ஆன்மிகம்
சுசீந்திரம் தாணுமாலயசாமி கோவில்

சுசீந்திரம் கோவிலில் நான்கு கால சாம பூஜை

Published On 2021-03-12 04:57 GMT   |   Update On 2021-03-12 04:57 GMT
சிவராத்திரியையொட்டி சுசீந்திரம் தாணுமாலயசாமி கோவிலில் நான்கு கால சாம பூஜை நடைபெற்றது. சிவராத்திரியையொட்டி இரவு முழுவதும் கோவில் நடை திறந்தே இருந்தது.
பிரசித்தி பெற்ற சுசீந்திரம் தாணுமாலய சாமி கோவிலில் மகா சிவராத்திரி விழா நேற்று நடந்தது. இரவு 10 மணி அளவில் முதலில் கொன்றையடி நாதருக்கு அபிஷேகமும், தொடர்ந்து மூலவராகிய தாணுமாலய சாமிக்கு அபிஷேகம் நடந்தது.

முதல் கால பூஜை இரவு 11 மணிக்கு தாணுமாலய சாமிக்கு பால், தயிர், நெய், தேன், இளநீர், பன்னீர், விபூதி, பஞ்சாமிர்தம் ஆகிய 8 விதமான பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டு சுவாமிக்கு தங்க அங்கி சாத்தப்பட்டு முதல் கால பூஜை நடந்தது.

நள்ளிரவு 12.30 மணிக்கு இரண்டாவது கால பூஜையும், அதிகாலை 1.30 மணிக்கு 3-வது கால பூஜையும், 2.30 மணிக்கு 4-வது கால பூஜையும் நடந்தது. ஒவ்வொரு கால பூஜை நடக்கும் போதும் அபிஷேகங்கள் செய்யப்பட்டு தங்க அங்கி சாத்தப்பட்டு தீபாராதனை நடந்தது.

இதனை காண நேற்று இரவு முழுவதும் ஏராளமான பக்தர்கள் கோவிலில் திரண்டனர். தொடர்ந்து 4 மணிக்கு கோவிலை சுற்றி ஸ்ரீபலி விழாவும் நடைபெற்றது. சிவராத்திரியையொட்டி இரவு முழுவதும் கோவில் நடை திறந்தே இருந்தது.

தொடர்ந்து சிவாலய ஓட்டத்தில் பங்கேற்று ஓடிய பக்தர்கள் இறுதியாக சுசீந்திரம் தாணுமாலய சாமி கோவிலுக்கு தரிசனம் செய்ய வந்தனர். குமரி மாவட்டத்தை சேர்ந்த பக்தர்கள் மட்டுமல்லாமல் கேரள பக்தர்களும் திரளானோர் சுசீந்திரத்தில் நான்கு கால பூஜையில் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

தாணுமாலயன் தொண்டர் அறக்கட்டளை சார்பில் மூலவராகிய தாணுமாலயன் சன்னதியின் எதிரே உள்ள மகாமண்டபத்தில் பல வண்ண கோலப்பொடியால் நீலகண்ட ரவுத்திரன் உருவத்தை கோலமாக வரைந்து அதனை சுற்றிலும் தோரணங்கள் கட்டி குத்துவிளக்கேற்றி பக்தர்களை பரவசப்படுத்தினர்.

கோவில் நிர்வாகம் சார்பில் கோவில் கலையரங்கத்தில் இரவு முழுவதும் நாட்டியாஞ்சலி நிகழ்ச்சி நடந்தது.
Tags:    

Similar News