னென்ன வசதிகள் தேவை என்பதை கேட்டு அவற்றை செய்யவும் உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும். 

நெல்லை சரகம் அமைதி பூங்காவாக திகழ தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

புதிய டி.ஐ.ஜி.யாக பொறுப்பேற்றுள்ள பிரவேஷ் குமார் கடந்த 2014-ம் ஆண்டு குமரி மாவட்ட எஸ்.பி.யாக பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News