ஆன்மிகம்
அருணாசலேஸ்வரர்

அருணாசலேஸ்வரர் கோவிலில் சித்திரை வசந்த உற்சவத்திற்கு பக்தர்கள் அனுமதி ரத்து

Published On 2021-04-19 09:07 GMT   |   Update On 2021-04-19 09:07 GMT
தற்போது கொரோனா வைரஸ் தொற்று அதிகரித்து வருவதால் அருணாசலேஸ்வரர் கோவிலில் சித்திரை வசந்த உற்சவம் பக்தர்களின்றி நடைபெறும் என்று கோவில் நிர்வாகம் சார்பில் திடீரென அறிவிக்கப்பட்டு உள்ளது.
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், சித்திரை மாதத்தில் சித்திரை வசந்த உற்சவம் வெகு சிறப்பாக நடைபெறும். இந்த விழா 10 நாட்கள் நடைபெறும். இந்த ஆண்டிற்கான சித்திரை வசந்த உற்சவ விழா நேற்று தொடங்கியது.

முன்னதாக நேற்று முன்தினம் கோவிலில் 3-ம் பிரகாரத்தில் உள்ள சம்பந்த விநாயகர் சன்னதியில் பந்தக்கால் முகூர்த்தம் நிகழ்ச்சி நடந்தது.

விழாவை முன்னிட்டு கோவிலில் நேற்று முதல் வருகிற 25-ந் தேதி வரை இரவில் மண்டகப்படி நிகழ்ச்சியும், 26-ந்தேதி காலை அய்யங்குளத்தில் தீர்த்தவாரியும், இரவில் கோபால விநாயகர் கோவிலில் மண்டகப்படி நிகழ்ச்சியும், இரவில் கோவில் கொடிமரம் அருகில் மன்மத தகனம் நிகழ்ச்சியும் நடைபெற இருந்தது.

இந்த நிலையில் கோவிலில் சித்திரை வசந்த உற்சவம் பக்தர்களின்றி நடைபெறும் என்று கோவில் நிர்வாகம் சார்பில் திடீரென அறிவிக்கப்பட்டு உள்ளது.

இதுகுறித்து கோவில் இணை ஆணையர் ஞானசேகரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- அருணாசலேஸ்வரர் கோவிலில் ஆண்டு தோறும் சித்திரை வசந்த உற்சவம் விமரிசையாக நடைபெறும். தற்போது கொரோனா வைரஸ் தொற்று அதிகரித்து வருவதால் அரசு வழிகாட்டு நடைமுறையின்படி பக்தர்கள் அனுமதியின்றியும், விழா நாட்களில் யதாஸ்தானத்திலேயே சாமி அபிஷேகம், அலங்காரம் மற்றும் தீபாராதனை நடைபெறும் என்றும் அதில் தெரிவித்து உள்ளார்.
Tags:    

Similar News