ஆன்மிகம்
தஞ்சை பெரியகோவில்

தஞ்சை பெரியகோவில் கும்பாபிஷேகம் எப்போது?: அதிகாரிகள் பதில்

Published On 2019-10-19 04:01 GMT   |   Update On 2019-10-19 04:01 GMT
தஞ்சை பெரியகோவில் கும்பாபிஷேகம் எப்போது? என்ற கேள்விக்கு அதிகாரிகள் பதில் அளித்தனர்.
மாமன்னன் ராஜராஜசோழன் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட தஞ்சை பெரியகோவில் பிரசித்திப்பெற்றது. கட்டிடக்கலைக்கு எடுத்துக்காட்டாக திகழ்வதோடு உலக பாரம்பரிய சின்னமாகவும் விளங்கி வருகிறது. தமிழகம் மட்டும் அல்லாது இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் தினமும் ஏராளமான பக்தர்கள், சுற்றுலா பயணிகள் பெரிய கோவிலுக்கு வந்த வண்ணம் உள்ளனர்.

கோவில் பிரகாரத்தில் பெருவுடையார், பெரியநாயகி அம்மன், வராகி அம்மன், விநாயகர், கருவூரார், முருகன், தட்சிணாமூர்த்தி, நடராஜர் சன்னதி என பல்வேறு சன்னதிகள் தனித்தனியே அமைந்துள்ளன. மத்திய அரசின் தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் உள்ள பெரிய கோவில் கும்பாபிஷேகம் நடத்துவதற்காக திருப்பணிகள் நடைபெற்று வருகின்றன.

மராட்டா கோபுரம், கேரளாந்தகன் கோபுரம், ராஜராஜன்கோபுரம் ஆகியவை ரசாயன கலவை மூலம் சுத்தம் செய்யப்பட்டது. விநாயகர் சன்னதி கோபுரமும் சுத்தம் செய்யப்பட்டு, முருகன் சன்னதி கோபுரம் சுத்தப்படுத்துவதற்காக சாரம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

பெரியகோவில் மூலவர் சன்னதி கோபுரமும் சுத்தப்படுத்தப்பட்டு பணி முடிவடையும் நிலையில் உள்ளது. சன்னதிகளில் உள்ள கோபுரங்களில் சிதிலமடைந்த சிற்பங்களை சுதைவேலைப்பாடுகளுடன் சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்த பணிகளை விரைவில் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்தநிலையில் தஞ்சை பெரியகோவில் கும்பாபிஷேகம் அடுத்த ஆண்டு(2020) பிப்ரவரி மாதம் 5-ந் தேதி நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியானது.

இது குறித்து இந்து சமய அறநிலையத்துறை மற்றும் அரண்மனை தேவஸ்தான அதிகாரிகளிடம் கேட்டபோது, பிப்ரவரி மாதம் ஒரு தேதியில் கும்பாபிஷேகம் நடத்தலாம் என தமிழகஅரசுக்கு கடிதம் எழுதி இருக்கிறோம். அவர்களும் அந்த தேதியை இறுதி செய்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இன்னும் 4, 5 நாட்களில் பெரியகோவில் கும்பாபிஷேகம் நடைபெறும் தேதி அதிகாரப்பூர்வமாக தெரிய வாய்ப்பு இருக்கிறது என்றனர்.
Tags:    

Similar News