செய்திகள்
மதுரை அரசு மருத்துவமனையில் எலும்பு தானம் செய்யும் அறை தயார்ப்படுத்தும் பணி நடைபெறுவதை காணலாம்.

மதுரை அரசு ஆஸ்பத்திரியில் எலும்பு வங்கி

Published On 2021-09-14 04:18 GMT   |   Update On 2021-09-14 04:18 GMT
விபத்தில் கை, கால்கள் முழுவதும் அகற்றப்பட்டால், விளையாடும்போது கை, கால்களில் முறிவு ஏற்பட்டால் எலும்பு வங்கியின் மூலம் மாற்று எலும்புகள் வாங்கி உடலில் பொருத்தி கொள்ள முடியும்.
மதுரை:

தமிழகத்தில் சென்னை, கோவை போன்ற இடங்களில் எலும்பு வங்கிகள் செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில் தென்மாவட்ட மக்கள் பயன்பெறும் வகையில் மதுரை அரசு மருத்துவமனையில் எலும்பு வங்கி அமைக்கப்பட வேண்டும் என பல்வேறு தரப்பினர் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர். அதன் தொடக்கமாக மதுரை அரசு ஆஸ்பத்திரியில் எலும்பு வங்கி அமைப்பதற்கான முதற்கட்ட பணிகள் நேற்று தொடங்கி இருக்கிறது. இதுகுறித்து அரசு ஆஸ்பத்திரி டாக்டர்கள் கூறியதாவது:-

மதுரை அரசு ஆஸ்பத்திரியின் விபத்து மற்றும் அவசர சிகிச்சை பிரிவில் ரூ.40 லட்சம் மதிப்பில் எலும்பு வங்கி அமைப்பதற்கான பணிகள் தொடங்கி இருக்கிறது. இந்த பணிகள் தொடக்கநிலையில் தான் இருக்கிறது.

எலும்பு வங்கி அமையும் வகையில் இடம் மட்டும் தற்போது தேர்வு செய்யப்பட்டுள்ளது. அடுத்ததாக அதிநவீன கருவிகள் வாங்க வேண்டும், அதற்கு அரசிடம் உரிய அனுமதி பெற வேண்டும், அதன்பின்னர் அதற்கான அதிகாரிகள் மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு வந்து ஆய்வு நடத்தி எலும்பு வங்கி அமைப்பதற்கு சாத்தியகூறுகள், பணியாளர்கள் இருக்கிறார்களா? என்பது பற்றி ஆய்வு செய்வார்கள். இதுபோல பல கட்டங்கள் இருக்கிறது.

எப்படியும் எலும்பு வங்கி மக்கள் பயன்பாட்டிற்கு வர இன்னும் சில மாதங்கள் ஆகலாம். இந்த பணிகள் முடிந்து பயன்பாட்டுக்கு வரும் பட்சத்தில் தென்மாவட்டம் முழுவதும் உள்ள மக்கள் மிகுந்த பயன் அடைவார்கள். இறந்த நபர்கள் மற்றும் மூளைச்சாவு அடைந்தவர்களிடம் இருந்து சேகரிக்கப்படும் எலும்புகளைக் கொண்டு மாற்று அறுவை சிகிச்சை மூலம் மறுவாழ்வு அளிக்க முடியும். குறிப்பாக விபத்தில் கை, கால்கள் முழுவதும் அகற்றப்பட்டால், விளையாடும் போது கை, கால்களில் முறிவு ஏற்பட்டால் இந்த எலும்பு வங்கியின் மூலம் மாற்று எலும்புகள் வாங்கி உடலில் பொருத்தி கொள்ள முடியும். ரத்த வங்கியை போன்று இதன் செயல்பாடுகள் இருக்கும்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.
Tags:    

Similar News